Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அன்சைஸ்
அன்சைஸ்
அன்சைஸ்
Ebook249 pages2 hours

அன்சைஸ்

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வாழ்வியல் கட்டுரைகள்!

Languageதமிழ்
PublisherAppu Pradeep
Release dateApr 27, 2013
ISBN9781301342716
அன்சைஸ்

Read more from பா ராகவன்

Related to அன்சைஸ்

Related ebooks

Related categories

Reviews for அன்சைஸ்

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

3 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    good

Book preview

அன்சைஸ் - பா ராகவன்

1 ஸ்வீட் எடு, கொண்டாடு!

சென்னை நகரின் நட்ட நடு செண்டரிலிருந்து கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள சாந்தோம் தேவாலயத்தை ஒட்டிய ஒரு சந்து வரை ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நீதி ஏதும் கேட்கிற உத்தேசமில்லை என்றாலும் நீண்ட நெடும் பயணம்தான். என் மூஞ்சூறு வாகனத்தில் உரிய இடத்தைச் சென்றடைய எப்படியும் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் ஆகலாம் என்று கணக்கிட்டு இருந்தேன்.

ஆனால் என்ன ஆச்சரியம். முதல்வர் போகும் பாதை மாதிரி நான் போன வழியெங்கும் போக்குவரத்து ஒதுங்கி, நகர்ந்து எனக்கு வழிவிட்டு, வியப்பில் திக்குமுக்காடச் செய்துவிட்டது. இதோ, முப்பதே நிமிடங்களில் ராதாகிருஷ்ணன் சாலையைக் கடந்துவிட்டேன். அதோ, கண்ணெட்டும் தொலைவில் கடலோரம்.

பரவசத்தில் வேகத்தை மேலும் கூட்டி, அடுத்த சிக்னல் விழுவதற்குள் கமிஷனர் அலுவலகத்தைத் தொட்டுத் திரும்பிவிடவேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.

ஆனால் இதையெல்லாம் பொதுவாக நாமா தீர்மானிக்க முடியும்? திருவல்லிக்கேணி சாலைத் திருப்பத்தில் ஒரு பிரேக் அடிக்க வேண்டி வந்துவிட்டது. ஏனெனில், எனக்கு முன்னால் அந்தச் சந்திப்பை வந்தடைந்திருந்த சுமார் இருபது வாகனங்கள் அங்கே அணிவகுத்து நின்றுகொண்டிருந்தன. இடப்புறத்து நவீன நகர மையக் கட்டடத்திலிருந்து ஊர்ந்து வந்துகொண்டிருந்த பெரிய பெரிய கார்களும் மெல்ல மெல்ல வந்து கூட்டத்தோடு இணைந்துகொள்ளத் தொடங்கின. சக இரு சக்கர வாகனாதிபதிகள் பிளாட்பாரத்தின்மீது வண்டியை ஏற்றி ஓட்டிச் செல்ல முடியுமா என்று பூகோள ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்க, சம்பவ இடத்திலிருந்து பத்திருபது அடி தொலைவில் நிற்க வேண்டியிருந்த எனக்கு, எதனால் இந்தப் போக்குவரத்துக் கூழ் என்று சரியாகப் பிடிபடவில்லை.

திடீரென்றுதான் அந்தச் சத்தம் எழத் தொடங்கியது.

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

அட்சரம் பிசகாத ஆதி தாளம். சமத்தில் எடுத்து, துரித கதியில் வீறிடத் தொடங்கியது வாத்தியம்.

கூடவே உய்ய் உய்ய்ய்ய் உய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று விண்ணைத் தொடும் உத்தேசமுடன் காற்றைக் கிழித்த விசில் சத்தங்கள்.

