Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manikodi
Manikodi
Manikodi
Ebook1,086 pages6 hours

Manikodi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'கல்கி'யின் பொன் விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவலாகும்.

'வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது' எனும் உயரிய கருத்துக்கு முழு வடிவம் கொடுத்து உருவான நாவல் எனில் அது மிகையல்ல முற்றிலும் உண்மை.

காந்தியச் சிந்தனையே நமது நாட்டிற்கு உகந்தது; அகிம்சை எனும் கசப்பு மருந்து உட்கொள்ள சிரமமெனினும், நிரந்தர ஆரோக்கியத்திற்கு அதுவே கைகண்ட நிவாரணி.

இந்நூல், இன்றைய இளம் தலைமுறையினர் - விடுதலைக்காக நம் முன்னோர்கள் பட்ட வடுக்களின் வலியை உணர்வதற்கும், அவர்களின் சீரிய நெறிபிறழா வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் என்பது நிச்சயம்.

Languageதமிழ்
Release dateOct 4, 2016
ISBN6580101501554
Manikodi

Read more from Jyothirllata Girija

Related to Manikodi

Related ebooks

Reviews for Manikodi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manikodi - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    மணிக்கொடி

    Manikodi

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For other books
    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    முன்னுரை

    ‘மணிக்கொடி’ எனும் இந்நாவல் கல்கியின் பொன்விழாப் போட்டியில் பரிசு பெற்ற நாவலாகும். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டது.

    வன்முறையில் ஈடுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் எவ்வாறு படிப்படியாகத் தங்கள் வழிகளில் நம்பிக்கையிழந்து அகிம்சைதான் நல்லது என்கிற முடிவுக்கு வந்தார்கள் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட நாவலாதலால், இது பற்றிய உரையாடல்கள் இக்கதையின் பல்வேறு கட்டங்களில், அதன் பல்வேறு கதை மாந்தரிடையே நிகழ்கின்றன. கூறியது கூறல் போல் இது தோன்றக்கூடும்! ஆனால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பலதரப்பட்ட கதைமாந்தர்கள் தங்களுள் விவாதிக்காமல் வன்முறை தவறு என்னும் முடிவுக்கு வருதல் சாத்தியமன்று என்பதால், இந்தக் கூறியது கூறல் மன்னிக்கப்படத் தகுந்ததே!

    இருப்பினும், முழுக்க முழுக்க அகிம்சை வழியில்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது என்று சொல்லிவிட முடியாது! அகிம்சை வழியின் மேன்மையைப் புரிந்துகொண்டு எதிராளி விட்டுக் கொடுக்கவோ நேர்மையாக நடக்கவோ முன்வராதபோதும், அவன் வாளேந்தும் போதும், இருதரப்பு மனிதர்களும் அவ்வப் போது ஆங்காங்கு இரத்தம் சிந்தவேண்டிய கட்டாயம் நேர்ந்து விடுகிறது. இப்படித்தான் நாம் முடிவு செய்யவேண்டுமே தவிர, காந்தியடிகளின் அகிம்சை வழி பயனற்றது என்பதாக அன்று.

    மதுரையைச் சேர்ந்த பேராசிரியை திருமதி. சந்திரா எடுத்துக் காட்டிய, வாஞ்சி அய்யர் இறந்தபோது அவர் மனைவி கருவுற்றிருந்தார் எனும் உண்மை இதில் இடம்பெறுகிறது. அவருக்கும் அதை உறுதிப்படுத்திய திரு. ‘ரகமி’ அவர்களுக்கும் எனது நன்றி.

