Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paalangal
Paalangal
Paalangal
Ebook375 pages3 hours

Paalangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Kasthuri Srinivasan Award in 1984 for best novel

'கஸ்தூரி ஸ்ரீனிவாசன்' விருது பெற்ற இந்த நாவலில் ஆசிரியர் மூன்று காலகட்டங்களில் நடக்கும் மூன்று விதமான கதைகள் கொண்டது. 1930-களில் உள்ள இந்துக் குடும்பத்து சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும் நம்மை அந்தக் காலத்துக்கே கூட்டிச் செல்கின்றன. 1960-களில் பெண்கள் பள்ளிக்குப் போகவும், மற்ற புதுமைகளை ஏற்க விரும்பும் ஒரு நடுத்தரக் குடும்பத்துக் கதையாகவும், 1980-களில் பெண்கள் எவ்வளவு தைரியமான மனப்போக்கு உடையவர்களாகவும், இந்நாவலில் மிக் மிக அழகாக கூறியுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545054
Paalangal

Read more from Sivasankari

Related to Paalangal

Related ebooks

Reviews for Paalangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paalangal - Sivasankari

    http://www.pustaka.co.in

    பாலங்கள்

    Paalangal

    Author :

    சிவசங்கரி

    Sivasankari

    For other books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பாலங்கள்

    (1984-ம் ஆண்டில் வெளியான சிறந்த நாவலாக

    கஸ்தூரி சீனிவாசன் விருதைப் பெற்றது)

    சிவசங்கரி

    என் குறிப்பு

    பாலங்கள் உருவாவதற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு...

    ரொம்பரொம்ப வருஷங்களாக, எழுத்தாளர் என்ற அடைமொழி என் பெயரோடு சேர்ந்துகொள்வதற்கு முன்பாக, எங்கள் வீட்டிலிருந்த ருக்மணிப் பாட்டி, ''அந்தக் காலத்துலஆம்படையானும் பொண்டாட்டியும் நாள்கிழமைகள்ல, வெள்ளிக்கிழமைகள்லதான் பேசிப்பா...ஆனாலும், நெருப்பும் பஞ்சும் பிடிச்சுக்கற மாதிரி, பிள்ளை உண்டாயிடும்! கலைக்கறதுக்காகஅவஅவ படாத பாடு படுவா! வெல்லத்துல எள்ளை ஊறவெச்சுக் குடிப்பா, தேங்காய்லகல்பூரத்த நாலு நாள் அடைச்சுவெச்சுட்டு, சாப்பிட்டு, வாயும் வயறும் வெந்து ஆளேபோயிடறதும் உண்டு!'' என்றபோது... 

    பெரிய அத்தை, ''ஆத்துல விளக்கெண்ணெய் காய்ச்சி, பானைல விட்டு, கோர்காலிமேல வரிசையா வெச்சிருப்போம்... வருஷாந்தரத்துக்கு விளக்கேத்த, உள்ளுக்குக் குடுக்க,எல்லாத்துக்கும் அதான்...'' என்றபோது... 

    அம்மா, ''தூரமாயிட்டா, ஒருத்தர் கண்ணுலயும் படக்கூடாது... மாட்டுத்தொழுவத்துலஒக்காந்துண்டு தொடப்பம் கிழிப்போம், அடுப்புப் போடுவோம், சாணி தட்டுவோம்...''என்றபோது... 

    இன்னும் பல பெரியவர்கள், அந்தக்கால நாலு நாள் கல்யாணத்தையும்,திரண்ட்டுளியையும், சாந்தி முகூர்த்தத்தையும் நீளமாய் விவரித்தபோது... 

    மின்சாரத்தையும் இன்றைய நாகரிகத்தையும் அறியாத என் தாத்தா, பாட்டி, இதரமூதாதையர் வாழ்ந்த வாழ்க்கையும், பழக்கவழக்கங்களும் என்னை ஆக்ரமித்து, ஆச்சர்யித்து,சிந்திக்க வைத்தது நிஜம்! 

    இது முதல் காரணம்.

    அப்புறம்...

    குழந்தைப் பருவத்தில் எதையும் சரியாகப் புரிந்துகொள்ளத் தெரியாமல், கண்ணைக் கட்டிவிட்ட குதிரையாக அடமும் கோபதாபமுமாக இருக்கும் பெண், வயசுவந்து பொறுப்புகளைச் சுமக்கத் துவங்கியதும், அதிசயிக்கத்தக்க விதத்தில் நிதானப்பட்டுப்போவது, என்னைப்பிரமிக்கவைத்த இன்னொரு சமாச்சாரம். ஆனால், இரண்டுங்கெட்டானாக இருந்தசின்னப்பெண், வயசு ஏறினதும், தன் கீழ்க்கடைகளையும், முதுமையினால் பொறுமையிழந்து,சட்டென்று குறை சொல்லும் முதியவர்களையும் இணைக்கும் பாலமாகச் சில காலங்களுக்குச்செயல்பட்டவள், வயசான பின் அந்த விவேகத்தை இழந்து, தன் இயலாமையின் காரணமாய்அனாவசியப் புகார்களைச் சொல்ல முற்பகுவது, இன்னும் வியப்பைத் தந்த விஷயம்! இந்தமாற்றங்களுக்குச் சில பெண்கள் விதிவிலக்காக இருக்கலாம்... But I am talking about the majority. 