இம்மாதிரியான திடீர் ஊர்வலங்களில் முன் அனுபவம் உண்டென்பதால் இஞ்சினை அணைத்துவிட்டுக் காத்திருந்தேன். எப்படியும் பத்து நிமிடங்கள் ஆகும் என்று தோன்றியது. தவிரவும் இது சாதாரண மரணமாகவும் தெரியவில்லை. பிரம்மாண்டமான தேர் உயரத்துக்கு பூ அலங்காரங்கள் எல்லாம் செய்யப்பட்ட வண்டி மெல்ல அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்தது. பொதுவாக மரண ஊர்வலங்களில் பத்துப் பேர் முன்னால், பத்துப் பேர் பின்னால் போவார்கள் (ஆடுவோர், வெடி வைப்போர் தனி) என்றால், இந்த ஊர்வலத்தின் முன்னாலும் பின்னாலும் சுமார் நூறு பேருக்குமேல் இருந்தார்கள்.

இறந்த நபராகப்பட்டவர், வாழ்ந்த காலத்தில் பெரும் வள்ளலாக அல்லது நிறையப் பேரிடம் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிக் கொடுக்காதவராக இருந்திருக்க வேண்டும். ஊர்வல நபர்கள் அத்தனை பேர் முகத்திலும் கட்டுக்கடங்காத சோகம் இருந்தது.

ஆனாலும் என்ன? மரணம் கொண்டாடப்பட வேண்டியது.

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

ஆவர்த்தனம் அதன் உச்சத்தை இன்னும் தொடவில்லை. கலைஞர்கள் அதே வரியைத்தான் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தார்கள். விசில்கள் மட்டும் விதவிதமான சுருதிகளில் எழுந்துகொண்டிருந்தன. இடையிடையே சர வெடிகள் வைத்தார்கள். வெயில் கொளுத்தும் வேளையிலும் இக்கொண்டாட்டங்களுக்கு ஒரு பிரத்தியேக மனநிலை அவசியம் வேண்டும். மனநிலையாகப்பட்டது மானிட்டரால் தீர்மானிக்கப்படும்.

எனக்கு மூன்று மணிக்குள் நான் போய்ச்சேர வேண்டிய இடத்தில் இருந்தாக வேண்டும். ரொம்ப இல்லை என்றாலும் கொஞ்சம் அவசர வேலைதான். மணியைப் பார்த்தேன். இரண்டு ஐம்பது. ஊர்வலம் நகர்ந்து, போக்குவரத்து இயங்க ஆரம்பித்துவிட்டால் ஐந்து நிமிடங்களில் போய்விடக்கூடிய தூரம்தான். ஆனால் இது எப்போது நகரும்?

யாரோ சுக்ரீவன் அல்லது அங்கதன் ஒரு பெரிய கூடையிலிருந்து மாலைகளைக் கண்டபடி பிய்த்துப் பிய்த்து ஊர்வலத்தில் உடன் வந்துகொண்டிருப்போரின் கரங்களில் திணிக்க, சட்டென்று பத்துப் பன்னிரண்டு கரங்கள் விண்ணை நோக்கி உயர்ந்து பூமாரி பொழிந்தன. நியாயமாக தேவர்கள் செய்ய வேண்டிய வேலை. விடுமுறை தினமாகையால் மனிதர்களே செய்யவேண்டியதாகிவிடுகிறது.

இப்போது திருவல்லிக்கேணி சாலையிலிருந்து நகர மையக் கட்டட வளாகத்தை ஒட்டிய சிக்னல் திருப்பத்தை அடைந்து முழுமையாக ஆக்கிரமித்துவிட்ட ஊர்வலம், கடற்கரைச் சாலையை அடையும் திசை நோக்கித் திரும்பிவிட்டது. எனக்குப் பகீர் என்றது.

கடவுளே, யாராவது பெருந்தலைவர் அமரராகிவிட்டாரா என்ன? கடற்கரையில் மிச்சமிருக்கும் சதுர அடிகளில் இன்னொரு சமாதிக்கு ஏற்பாடாகியிருக்கிறதா? காலை செய்தித் தாளில் ஒன்றும் கண்ணில் படவில்லையே?

கையில் இருந்த செங்கோலால் காலில் தட்டிக்கொண்டு அலுப்புடன் நின்றுகொண்டிருந்த போக்குவரத்துக் காவலரிடம் இறந்தது யார் என்று விசாரித்தேன். ‘யாருக்குத் தெரியும்?’ என்றார். அந்த நியாயமான பதிலை அவர் சொன்னதும்தான் சமாதி பயம் நீங்கியது.