    சுதந்திர தின விழாவைக் காண தில்லி சென்ற மூன்று கதைமாந்தர்கள் ஊரைச் சுற்றிப் பார்க்கும்போது ராஜ்காட் எனும் இடத்துக்குப் போவதாகக் கதையில் வருகிறது. இது தவறு என்பதாய் ஒரு வாசகர் சுட்டிக் காட்டியதாய்த் தெரிய வந்துள்ளது. ஆனால் அவரது கூற்றே தவறானதாகும். எப்படியெனில், ராஜ்காட் என்பது பன்னெடுங்காலமாக யமுனை ஆற்றின் கரையில் இருந்துவரும் வரலாற்றுப் புகழ்வாய்ந்த அரச பரம்பரையினரின் இடுகாடு ஆகும். அது தில்லி செல்லும் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்கும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களில் ஒன்றாக இருந்து வந்துள்ள செய்தி Mr. S. Reuben என்பவரால் 1939ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டு The Indian Commercial Agency (Fort, Bombay) எனும் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட A Guide for Travellers in India என்கிற நூலில் காணக் கிடைக்கிறது. இதன் ஜெராக்ஸ் நறுக்கு இணைப்பு 1 ஆக இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே பிரசித்திபெற்ற ராஜ்காட்டில் காந்தியடிகளுக் கும் எரியூட்டப்பட்டது என்பது உண்மையே தவிர காந்தியடிகள் அங்கு எரியூட்டப்பட்டதன் பிறகுதான் அது புகழ் பெற்றது என்பது தவறாகும். ராஜ்காட் அதற்குப் பிறகு மேலும் புகழ் பெற்றது என்பதே உண்மையாகும். ராஜ்காட்டுக்கு ஏற்கெனவே இருந்த வரலாற்று முக்கியத்துவம் காந்தியடிகளுக்கு அங்கே சமாதி ஏற்பட்ட பிறகு அடிபட்டுவிட்டது! அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது!

    ராஜ்காட்டின் தொன்மையான வரலாற்றுப் பின்னணி தெரியாததால், நான் எழுதியதைத் தவறென்று நினைத்துச் சுட்டிக்காட்டிய அன்பருக்கு எனது இரட்டிப்பு நன்றி. இவரைப் போன்றே நினைத்திருக்கக்கூடிய மற்றவர்களுக்கும் இவ்விளக்கத்தின் வாயிலாக உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வாய்ப்புக் கிடைத்ததல்லவா!

    நண்பர் திரு. ப. சுந்தரேசன் அவர்கள் Profiles of Gandhi எனும் நூலிலிருந்து கீழ்வரும் பகுதியை எடுத்தெழுதி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

    Gandhi died almost instantly, on Friday, January 30, 1948, at Birla House, New Delhi, shortly after 5.30 p.m.... several miles from the sacred Jamuna river ... and the funeral cortege, two miles long made its way 5% miles during more than four hours to RAJGHAT where the body was cremated. (Article by Homer A. Jack from the above said book edited by Norman Cousins and published by India Book Co., Kashmere Gate, Delhi - 6)

    திரு. சுந்தரேசன் அவர்களுக்கும் எனது நன்றி.

    மதுரை சர்வோதய இயக்கத்தைச் சேர்ந்த உயர்திரு. திருமலை அவர்கள் அடிக்கடி கடிதமெழுதி உற்சாகப்படுத்தினார்கள். அவருக்கும் நன்றி.

    அடுத்து, தேசபக்தர்களின் தபால்தலைகளுடன் தபால் இலாகா அவ்வப்போது வெளியிட்ட தகவல் தாள்களைக் கொடுத்து உதவிய தபால் அலுவலக ஆய்வாளர் திரு. எஸ். ராஜகோபால் அவர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

    பழைய தமிழ் இதழ்கள் பற்றிய விவரங்களை எனக்குக் கொடுத்து உதவிய ராணி வார இதழின் முந்தைய ஆசிரியர் திரு. அ மா சாமி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. நாவல் போட்டி நடுவர்கள் டாக்டர் விக்கிரமன், கவிஞர் மு.மேத்தா, கல்கி ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர்க்கும், 1995இல் இதனை முதலில் வெளியிட்ட வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கும், கடிதங்கள் எழுதிய வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி.

    தங்களுக்கே உரிய தனிச்சிறப்புடன் தற்போது இதனை வெளியிடும் கவிதா பப்ளிகேஷன் திரு. சேது சொக்கலிங்கம் அவர்களுக்கு நான் மிகப் பெரிய அளவில் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அழகிய அட்டைப்படம் வரைந்துள்ள ஓவியர் திரு. ஷ்யாம் அவர்களுக்கும் எனது நன்றி.