    ஒரு பெண் சின்னவளாக இருக்கையில், எதிர்காலக் கனவுகளில் பெருமளவுக்கு மூழ்கிவாழ்வதைப் போலவே, முதுமையடைந்த பெண்மணியும் தன் கடந்த காலத்தை அசைபோடுவதில் சொச்ச காலத்தின் பெரும் பகுதியைக் கழிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். 

    ஆக, இந்த எதிர்காலம், இறந்தகாலத்தைப் பிணைக்கும் நிகழ்காலமாக,எண்ணத்தாலும் சூழ்நிலையாலும் ரொம்ப தூரத்துக்கு விலகிப்போய்விட்ட இரு கரைகளையும்இணைக்கும் பாலமாக ஒரு பெண் தன் வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில்உருவாக்கப்படுவதை உணர்ந்தபோது, நான் ரொம்பவும்தான் ஆச்சர்யித்துப்போனேன். 

    ஒரு பெண்னணிடம் காணப்படும் இந்த மனமுதிர்ச்சியின் ஜனனமும் மரணுமும், இந்தப்பாலங்களை நான் உருவாக்கத் தூண்டுதலாக அமைந்த இரண்டாவது காரணம். 

    பாலங்களைக் கட்ட எனக்கு உதவிய பெரியத்தை, ருக்மணிப் பாட்டி, அம்மா, யாகப்பாநகர் பாட்டி, பிருந்தா, பாப்பம்மா, சரோஜா, கமலம் மாமி, ஸ்வாமிநாத மாமா, ராதா, பரிமளா,லலிதா, இன்னும் ஆங்காங்கு இந்தக் கதைக்காகவே சந்தித்த முன்பின் பழக்கமில்லாததாத்தாக்கள், பாட்டிகள், மாமாக்கள், மாமிகள் எல்லோருக்கும், என் சந்தோஷமான நன்றியைஇந்த சந்தர்ப்பத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 

    கதையம்சம் அதிகமின்றி, சம்பவக் கோவைகளின் பின்னல்களாக, கொஞ்சம்வித்தியாசமான தொடராக அமைந்திருந்தபோதிலும், சற்றும் தயக்கமின்றி என் முயற்சிக்குஊக்கமளித்ததோடு, மூன்று தலைமுறையினரையும் அவரவர் தனித்தன்மையுடன் தெளிவாகக்காட்ட மூன்று ஓவியர்களைக் கொண்டு படங்கள் வரையச் சொல்லி 'பாலங்கள்' கதைக்குச்சிறப்புச் சேர்த்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. பாலன் அவர்களுக்கும்,விகடன் பத்திரிகையில் அருமையாகப் படங்கள் வரைந்த திரு. கோபுலு, திரு. மாருதி, திரு.ஜெயராஜ் ஆகியோருக்கும், குறுகிய காலத்தில் தரமான புஸ்தகமாக உருவாக்கிய திரு.வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றி! 

    - சிவசங்கரி.

    பாலங்கள்

    1

    1907-1931

    பட்டம்மா எழுந்து உட்கார்ந்தாள். இரண்டு கைகளையும் தேய்த்து முகத்துக்கு நேராய்ப்பிடித்து, மெல்ல கண்களைத் திறந்தாள். அரைகுறை வெளிச்சத்தில் மங்கலாய்த் தெரிந்த கைரேகைகளை உற்றுப் பார்த்தவள், புடவைத் தலைப்புக்குள் கிடந்த மாங்கல்யத்தை எடுத்துகண்களில் ஒற்றிக்கொண்டு, ''என்னப்பனே... முருகா...'' என்று முணுமுணுத்தாள். 

    பிரிபிரியாய் தொங்கின முடியை ஒரு தட்டுத் தட்டி, கோடாலிமுடிச்சாய் முடிந்துகொண்டாள். 

    எழுந்து நின்றாள்.

    சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவிழ்ந்திருந்த மடிசாரைச் சரியாகச் செருகி, புடவையைச் சீர்செய்தாள்.

    புழக்கடையிலிருந்து ம்ம்...ஆ...ஆ... என்று மாடு குரல்கொடுக்க, எங்கோ யார்வீட்டுச் சேவலோ கூவியதும் சன்னமாய் கேட்டது.

    உறங்கிக்கொண்டிருந்த எவரையும் மிதித்துவிடாமல் கவனத்துடன் காலை வைத்து, கொல்லைக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தாள்.

    சாம்பல்நிற வானத்தில், இங்குமங்குமாய் நட்சத்திரங்கள் கண்ணைக் காட்டின.

    முழுசாய் மலராத நந்தியாவட்டைப் பூக்கள், வேலியோரத்துச் செடிகளில் வெள்ளையாய் தெரிந்தன.

    சாயங்காலம் பறித்ததுபோக கொடியிலேயே தங்கிவிட்ட முல்லையும் நித்திய மல்லிகையும், லேசான மணத்தைக் காற்றில் கலந்தன.