வண்டியிலிருந்து இறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு, சற்றே மேடான பகுதியைத் தேடிப்போய் நின்று ஊர்வலத்தைக் கவனிக்கத் தொடங்கினேன். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அவசரங்கள் என்னும் சிந்தனையே உதிக்காத உலக உத்தமர்கள் பங்குபெற்ற ஊர்வலம். வெயிலடிக்கிறதா? சரி. போக்குவரத்து முடங்கிவிட்டதா? சரி. பின்னால் வரும் வாகனங்கள் ஹார்ன் அடிக்கின்றனவா? சரி. எதிர்ப்புற டிராஃபிக்கும் கெடுகிறதா? சரி.

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

ஆதிதாளம் மாறக்கூடாது. அவசரப்பட்டு ஃபரன்ஸ், மோரா என்று முத்தாய்ப்புக்கும் போய்விடக்கூடாது.

ஒரு ஏழெட்டு இளைஞர்கள் ஊர்வலத்தின் முன்னால் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் முயற்சி செய்தால் இவர்களுக்கெல்லாம் தமிழ்த் திரையுலகில் எதிர்காலத்தில் ஒரு நல்ல இடம் கிடைக்கக்கூடும். இப்படி திறமையை எல்லாம் வீதியில் வீணாக்கிக்கொண்டிருக்கிறார்களே என்று கவலையேற்பட்டது.

ஆனால் அப்படியெல்லாம் நினைக்கப்படாது. இது ஒரு மரணம் அளித்த கவலையிலிருந்து உதித்திருக்கும் கலை. ஊர்வலம் பிரதான சாலையில்தான் போய்க்கொண்டிருந்தது என்றாலும், இது தன்னிலை மறந்த ஞானகர்ம சன்னியாச யோகத்துக்கான பைபாஸ் சாலைப் பயணம். சாமானியர்களுக்கு அவ்வளவாகப் புரியாது.

ஏ மனிதனே! இக வாழ்க்கை அவசரங்களை நினைத்து ஏன் பரிதவித்துக் கொண்டிருக்கிறாய்? இதோ இறந்து கிடக்கும் மனிதனைப் பார். இவனை நாங்கள் பரவாழ்க்கைப் பயணத்துக்குப் பார்சல் பண்ணிக்கொண்டிருக்கிறோம். பயணத்துக்கான பாஸ்போர்ட்டில் இவனுடைய அடையாளம் தமிழன் என்று எழுதப்பட்டிருக்கிறது.

எனவே பொதுவெளியை நாரடிப்பது பிறப்புரிமை ஆகிவிடுகிறது. நின்ற இடத்தில் துப்பி, நடந்த வாக்கில் ஒன்றுக்கடித்து, ஒன் வேயில் வண்டி ஓட்டி, பிளாக்கில் டிக்கெட் வாங்கி, லாரியில் பொதுக்கூட்டத்துக்குப் போய், வாங்கிய பிரியாணிப் பொட்டலத்தில் பாதியைச் சாப்பிட்டுவிட்டு மீதியை வீதியில் போட்டு, பாக்கெட் குடிநீரைப் பல்லால் கடித்து இழுத்து, மேலுக்குக் கொஞ்சம் துப்பிக்கொண்டு உள்ளுக்கு மிச்சத்தைத் தள்ளிவிட்டு -

அனைத்தையும் சரியாகச் செய்து முடித்து அடங்கியிருக்கிறான் இம்மனிதன். இது இறுதிப் பயணம். இறந்தவனை கௌரவிப்பது முக்கியம். டிராஃபிக்கை நிறுத்தி, வெடித்தாளும் பூக்களுமாகச் சாலையை நாரடித்து, ஒலிக் கழிவால் காற்றை நிரப்பி வழியனுப்பி வைத்தலே சரியான மரியாதை. நீங்கள் காத்திருக்கலாம், தப்பில்லை.

அந்த ஊர்வலம் முழுச்சாலையை அடைத்துக்கொண்டு நகர்ந்தபடியால், பின்னால் காத்திருந்த நாங்கள் மெல்ல மெல்லக் காலால் விந்திதான் வண்டிகளை நகர்த்திக்கொண்டு முன்னேற வேண்டியிருந்தது. சுமார் நூறடி தூரம் அவ்வாறு செல்ல வேண்டியதானது.