    ஜோதிர்லதா கிரிஜா

    காணிக்கை

    என் தந்தை வத்தலக்குண்டு சாரணத் தலைவர்,

    பள்ளி ஆசிரியர், திரு. வ.அ. சுப்பரமணியம்,

    என் மானசிக ஆசான் அமரர், பேராசிரியர் கல்கி மற்றும்

    வரலாற்று நூல்களில் இடம் பெறாத தியாகிகள்,

    இடம் பெற்ற தியாகிகள் ஆகியோர்க்கு

    1

    பெரியப்பா இல்லாத வாசற்பக்கம் வெறிச்சோடிக் கிடந்தது. தமது சாய்வு நாற்காலியில் ஒரு சிங்கம் மாதிரி அவர் உட்கார்ந்திருப்பது வழக்கம். எதனாலோ அவரைப் பார்க்கும் பலருக்கு சிங்கம் ஞாபகமே வந்தது. மற்ற பலருடைய விமரிசனம் இது என்பதோடல்லாமல், எங்கள் வீட்டிலேயேகூட எல்லாருக்கும் அப்படித்தான் ஒரு நினைப்பு வரும். படிக்கட்டு வெட்டா, பாகவதர் முடிவெட்டா என்று திட்டவட்டமாய்ச் சொல்ல முடியாத பாணியில் பிடரியில் இரண்டு அங்குல அளவுக்குத் தொங்கிப் புரளும் தலைமுடி அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றோ என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவதுண்டு. இது தவிர, இன்னதென்று விண்டு விவரிக்க முடியாத ஒரு கம்பீரம் அவரது முழுத் தோற்றத்திலும் அகன்ற கண்களிலும் குடிகொண்டிருந்தது. பெரியப்பாவுக்கு அகலமான சதுர முகம். தடிமனான புருவங்கள். ஒரு புருவம் சற்று ஏற்றமாக இருக்கும். தீவிரமாக எது குறித்தாவது அவர் பேசுகையில் அந்தப் புருவம் மேலும் ஏற்றம்கொண்டு அவரது முகத்துக்கு ஒரு தனிக்களையைத் தரும். சற்றே மேடிட்ட அகலமான நெற்றி. எப்போதும் அதில் ஒரு சந்தனப் பொட்டு காலையில் குளித்ததும் அவர் வைத்துக்கொள்ளும் அந்தச் சந்தனப்பொட்டு இரவில் படுக்கப்போகுமுன் அவர் முகங்கழுவிக்கொள்ளுகிற வரையில் அப்படியே இருக்கும். ‘அதென்ன பெரியப்பா, உங்க சந்தனப்பொட்டு அழியாம ராத்திரி நீங்க படுக்கப்போற வரைக்கும் அப்படியே இருக்கு? அதென்ன அஜந்தா பாணிப் பொட்டா?’ என்று நாங்கள் அவரைக் கலாட்டாப் பண்ணுவது உண்டு. அதற்கு அவரது பதில் ஒரு புன்சிரிப்புத்தான்.

    எனக்கு நினைவு தெரிந்து எதற்கும், யாரையும் அவர் கோபித்துக்கொண்டு பார்த்ததே இல்லை. அவருக்கு மனைவி இல்லை; மக்கள் இல்லை. மனைவி மக்கள் இல்லாதவர்கள் சினத்தை வெளிப்படுத்துவதற்கான வடிகால் அற்றவர்கள் என்பது பெரியப்பாவின் விஷயத்தில் காரணமாகாது. ஏனெனில், அவருக்கென்று குடும்பம் இருந்தாலும்கூட, அவரால் யாரையும் கோபிக்கவே முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். முகத்தில் அப்படி ஒரு சாந்தம். கண்களில் அமைதி, உதடுகளில் அரைச் சிரிப்பு. பேச்சில் நிதானம். எங்களில் யாரையேனும் எதற்கேனும் கண்டிக்கும்போது கூட அந்தக்குரல் உயர்ந்து ஏற்றம் பெற்றதில்லை. அவரது பேச்சுக்கு எப்போதும் ஒரே சுருதிதான் - குறிப்பிட்ட சுருதியில் மட்டும் சாதகம் செய்து பழகிய பாகவதரைப் போல் எங்கள் அப்பாவைவிட அவர் அதிக உயரம். அப்பா ஐந்தடி பத்தங்குலம். பெரியப்பா ஆறடி ஒர் அங்குலம். உயரத்துக்கு ஏற்ற பருமன். அவர் வந்து நின்றாலே அந்த இடம் நிறைந்து போகும். அப்படி ஒர் ஆளுமை கொண்டவர். அறுபதுக்குப் பிறகுதான் அவருக்குத் தலையில் ஆங்காங்கு வெள்ளி முளைக்கத் தொடங்கியது. நாங்கள்கூட அவ்வப்போது, ‘என்ன பெரியப்பா, உங்கள் தலை கருகருவென்று இருக்கிறது’? டை’ அடித்துக் கொண்டிருக்கிறீர்களா? என்று நரை வருவதற்கு முன்னால் அவரைச் சீண்டிச் சதாய்த்தது உண்டு.