    தாழ்வாரத்தில் கவிழ்த்திருந்த சொம்பு குடத்தை எடுத்து, கிணற்றடியில் கொண்டு வைத்தாள். கிழக்கு மூலையில் குமித்துவைத்திருக்கும் உரிமட்டைகளில் ஒன்றை எடுத்து நன்றாகப் பிரித்து நாராக்கி, வைக்கப்போருக்குப் பக்கத்தில் கொட்டிக்கிடக்கும் சாம்பலில் பிடிஅள்ளிக்கொண்டு, மீண்டும் கிணற்றடிக்கு வந்தாள். 

    தோண்டியைக் கிணற்றுள் இறக்கி தண்ணீர் சேந்தினவள், அங்கேயே குத்துக்காலிட்டுஉட்கார்ந்து, உரிமட்டையை சாம்பலில் தோய்த்து குடத்தையும் சொம்பையும் அழுந்தத்தேய்த்து, அலம்பி ஒருபக்கமாய் கவிழ்த்தாள். 

    தாழ்வாரத்துப் பிறையில், ஒரு சட்டியில் உமிக்கருக்கு வைத்திருப்பதில் கொஞ்சம்எடுத்துவந்து பற்களில் தேய்த்து, வாயைக் கொப்புளித்தாள். முகத்திலும் இரண்டு கை ஜலம்விட்டுக்கொண்டவள், புடவைத் தலைப்பால் முகத்தையும் கைகளையும் துடைத்தபடி வீட்டுக்குள்வந்தாள். 

    ஸ்வாமி அறைக்குள் சென்று குங்குமத்தை இட்குக்கொண்டு, குத்துவிளக்கில்எண்ணெய் விட்டு திரியைத் தூண்டி ஏற்றி, ''இன்னியப் பொழுதை நல்லபடி வெடீம்மா,தாயே...'' என்று முனகி, விழுந்து நமஸ்கரித்தாள். 

    மீண்டும் கொல்லைப்புறத்துக்குச் சென்று, ஒரு கை சாணியைக் கொஞ்சம் ஜலம்விட்டுக் கரைத்து எடுத்துக்கொண்டு, வாசலுக்கு வந்தாள். 

    வெளிக்கதவைத் திறந்து, வாசலில் காத்து நிற்கிற ஸ்ரீதேவியை வா என்று அழைக்கும்பாவனையில் ஒரு கை நீரைத் தெளித்துவிட்டு, உடனே கொல்லைக் கதவிடம் சென்று,மூதேவியை அனுப்பும் உத்தேசத்துடன் அங்கேயும் ஒரு கை தெளித்து, திரும்ப வாசலுக்குவந்து நன்றாக சாணிஜலம் தெளித்துப் பெருக்கி, உடன் எடுத்துப்போயிருந்த அரிசிமாவினால்லட்சணமாய் கோணல்மாணல் இல்லாமல் கோலம் போட்டாள். 

    வழக்கமாய் பெரிசாய்ப் போடுவதுபோல அன்று போட நேரமில்லை... மணியாகிவிட்டது.

    மாமனார் எழுந்துவிடுவார்.

    ஓர்ப்படிகள் இருவரும் கூடமாட ஒத்தாசை செய்ய இருந்தால், கவலையில்லை... ஒருத்தி கொல்லைக்கட்டு வேலையைக் கவனித்தால், இன்னொருத்தி அடுப்புக் காரியத்தைப்பார்ப்பாள். 

    இன்றைக்கு அப்படியில்லை.

    பட்டம்மாவுக்கு அடுத்த நாட்டுப்பெண் சாரதா, வீட்டில் இல்லை... தூரம்.நாளன்றைக்குத்தான் குளிக்கிறாள். குட்டி ஓர்ப்படி கோமு, தலைச்சன் பிரசவத்துக்காகமுதல்நாள் பிறந்தகத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள். 

    அப்புறம்?

    முழுசாய் மூன்று நாள்களை ஒண்டியாய் சமாளிப்பதற்குள், விழிபிதுங்கித்தான் போகப்போகிறது.

    சமையல்கட்டில் நுழைந்த பட்டம்மா, நாழியாகிவிட்ட உணர்வுடன் அடுப்புச் சாம்பலை முறத்தில் அள்ளி, வைக்கப்போருக்கு அருகில் கொண்டு கொட்டிவிட்டு வந்தாள். அடுப்பைமெழுகி, சாணியைத் தடவி, அரிசிமாவினால் இரண்டு இழை போட்டுவிட்டு, அதன்பக்கத்திலேயே முதல்நாள் மெழுகித் தயாராய் வைத்திருந்த அடுப்பில் அடிமட்டை,உரிமட்டை, துளி வறட்டி வைத்து, தீக்குச்சியைக் கிழித்துப் பற்றவைத்தாள். 

    காய்ந்திருந்த மட்டையை தீ ஸ்பர்சித்ததும், நொடியில் ஜுவாலை பரவியது.

    ஒற்றைத் தீக்குச்சிக்கு மேல் அடுப்புப் பற்ற உபயோகித்தால், பட்டம்மாளின் மாமியார் மீனாம்பாவுக்குப் பிடிக்காது.