என் அதிர்ஷ்டம், ஊர்வலம் சாந்தோம் பக்கம் திரும்பாமல் சட்டசபை உள்ள திசை நோக்கித் திரும்ப, அந்தப் புள்ளியில் பிசாசு வேகத்தில் என் வழியே பறந்துவிட்டேன்.

திரும்பும்போதுதான் ஊர்வலம் ஊர்ந்த பாதையைச் சற்று ஆர அமர கவனிக்க முடிந்தது.

எப்படியும் ஆயிரம் ரோஜாப்பூக்கள் இருக்கும். கசக்கிப் பிழிந்து சாலையெங்கும் வீசிக் குவித்திருந்தார்கள். வெடித்த சரவெடிக் குப்பைகளில் அந்தப் பிராந்தியமே அல்லோலகல்லோலமாகியிருந்தது. ஏற்கெனவே அந்த வளைவில் எருமைகள் எப்போதும் மேய்ந்து அங்கிங்கெனாதபடி எங்கும் சாணம் நிறைந்திருக்கும். கூட்ட நெரிசலில் வாகனங்களும் வாகனாதிபதிகளும் அதன்மீது ஏற்றி இறக்கி முட்டிக்கொண்டு செல்ல, இப்போது தார்ச்சாலைக்குச் சாணம் மெழுகினாற்போல் ஆகியிருந்தது.

காலக்கிரமத்தில் கார்ப்பரேஷன்காரர்கள் வந்து குப்பையள்ளிப் போவார்கள். அதற்குள் இறந்த உத்தமோத்தமன், எம்பெருமான் திருவடிக்குச் சென்று சேர்ந்துவிடுவான். அடுத்த சில தினங்களுக்குச் சாலை சரியாகவே இருக்கும். மீண்டும் யாராவது காலமாவார்கள். மீண்டும் ஒரு மரண ஊர்வலம். ஊர்வலத்தில் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகிறவன் இவ்வாறாகக் கட்டுரை எழுதுவான்.

2 பேசு கண்ணா, பேசு!

பேசிக்கொண்டே வேலை செய்கிறவர்களைப் பார்க்கிற போதெல்லாம் என்னையறியாமல் ஒரு பதற்றம் ஒட்டிக்கொள்ளும். எதிராளியின் வேலையோ, அதன் நேர்த்தி அல்லது பிழையோ எவ்விதத்திலும் என்னை பாதிக்கப்போவதில்லை என்றாலும் அந்தப் பதற்றத்தைத் தவிர்க்க முடிந்ததில்லை.

நான் எழுதுபவன். வேலை செய்துகொண்டிருக்கும்போது, உலகம் அழிய இன்னும் ஒரு வினாடிதான் இருக்கிறது என்று எம்பெருமான் நேரில் வந்து தகவல் தெரிவித்தாலும் அது என் காதில் விழாது. காதில் விழுந்தாலும் வாயிலிருந்து ஒரு சொல்லும் வெளிவராது. இதனாலெல்லாம் என்னை ஒரு உம்மணாமூஞ்சி என்று மதிப்பிடுவீர்களானால் அது சரியல்ல. மணிக்கணக்கில் பேசக்கூடியவன் தான். அர்த்தமற்ற வெறும்பேச்சுகளிலும் ஆர்வம் மிக்கவனே. ஆனாலும் ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது பேசத் தோன்றாது. அல்லது பேச வராது.

ஆனால் என் விதி, அன்றாட வாழ்வில் நான் சந்திக்க நேர்கிற பெரும்பாலானவர்கள் பேசிக்கொண்டே பணியாற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள். என் எழுத்தாள நண்பர் ஒருவர் இருக்கிறார். கம்ப்யூட்டரைத் திறந்துவைத்துக்கொண்டு படபடவென்று ஏதாவது முக்கியமான விஷயத்தை எழுத ஆரம்பிப்பார். அடுத்த பத்து நிமிடங்களுக்குள் எழுதி முடித்துச் சரிபார்த்து அனுப்பியாகவேண்டிய அவசர நெருக்கடியும் அவருக்கு இருக்கும். ஆனாலும் விடமாட்டார். எழுத ஆரம்பித்த அடுத்தக் கணமே பேசவும் தொடங்கிவிடுவார்.