    அறுபது வயதில் ஐம்பதுக்குக் கீழே வயசு மதிப்பீடு செய்யத்தக்க வகையில் அவரது உடற்கட்டு இருந்தது அவரது இடைவிடாத யோகப் பயிற்சியின் விளைவு என்பது எங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, ஊர் முழுவதற்கும் தெரியும். பெரியப்பாவுக்கு மற்போர் தெரியும். சிலம்பம்கூட ஆடத் தெரியும். சிலம்பம் ஆடக் கற்றுத் தருவதாய்ச் சொல்லி என்னைக்கூட ஒரு தரம் அழைத்திருக்கிறார். நான் தான் அக்கறை காட்டவில்லை.

    காலியாக இருந்த அந்த நாற்காலியைப் பார்த்தபோது மனத்தை என்னவோ செய்தது. பெரியப்பா தலைவலி, கால்வலி என்று சொன்னதே இல்லை. இப்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டன என்பதை ஏற்கவே முடியவில்லை. ஒருவேளை இது இவருக்கு இறுதி வேளையாக இருக்குமோ? கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. உடம்புக்குச் சீக்கே வராமல் நன்றாக நடமாடிக்கொண்டிருப்பவர்கள் படுக்கையில் விழுந்தால் பொக்கென்று போய்விடுவார்கள் என்று அம்மா வேறு அடிக்கடி சொல்லிப் பயமுறுத்திக்கொண்டிருந்தார். அம்மாவுக்குப் பெரியப்பாவின் மீது கொள்ளை அன்பு. கணவரின் தமையன் என்கிற உறவைக் காட்டிலும் அவர் தனக்கே தமையன் என்கிற எண்ணத்தோடு அம்மா அவருடன் பழகி வந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து அம்மாவின் முகத்தில் களையே இல்லை. அம்மாவுக்கு இலேசில் கவலை வராது. வந்தது என்றால், விளைவு மோசமானதாகத்தான் இருக்கும். அம்மாவின் இந்த உள்ளுணர்வின் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையால் பெரியப்பா பற்றிய கவலை எங்கள் எல்லாருக்குமே ஏற்பட்டுவிட்டது.

    எங்கள் அப்பா மிக மோசமான நிலையில் சென்ற ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அம்மா கலங்காமல் இருந்தார். கண்களில் துளி கலக்கம் இருக்கவேண்டுமே! எங்களுக்கெல்லாம் வியப்பான வியப்பு அம்மாவின் கவலையற்ற மனநிலை தவறானதன்று என்பதை மெய்ப்பிப்பதுபோல் அப்பா முழு நலத்துடன் திரும்பிவந்தார். ஆனால், இதே அம்மா எங்கள் அத்தைக்கும் அண்ணாவுக்கும் உடம்பு சரி இல்லாமற்போனபோது கலங்கிப்போனார். விளைவும் சாவாகவே இருந்தது. இதை நினைத்துத்தான் அம்மாவின் உள்ளுணர்வின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அம்மாவின் கலங்கிய விழிகள் பெரியப்பா காலமாகிவிடுவார் என்பதை உணர்த்தியதாக நான் நினைத்தேன். எனினும் எப்போதுமே அம்மாவின் உள்ளுணர்வு சரியாகத்தான் இருக்கும் என்று ஏதேனும் சட்டமா என்ன என்று என்னை நானே கேட்டுக்கொண்டு அமைதியடைய முயன்றேன்.

    கிட்டு!