    ''பொம்மனாட்டிக் கழுதைக்கு இந்த விதரணைகூட இல்லாட்டா எப்படி! ஆம்படையான் வெய்யில்லயும் மழைலயும் நின்னு சம்பாதிக்கறதை, இவ தீப்பெட்டி வாங்கியேதாம்தூம்னு செலவழிச்சா ஆச்சா?'' என்பாள். 

    ''நாங்கள்லாம் இந்த ஒத்தைக் குச்சியைக்கூடக் கிழிக்க மாட்டோம். விடிவிளக்குலவிளக்குமாத்துக் குச்சியப் பத்தவெச்சு, அடுப்பை மூட்டிடுவோம்... தணல் பிடிச்சிண்டதும், ஒருமுட்டானை எடுத்துச் சொருகிவெச்சுட்டா, அது நாள் பூரா கனிஞ்சுண்டிருக்கும்! இன்னொருதரம் அடுப்பை மூட்டணும்னா, இந்த முட்டானை எடுத்து ஊதிட்டு உரிமட்டைல காண்பிச்சா, திகுதிகுன்னு பிடிச்சுண்டுடும்! பொம்மனாட்டிக் காரியம்னா அப்படின்னா இருக்கணும்!''என்பாள். 

    வாயும் கையுமாய் இருந்த மீனாம்பா, இரண்டு நாள் காய்ச்சலில் பிராணனை விட்டு,இப்போது வருஷம் நாலாகிறது. 

    அவள் போனதிலிருந்து பட்டம்மாதான் எல்லாம்.

    வாணாயில் ஜலம் விட்டுஅடுப்பில் வைத்து, தளதளவென்று கொதித்ததும், இரண்டு கை காபித்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெந்நீரை ஊற்றி, அரைநிமிஷம் தாமதித்து, காபிவடிகட்டவென தனியாய் வைத்திருக்கும் மெல்லிய துணியினால் வடிகட்டினாள். 

    காபிப்பொடி தீர்ந்துவிட்டது... நாளைக்குத்தான் காணும். மாமனார் தஞ்சாவூரிலிருந்துஇரண்டு வீசை கொட்டை வாங்கிவந்து வைத்திருக்கிறார். கொஞ்சமாக மத்தியானத்துக்குமேல் வறுத்து இடித்து வைத்துவிட்டால், சாரதா குளித்துவிட்டு வந்த பின் அரைவீசையைவழக்கம்போல இடித்துக்கொள்ளலாம். 

    கோனார் கறந்துவைத்திருந்த பாலை உருளியில் ஊற்றி அடுப்பில் வைத்த பட்டம்மா,கூடத்துக்குச் சென்று அங்கு கால்மாடு தலைமாடு புரியாமல் படுத்துக்கிடந்த மூத்த பெண்ணைஉலுக்கி எழுப்பினாள். 

    ''டீ... சிவகாமு, எழுந்திருடீ... விடிஞ்சு அரைஜாமம் ஆச்சு, இன்னும் என்னடீ தூக்கம்?பொம்பளைக் குட்டி இத்தனை நாழி தூங்கினா நன்னா இருக்குமாடீ?'' 

    சிவகாமு கொட்டாவி விட்டபடி எழுந்து உட்கார்ந்தாள்.

    ''என்னம்மா நீ... தினம்தினம் விடியறதுக்கு முன்னால எழுப்பிடறே! தூக்கம் வர்றதும்மா...''

    ''வரும், வரும்... ஏந்திருடீன்னா...''

    ''கோண்டு மட்டும் தூங்கறானே?''

    ''அவன் புருஷப் பிள்ளைடீ! பதிலுக்குப் பதில் வாயக்காட்டாம, ஏந்திரு... சாரதா சித்தி ஆத்துல இல்ல... நீ போய் பல்லத் தேய்ச்சுட்டு, மாட்டுக்கொட்டகையப் பெருக்கிஅலம்பிவிடு... நாழியாச்சு... தாத்தா எழுந்துண்டுடுவார்...'' 

    சிவகாமு பாயைச் சுருட்டி வைத்துவிட்டு, கொல்லைப்பக்கம் போனாள்.

    பல் தேய்த்து, கைகால் அலம்பி, லக்ஷ்மியை அவிழ்த்து தென்னைமரத்தில் கட்டி, கொட்டகையில் கிடந்த கூளம் சாணுத்தை வாரி, இரண்டு தோண்டி ஜலம் விட்டுஅலம்பி,அம்மா சொன்ன வேலைகளை முடித்துவிட்டு உள்ளே வருவதற்குள், பொழுது பலபலவென்றுவிடிந்துவிட்டது. 

    தாத்தா காளாஸ்தி எழுந்து வாய்க்காலுக்குப் போய்வந்து, காபி சாப்பிட்டுவிட்டு வாசத்திண்ணைக்குப் போய்விட்டார். 

    அப்பா கணபதியும் சித்தப்பாக்களும், கிணற்றடிக்குப் பல் தேய்க்க வந்துவிட்டார்கள்.