‘ஏன் சார், இன்னார் நடித்த இன்ன படம் ரிலீஸ் ஆயிருக்குதே, பார்த்துட்டிங்களா? ரிப்போர்ட் எப்படி இருக்காம்? எனக்கு ரெண்டு நாள் கழிச்சி பார்க்கத்தான் டிக்கெட் கிடைச்சிருக்கு. அதுவும் நைட் ஷோ. வண்டி வண்டியா டிக்கெட் வெச்சிருப்பான். தியேட்டர்ல ஈயாடும். ஆனாலும் இந்த முதல் வாரம் இவங்க பண்ணுற அலப்பறை தாங்க முடியமாட்டேங்குது…’

என்னைப் பார்த்துத்தான் பேசிக்கொண்டிருப்பார். கைவிரல்கள் தன்பாட்டுக்கு கம்ப்யூட்டரில் இயங்கிக்கொண்டிருக்கும். இரண்டு மனம் வேண்டுமென்று இறைவனிடம் கேட்டுப் பெற்றவரா என்றால் அதுவுமில்லை. சார்வாக மகரிஷியின் சகலை வம்சத்தில் வந்த கோர நாத்திகர்.

எனக்கு இருப்புக் கொள்ளாது. ‘விடுங்க சார். முதல்ல எழுதி அனுப்புங்க. அப்பறம் பேசுவோம்’ என்பேன். ‘அது கிடக்கட்டும் சார். இந்த அன்னா ஹசாரேக்கு என்ன கூட்டம் சேருது பாத்திங்களா? ஷங்கர் படத்து இந்தியன் தாத்தாக்கு இன்னும் கொஞ்சம் வயசான மாதிரி இருக்காரில்ல?’

‘பார்த்து டைப் பண்ணுங்க சார். எதாவது தப்பாயிடப்போகுது’ என்று பரிதவிப்பேன். அவர் கண்டுகொள்ளவே மாட்டார். அன்னா ஹசாரே, அழகிரியின் சொத்து மதிப்பு, அருண் ஷோரியின் அடுத்த புத்தகம், அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி, மங்காத்தா பின்னணி இசையில் சுட்டுப் போட்ட பாக்கின் ஏ மைனர் வயலின் கான்சர்ட்டோ, மத்தியானம் சாப்பிட்ட பிரியாணியின் சுவையின்மை, பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டிய கெடு தேதி வந்துவிட்டது பற்றிய கவலை என்று அந்தப் பத்து நிமிடத்தில் குறைந்தது பதினொரு விஷயங்களையாவது பேசுவார். அவர் எழுதிக்கொண்டிருக்கும் சரக்கு நிச்சயம் கந்தரகோலமாகியிருக்கும் என்று என் மனசு கிடந்து அடித்துக்கொள்ளும். அவர் கண்டுகொள்வாரோ? ம்ஹும். திரும்பப் படித்துக்கூடப் பார்க்காமல் உரியவருக்கு அப்படியே மின்னஞ்சல் செய்துவிடுவார்.

இவர் பரவாயில்லை. ரமேஷ் என்று இன்னொரு நண்பர் இருக்கிறார். மேற்படி விஷயத்தில் அவர் ஒரு பி.எச்.டி. ஹோல்டர். இவர் ஒரு பி.பி.ஓ. வைத்திருக்கிறார். ஒரு பக்கம் தீப்பொறி பறக்க வேலை ஓடிக்கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் ட்விட்டரில் இடைவெளியில்லாமல் என்னவாவது கிறுக்கிக்கொண்டே இருப்பார். ‘இப்போது கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்..’ என்று மூன்று நிமிடங்களுக்கொரு முறை ஸ்டேடஸ் அப்டேட் செய்வார். நாயே, பேயே, நயவஞ்சக நரியே, அவனே இவனே என்று மயிலை மாங்கொல்லை கட்சிக்கூட்ட நட்சத்திரப் பேச்சாளர்போல் தனது அரசியல் எதிரிகளுக்குச் சவால் விட்டுக்கொண்டும் இருப்பார். வந்த சவால்களுக்கு பதிலளிக்கத் தொடங்கிவிட்டாரென்றால் உலகையே மறந்துவிடுவார். ‘வேலையைக் கவனியுங்கள் ஐயா’ என்றால் அது பாட்டுக்கு அது என்பார்.