    அம்மாவின் அழைப்பால் எண்ணங்கள் கலைந்து தலை உயர்த்திப் பார்த்தேன். மருத்துவ விடுதியிலிருந்து திரும்பி இருந்த அம்மா, கால் செருப்புகளை உதறியபடி ‘உன்னைப் பெரியப்பா வரச்சொன்னார். உடனே போ", என்றார்.

    எனது நெஞ்சு அடித்துக்கொண்டது எனக்கே கேட்கிற மாதிரி ஆயிற்று.

    ஏம்மா? விபரீதமா எதாவதா?

    நல்ல ஞாபகத்தோடதான் இருக்கார். நன்னாப் பேசறார். குரல் மட்டும் கொஞ்சம் கம்மினாப்ல இருக்கு. ஆனாலும் உற்சாகமாத்தான் இருக்கார். உன்னோட என்னவோ விவரமாப் பேசணுமாம்!

    அம்மா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே நான் எழுந்து விட்டேன்.

    இதோ, ரெண்டே நிமிஷத்துல கெளம்பிடறேம்மா. நான் போறப்போ ஏதாவது எடுத்துண்டு போகணுமா?

    இல்லே.

    அம்மா... அப்பா அங்கதானே இருக்கார்?

    ஆமா. சரி, நீ கெளம்பு சொல்றேன்.

    அம்மாவின் குரலில் தொனித்த அவசரம் பொருள் பொதிந்த ஒன்றாய்த் தோன்றி எனது முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்தது. நான் ஒரு திடுக்கீட்டுடன் தலை உயர்த்தி அம்மாவைப் பார்த்தபோது, அம்மா தன் கலங்கிவிட்ட கண்களை நான் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தைச் சட்டென்று திருப்பிக்கொண்டு அப்பால் நகர்ந்துவிட்டார்.

    அடுத்த நிமிடத்தில் நான் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு எனது கைப்பையுடன் படி இறங்கிக் கொண்டிருந்தேன்.

    மருத்துவமனையில் பெரியப்பாவின் அறையை நான் அடைந்தபோது, அவர் விழித்துக்கொண்டுதான் படுத்திருந்தார். என்னைப் பார்த்ததும் அகத்தின் மலர்ச்சி தமது பரந்த முகத்தில் பெரிய புன்னகையாய் மின்ன, அவர் சற்றே முதுகை நிமிர்த்திக் கொண்டு உட்கார முயன்றார்.

    படுத்துக்குங்கோ பெரியப்பா, களைப்பாத் தெரியறேள், படுத்துங்குங்கோ, என்றவாறு நான் அவரது கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த உயர்ந்த முக்காலியில் உட்கார்ந்தேன்.

    அப்பா எங்கே?

    படுத்துப் படுத்து முதுகே மரத்துப் போயிட்ட மாதிரி இருக்கு, என்ற பெரியப்பா, ‘ரமணி பாத்ருமுக்குப் போயிருக்கான்!" என்றார் சற்றே சாய்ந்து உட்கார்ந்தவாறு.

    கழிவறையின் கதவைத் திறந்துகொண்டு அப்போது வெளியே வந்த அப்பா, ‘அப்ப நான் கெளம்பட்டுமா, கிட்டு?" என்றார்.

    சரிப்பா நான் இருக்கேன் இங்க, என்று நான் சொன்னதும் அப்பா, ‘ராத்திரி நீயே இன்னிக்குப் படுத்துக்கறயா?" என்று கேட்டார்.

    சரிப்பா.

    அப்ப ராத்திரி உனக்குச் சாப்பாடு? அம்மா அதைப்பத்தி எதுவும் சொல்லல்லையா?

    மறந்து போயிருப்பா, எனக்கும் தோணல்லே. சாப்பாட்டுக்கு என்னப்பா? அதுக்குன்னு மெனக்கெட்டு நீங்க வரவேண்டாம். நான் இங்கேயே பக்கத்துல எங்கயாவது ஒரு ஒட்டல்ல பார்த்துக்கறேன். நீங்க போயிட்டு வாங்கோ.

    அப்ப நான் வரட்டுமாண்ணா?

    செய்.

    அப்பா தம் கைப்பையுடன் கிளம்பினார். போவதற்கு முன்னால் என்னைப் பார்த்துக் கண்களாலேயே விடை பெற்றார். கண்களில் நீர் வரி இட்டிருந்ததைப் பார்த்தபோது வாய் திறந்து பேசமுடியவில்லையோ என்று எண்ணிக்கொண்டேன்.