    சமையல்கட்டில் எட்டிப்பார்த்தவளை, நிற்கவிடாமல் பட்டம்மா விரட்டினாள்.

    ''என்னத்துக்கு அசமஞ்சமா நிக்கறே? புருஷாள்லாம் எழுந்தாச்சுன்னா, பசங்களைக் கிளப்பிவிட்டுட்டு, எடத்தைப் பெருக்கி மெழுகு... தூங்கியெழுந்த எடம், பிரேதம் கிடந்த எடத்துக்குச் சமம்னு பெரியவா சொல்லுவா! தெவசம் இட்ட வீடு மாதிரி ஒத்தை மெழுகுமெழுகாதே... குடும்பத்துக்கு ஆகாது! குனிஞ்சு பவ்யமா ரெண்டு தரம் மெழுகு! ஆச்சுன்னுசுருணையத் தூக்கிண்டு ஓடிவந்துடாதே... கையோட ஒரு தரம் பெருக்கிடு! கொழந்தையக்கையில வெச்சுண்டு பாத்துண்டிருக்கற பூமாதேவி, மெழுகின தரையப் பெருக்கினாத்தான்,கொழந்தைய எறக்கிவிடுவாளாம்! என்ன, காதுல வாங்கிண்டியா? மசமசன்னு ஏன் நிக்கறே?'' 

    சிவகாமு கூடத்தைப் பார்க்க நகர்ந்தாள்.

    சித்தப்பா பிள்ளைகள் கோண்டு, நாணாவையும், தங்கைகள் பார்வதி, லஷ்மியையும் எழுப்பினாள்.

    கூடத்தை இரண்டு தரம் மெழுகிப் பெருக்கிய நிமிஷத்தில், பட்டம்மாவின் குரல் அருகாமையில் சிடுசிடுத்தது.

    ''விளக்குமாறைக் கையில வெச்சுண்டு சதிரா ஆடறே? குனிஞ்சு வணங்கி பெருக்குடீ! துள்ற மாடு பொதி சுமக்காது... இந்த ஆட்டம் ஆடினேன்னா, நாளைக்கு இவளைப் பெத்தவயத்துல பெரண்டைய வெச்சுக் கட்டிக்கோடீன்னு எல்லாரும் என்னத்தான் ஏசுவா...'' 

    ''விளக்குமாறு தோதா இல்லம்மா... தேஞ்சுபோச்சு.''

    ''அதுசரி... ஆடத்தெரியாத தேவடியா, முத்தம் கோணல்னு சொன்னாளாம்! பதில் பேசிண்டு நிக்காதே... வேலையக் கவனி! மத்த பசங்க எங்க? எல்லாத்தையும் இழுத்துண்டுவா... உங்களுக்குப் பழையது போட்டு தலைவாரிப் பின்னிட்டு, நா காவேரிக்குப் போகணும்...'' 

    ஐந்து நிமிஷத்தில் எல்லாக் குழந்தைகளும் நடையில் வரிசையாய் உட்கார,கற்சட்டியில் தண்ணீர் கொட்டி ஒருபக்கமாய் வைத்திருக்கும் சாதத்தில் கட்டித்தயிரை ஊற்றி,கொஞ்சம் உப்பைப் போட்டுப் பிசைந்து, முதல்நாளே கொதிக்கவைத்திருந்த எரித்தகுழம்புடன், புரச இலையைக் கையில் பிடித்துக்கொள்ளச் சொல்லி பட்டம்மா உருட்டிப்போட்டாள். 

    சாப்பாட்டுக்கடை ஆனதும், ஒவ்வொரு பெண் தலையிலும் நல்லெண்ணெய் தடவிவழவழவென்று வாரி, சட்டமாகப் பின்னிவிட, மீதமிருந்த பழையதில் ஒரு சுருளை நார்த்தங்காயைக் கிள்ளிப்போட்டு, சிவகாமி புழக்கடைக்குத் தூக்கிச் சென்றாள். 

    மாட்டுத்தொழுவத்துக்குப் பக்கத்தில் நின்று, ''சித்தி...'' என்று குரல்கொடுக்க, யார்கண்ணிலும் படாமல் அமர்ந்திருந்த சாரதா, ''என்னடீ?'' என்றாள். 

    ''பழையது வெச்சிருக்கேன்... நார்த்தங்கா போறாதுன்னா, மாங்கா பறிச்சுத் தரட்டுமா?''

    ''வாண்டாம்... கொல்லையப் பெருக்கறப்ப உதுந்துகெடக்கறதை நானே எடுத்துக்கறேன். நீ போ... தாத்தா பாத்தா கோவிச்சுக்கப்போறார்...''

    சிவகாமு மாட்டுக்கு ஒரு கை வைக்கோலை உதறிப் போட்டுவிட்டு உள்ளே வந்து, காவேரிக்குப் புறப்படத் தயாராக இருந்த அம்மாவுடன் தானும் ஒரு குடத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்பினாள். 

    தெருவைத் தாண்டி, ஐயனார் கோவிலைக் கடந்து மூங்கில் தோப்பில் நடந்தால்,ஜலஜலவென்று சிருங்காரமாய் ஓகும் காவேரி. 