இதுகூடப் பரவாயில்லை. எங்காவது இந்த நண்பருடன் காரில் பயணம் செய்ய நேர்ந்துவிட்டால் தீர்ந்தது விஷயம். வேகமுள் எண்பதைத் தொடும் வரைதான் அமைதியாக இருப்பார். எண்பதைத் தாண்டியதோ இல்லையோ, மொபைல் போனில் யாராவது அழைத்துவிடுவார்கள். உடனே நீலப்பல்லை மாட்டிக்கொண்டு பேச ஆரம்பித்துவிடுவார். எதிரே வருகிற ஒவ்வொரு வாகனத்திலும் எமகிங்கரர்கள் இருப்பதுபோல் ஓர் உணர்வு நமக்கு அவசியம் ஏற்படும். உண்மையில் அது இடமாறு தோற்றப்பிழை. நண்பரின் உள்மனத்தின் ஒரு ஓரத்தில் பழைய பி.எஸ். வீரப்பா இன்னும் உட்கார்ந்துகொண்டிருக்கிறாரோ என்கிற சந்தேகம் வருமானால் அதுவே நியாயமானது. சற்றும் வேகத்தைக் குறைக்காமல் போனில் பேசியபடியே லாரிகளையும் டெம்போக்களையும் உரசுகிற பாணியில் ஓவர்டேக் செய்வார். ஐயோ என்று நம் அந்தராத்மா அலறும் கணத்தில் போனில் ஹாஹாஹாஹா என்று எதற்கோ உற்சாகமாக அவர் சிரிப்பார். ’யோவ் பார்த்து ஓட்டுய்யா’ என்று அலறினால் திரும்பவும் சிரிப்பார். பரமாத்மா வேடமேற்ற என்.டி. ராமாராவ்போல அபயஹஸ்தம் காட்டுவார். சர்க்கஸில் வரும் மரணக்குழி விளையாட்டுக்குச் சற்றும் சளைத்ததல்ல, அவரோடு பயணம் செய்யும் அனுபவம்.

இம்மாதிரி நீங்களும் பலபேரைப் பார்த்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக நீங்கள் சந்தித்திருக்க முடியாத இன்னொரு நண்பரைப் பற்றி இனி சொல்லுகிறேன். இவர் ஒரே சமயத்தில் இரண்டல்ல; மூன்று காரியங்கள் பார்க்கிற திறமைசாலி. அவரது நான்காவது திறமை, அவர் பணியாற்றுவதைப் பார்க்கிறவர்களுக்கு அந்தக் கணமே தலை சுற்றல், வாந்தி பேதி மயக்கம் உள்ளிட்ட சகல ரோகங்களும் வந்து சேர்ந்துவிடும்படிப் பண்ணுவது.

இவர் ஒரு சிகையலங்கார நிபுணர். என் வீட்டுக்குப் பக்கத்தில் கடை வைத்திருக்கிறார். இளைஞர். ரொம்ப நல்லவர். தொழிலில் திறமைசாலிதான். ஆனால் கத்திரிக்கோலைக் கையில் எடுத்தவுடன் எங்கிருந்தோ அவருக்கு ஏகப்பட்ட சமூகக் கோபங்கள் வந்துவிடும். சரக் சரக்கென்று இடது கரத்துக் கத்திரிக்கோல் நமது சிகையில் விளையாடும்போதே அவரது வாய் அரசியல் பேசத் தொடங்கிவிடும். நீங்கள் காது கொடுத்துக் கேட்டுத்தான் ஆகவேண்டுமென்ற அவசியமில்லை.

Enjoying the preview?
Page 1 of 1