    பாவாடையை மார்புவரை ஏற்றிக் கட்டி, முங்கி, பத்தடி நீந்திவிட்டு அம்மாவிடம் வந்துஉட்கார்ந்து, ஜில்லிப்பு தாளாமல் சிரித்தாள். 

    ''வண்டல் மண்ணை மஞ்சளோட கலந்து, கை கால்ல அழுத்தித் தேய்டீ... மயிருமட்டைனு அசிங்கமா ஆம்பளையாட்டம் இல்லாம, உடம்பு பளபளன்னு இருக்கும்.'' 

    தேய்த்தாள்.

    ''கங்கா ஸ்நானம், காவேரி ஸ்நானம், ஹரி, ஹரி...'' என்று சொல்லி முழுக்குப் போட்டுவிட்டு அம்மா பின்னோடு கரையேறி, குடத்தில் தண்ணீரோடு நடந்தாள்.

    அம்மா சமையல் செய்ய, இவள் தாத்தாவின் பூஜைக்கு பூப்பறித்து வந்தாள். சந்தனம் அரைத்துவைத்தாள்.

    வாசத் திண்ணையில், கோண்டு, நாணாவுக்குத் தாத்தா பாடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, தானும் கூட உட்கார்ந்து, பரப்பியிருந்த மணலில் அ... ஆ... ஹரி ஓம்என்று ஆள்காட்டி விரலால் எழுதிப்பார்த்தாள். 

    சமையல், சாப்பாடு ஆகி, உள்ளை ஒழித்துப் போட்ட பின், காபிக்கொட்டை வறுக்கஉட்கார்ந்த பட்டம்மா, ''சிவகாமு...'' என்று உரக்க அழைக்க, தங்கைகளுடன் பல்லாங்குழிஆடிக்கொண்டிருந்தவள், ''என்னம்மா?'' என்றாள், இருந்த இடத்திலிருந்தே. 

    ''முட்டான் கொஞ்சந்தான் இருக்கு... சித்திய ஒரு கூடை உருட்டிப்போடச்சொல்லுடீ...'' 

    பாதி ஆட்டத்தில் அம்மா கூப்பிடுவது சின்னதாக எரிச்சலைத் தர, சிவகாமு எழுந்துகொல்லைப் பக்கம் போனாள். 

    அள்ளிக் கொட்டியிருந்த சாணியோடு, கூளத்தைக் கலந்து வேலியோரமாய் அமர்ந்துவறட்டித் தட்டிக்கொண்டிருந்த சித்தியை நெருங்காமல், தள்ளி நின்று கத்தினாள், ''அடுப்புலசொருக முட்டான் இல்லியாம்... வறட்டி தட்டற கையோட, ஒரு கூடை முட்டானையும்உருட்டிப்போட்ட்டச் சொன்னா அம்மா.'' 

    ''நானே உருட்டிவெச்சுட்டேன்னு சொல்லு.''

    உள்ளே வந்து அம்மாவிடம் சித்தி கூறியதைச் சொல்லிக்கொண்டிருந்த நிமிஷத்தில்,வாசலில் குடியானவன் வந்து நின்று, ''ம்மா...'' என்று குரல்கொடுத்தான்.

    ''முனியன் மாதிரியிருக்கே... என்னன்னு கேளு.''

    போய்த் திரும்பி வந்தவள் கையில், கூம்புகூம்பாய் இரண்டு தாழம்பூக்கள்.

    ''இப்ப ஏதுடீ தாழம்பூ?''

    ''தில்லைஸ்தானத்துக்குப் போயிட்டுவர்ற ஜோலி இருந்துதாம்... அங்க கண்ணுல பட்டுதாம்... ரெண்டு பூ ஒடிச்சுண்டு வந்திருக்கானாம்...''

    ''இருக்கற வேலை போறாதுன்னு இது வேறயா! சரி... மடலப் பிரிச்சு சுத்தம் பண்ணி வை... நா வந்து தெக்கறேன்.''

    அன்றைக்கு மூன்று பெண்களுக்கும் வங்கிப் பின்னல் பின்னி, தாழம்பூவைத் தைத்து, உச்சந்தலைக்கு தோட்டத்துக் கனகாம்பரத்தைப் பறித்துக் கட்டிவைத்துவிட்டு பட்டம்மாஎழுந்திருக்கும்போது, மணி இரண்டரை என்றது. 

    அடுப்பை மூட்டி, காபி கலந்து புருஷர்களுக்குக் கொடுத்து, தானும் ஒரு வாய்குடித்தவள், கல்லைப் போட்டு தோசை வார்க்க முற்பட்டாள். 

    பெரியவர்கள் சாப்பிட்டு எழுந்துபோனதும், பாக்கியிருந்த தோசைகளைப் பாதிப்பாதியாக விண்டு, தயிர்சாதம் சாப்பிட்ட குழந்தைகளுக்குத் தொட்டுக்கொள்ளப் போட்டாள். 

    இரவுச் சமையல் வேலை ஆன பிறகு, நாலுமணிக்கெல்லாம் முகம் அலம்பி, தலை வாரி,பொட்டு இட்டுக்கொண்டாள். 

    லேசாக இருட்டிக்கொண்டு வருகையில், ஸ்வாமி விளக்கை ஏற்றி, ஸ்லோகம் சொல்லிநமஸ்கரித்தாள். 

    நாலு நிலவிளக்குகளிலும் குத்துவிளக்குகளிலும் விளக்கெண்ணெய் ஊற்றி,தோட்டத்துப் பஞ்சை தடிமனாய் திரித்துப்போட்டு ஏற்றினாள். 

    வாசப்பிறைகளில் நிலவிளக்குகளையும், நடுக்கூடத்தில் குத்துவிளக்கையும் வைத்தாள்.

    ஏழு மணி சுமாருக்கு, சொட்டுப் பால் எடுத்துப்போய் நிலவிளக்குகளில் இட்டு அணைத்து, உள்ளே கொண்டுவைத்துவிட்டு, வாசநடையில் மறைவாய் நின்று, திண்ணையில் உட்கார்ந்திருந்த புருஷர்களிடம், ''சாப்பிட வரேளா? எலை போடட்டுமா?'' என்று கேட்டாள். 

    பெரியவர் 'ம்' என்று கூற, வாழைச் சருகைப் போட்டு தண்ணீர் தெளித்துச் சுத்தம்பண்ணி, சுட்ட அப்பளத்தை வைத்து சாதத்தைப் பரிமாறினாள். 

    பரிசேஷணும் செய்து சாப்பிடத் துவங்கிய காளாஸ்தி, ''நீ வயலுக்குப் போயிருந்தப்போ,ராமு அத்தான் வந்திருந்தான்... அவன் வந்துபோன சமாச்சாரத்தை உன்னண்ட சொல்லலாம்னுபாத்தா, உன்னைக் கண்ணுலயே காணுமே!'' என, ''திருவையாறு வரைக்கும் ஒரு நடைபோயிட்டுவந்தேன்... சீமாச்சு நல்ல சம்பா விதைநெல் இருக்குன்னு சொன்னான்... பாத்துட்டுவந்துடலாமேன்னு போனேன். நாழியாயிடுத்து...'' என்று கணபதி தயக்கத்துடன் பதில்சொன்னார். 

    ''சுப்புணிக்கு நாலு எடத்துலேந்தும் சம்பந்தம் பேச வராளாம்... உங்க சிவகாமு சேதிஎன்ன, தெரிஞ்சுண்டு மத்தவாகிட்ட குடுக்கலாம்னு இருக்கேன்னு சொன்னான்.'' 

    கதவுக்குப் பின்னால் நின்றிருந்த பட்டம்மாவுக்குள், குபுக்கென்று சந்தோஷம்துள்ளியது. 

    சுப்புணி...

    மூக்கும் முழியுமாய், கட்டுக்குடுமி, சிவப்புக்கல் கடுக்கனுடன், டாண்டாண் என்று ஸ்லோகம் சொல்லி, கண்ணுக்கு லட்சணமாய் வளையவரும் சுப்புணி.

    ''நம்மாத்துக் கொழந்தைக்கும் இந்தத் தைக்கு ஏழு ரொம்பிடுத்து... சுப்புணிக்குப் பதினொண்ணாறது. வயசு திட்டமாயிருக்கும். மகம் நடுசத்திரம் ஜகத்துல கிடைக்காது! ராமுஅத்தான் இப்படின்னு சொன்னதுமே, ஜாதகங்களைப் பாத்தேன்... நன்னா பொருந்தியிருக்கு!நீயும் உங்காத்துக்காரியும் சரின்னு சொல்லிட்டா, வர்ற வெள்ளிக்கிழமை பாக்கியப் பேசி,தீர்மானம் பண்ணிடலாம். என்ன சொல்றே?'' 

    காளாஸ்தி பேசி நிறுத்த, கணபதி, மனைவி பக்கம் பார்வையை வீசினார்.

    முப்பது வயசு, நாற்பது வயசு ஆண்களுக்கு இரண்டாம், மூன்றாம் தாரமாக சின்னப் பெண்களைக் கொடுப்பது சகஜமாக இருக்கும் அந்த நாளில், ராஜா மாதிரி சுப்புணியைமணக்க சிவகாமு கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்ற பெருமிதம் மனசில் ததும்ப, ''பெரியவரா அப்பா சொல்லிட்டப்பறம், நாம சொல்றதுக்கு என்ன இருக்கு? அவர் பாத்து எதுசேஞ்சாலும், அது சரியாத்தான் இருக்கும்...'' என்றாள் பட்டம்மா சின்னக் குரலில். 

    2

    1907-1931

    லக்னப் பத்திரிகை வைத்தாகிவிட்டது.

    அந்த புதன்கிழமை நாள் நன்றாக இருக்க, மாலை நான்கு மணிக்கு மேல், வெள்ளியினால் ஆன தட்டு, சந்தனப் பேலா, குங்குமச் சிமிழ், பன்னீர் சொம்பு, தூக்கு நிறையதிரட்டுப்பால், கல்கண்டு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பூ சகிதம் பெண்வீட்டிலிருந்துபெரியவர்களாய் பத்துப் பதினைந்து பேர், எதிர்ச்சாரியில் நாலு வீடு தள்ளியிருந்த ராமுஅத்தான் வீட்டுக்குப் போய், கூடம் நிறைய சாமான்களைப் பரப்பி, எதிரும்புதிருமாய் உட்கார்ந்து, ஊருக்கு குருவான ஸ்ரெளதிகள் பக்கத்தில் அமர்ந்து மந்திரங்கள் சொல்லலக்னப்பத்திரிகை மாற்றிக்கொண்டு, பெண்வீட்டார் அனைவரும் பிள்ளை வீட்டில் நாலு தினுசுசேவையை - தேங்காய், எலுமிச்சை, வெல்ல, தயிர் சேவையைச் சாப்பிட்டு, மஞ்சள் குங்குமம்வாங்கிக்கொண்டு கிளம்ப, முகூர்த்தத்துக்கு இன்னும் இருபத்தியெட்டு நாள்களேஇருந்தபடியால், அந்தக் கணத்திலிருந்தே கல்யாணம் களைகட்டத் துவங்கியது. 

    மறுநாளிலிருந்து யாரையும் உட்காரவிடாமல் காளாஸ்தி துரத்தினார்.

    ஏண்டா கணபதி... குருகிட்ட வடாம் உருட்டிவைக்க, பந்தக்கால் நட நாள் கேட்டுண்டு வான்னு சொன்னேனே, அதக் கவனிச்சியா? சுண்டு எங்க? நீ இங்க வாடா...கும்மோணத்துக்குப் போயி அம்மாஞ்சிகிட்ட சிவகாமுவுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கறசேதியச் சொல்லி, ஒரு நடை வந்துட்டுப்போகச் சொல்லு... அவன் வந்தாத்தான் காரியம்மளமளனு நடக்கும்! மேளக்காரருக்கு, பந்தக்காரருக்கு ஆள் விட்டனுப்பணும்...உங்கம்மாவுக்குப் பேத்தி கல்யாணுத்துல சதிர்க் கச்சேரி வெக்கணும்னு ஏக ஆசை... மகராஜிபோயிட்டா... இப்ப நா கிடந்து ஒண்டியா அல்லாடறேன்! தஞ்சாவூருக்குப் போய்பாலாமணிகிட்ட இன்ன தேதிக்கு வந்துட்டிம்மான்னு சொல்லி அச்சாரம் தந்துட்டு வரணும்!காசு கொஞ்சம் கூடக் கேப்பா... பரவாயில்லே! மொதமொதல்ல நம்பாத்துல ஒரு கல்யாணம்நடக்கப்போறப்போ, காசைப் பார்த்தா எப்படி! யார்ரா அங்க, காசியா? இப்படி வாடா...தோப்புக்குப் போயி குத்தகைக்காரன் கிட்ட ஐநூறு கா நல்லதா தேங்கா வேணுன்னுஇன்னிக்கே சொல்லிடு! வெட்டிப் போட்டான்னா, நாம உறிச்சு வெச்சுக்கத் தோதாயிருக்கும். அம்பி எங்கடா? கூப்பிடு... அவனும் சுண்டுவும் சாத்தனூர், தில்லைஸ்தானம்,திருவையாறுன்னு கிட்ட இருக்கற சொந்தக்காராகிட்ட கல்யாணம் சொல்ல ஒரு நடைபோயிட்டுவந்துடட்டும்! ரெட்டைமாட்டு வண்டியக் கட்டிண்டு போகச் சொல்லு... அப்பத்தான்மதிப்பா இருக்கும்! காரியங்களைக் கவனிக்க நாம்ப ஒத்தைமாட்டு வண்டிய வெச்சுக்கலாம்.ரெண்டு பேரும் ஒண்ணா போயிட வாண்டாம்... இன்னிக்கு ஒருத்தன் பொண்டாட்டியோடகிளம்பினா, நாளைக்கு இன்னொருத்தன் போகட்டும்! கூப்பிட்ட குரலுக்கு ஏன்னு கேக்கஒருத்தன் இங்க இருக்கட்டும். நீதான் ஒண்டி ஆளா என்ன பண்ணுவே? உன்ஆம்படையாளைக் கூப்பிட்டா, கணபதி... உள்காரியங்கள் எந்தமட்டுக்கு இருக்குன்னுகேட்டுடுவோம்... 

    திண்ணையில் உட்கார்ந்தபடியே காளாஸ்தி தூள்கிளப்பிக்கொண்டிருந்தார்.

    ஒரு வாரம் கழித்து, நல்ல நாள் ஒன்றில் சிவகாமுவை எண்ணெய் தேய்த்துத் தீர்த்தமாடி, பட்டுப்புடவை உடுத்தச் சொல்லி, மணையில் கோலம் போட்டு உட்காரவைத்தார்கள். ஐந்து சுமங்கலிப் பெண்கள் நலங்கு இட்டு, பால் பழம் கொடுத்து,ஆரத்தியெடுத்த பின், தயாராக அரைத்துவைத்திருந்த சாம்பார்

    Enjoying the preview?
    Page 1 of 1