    இதோ வந்துட்டேன், பெரியப்பா! என்று சொல்லிவிட்டு அப்பாவுக்குப் பின்னால் போனேன்.

    டாக்டர் என்ன சொல்றார், அப்பா?

    அப்பா தமது வயதை மறந்து அழத் தொடங்கினார்.

    என்னப்பா இது?

    வராந்தாவின் ஒரமாக நின்று அழுது கண்களைத் துடைத்துக் கொண்ட பிறகு, ‘அதிகம் போனா இன்னும் ஒரு வாரம்னுட்டார்டா!" என்று குழறிய குரலில் ஒரு வழியாகச் சொல்லி முடித்துவிட்டு மேற்கொண்டு நான் பேசுவது அவரை மேலும் அழச்செய்துவிடும் என்பதாலோ என்னமோ விடுவிடுவென்று நடந்து போய்விட்டார். அவரது முதுகைப் பார்த்தபடி நான் அப்படியே நின்று போனேன்.

    "ராமனும் லட்சுமணனும் சரித்திர நாயகர்கள் மட்டும்தானா? இல்லே, அசல் வாழ்க்கையிலும் உண்டு என்கிற எண்ணமே அந்தக் கணத்தில் என் உள்ளத்தில் எழுந்தது. அப்பாவிடமிருந்து என்னைத் தொற்றிக்கொண்ட அழுகை இப்போது வெடித்துப் புறப்பட்டது. வராந்தாவில் நின்றுகொண்டு அழ வெட்கமாக இருந்தது. பெரியப்பாவின் அறைக்குள் நுழைவதற்கோ இன்னும் அதிகக் கூச்சமாக இருந்தது. வராந்தாவின் கோடியில் இருந்த பொதுக் கழிவறைக்குள் போய்க் கொஞ்ச நேரம் அழுது, முகம் கழுவிக் கொண்டு ஓரளவுக்கு என்னைச் சரிப்படுத்திக்கொண்ட பிறகு பெரியப்பாவின் அறையை அடைந்தேன்.

    ஏன் இவ்வளவு நேரம்? உங்கப்பா ஏதாவது கதை சொன்னானா? ஏண்டா?

    நான் பதில் சொல்லாமல் முக்காலியில் உட்கார்ந்தேன். ‘இந்தக் கேள்விக்கு என்ன சொல்ல? நீங்க இருக்கப் போறது அதிகபட்சம் இன்னும் ஒரு வாரந்தான்னு டாக்டர் சொன்னதா அப்பா சொன்னார். அழுதார். நானும் அழுதுட்டு வந்தேன்’ என்றா?’ நான் பதில் சொல்லாமல் இருந்தேன். ஆயினும் என் கண்களும் குலுங்கிய தோள்களும் பதில் சொல்லிவிட்டன. பெரியப்பா சாய்ந்து என் கன்னத்தில் தட்டினார். பிறகு தோளைத் தொட்டார்.

    அட, அசட்டுப்பயலே! ஆம்பளையா நீ?

    சட்டைப் பையிலிருந்து கைக்குட்டை எடுத்துக் கண்களை ஒற்றித் துடைத்துக் கொள்ளும் வரையில் அவர் என் தோள்மீதிருந்த தமது கையை எடுக்கவில்லை.

    அழுது முடிச்சாச்சா? இல்லே, இன்னும் பாக்கி இருக்கா?

    "உங்களுக்கு விளையாட்டா இருக்கு, ஆனா எங்களுக்கோ உங்களைப் பிரியப் போறமேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கிறது!’ இப்படிச் சொல்ல ஆசைப்பட்டாலும், நாவு புரளவில்லை.

    கிருஷ்ணா, இத பாரு. எனக்கு என்ன வயசு?

    இதற்கும் நான் பதில் சொல்லவில்லை.

    நான் பிறந்தது 1905ஆம் வருஷம். அக்டோபர் மாசம், பதினாறாந்தேதி, அன்னிக்குத்தான் வெள்ளைக்காரன் பெங்காலை ரெண்டா உடைச்சான்! - எதைச் சொன்னாலும் முடிந்த அளவுக்கு அதில் சரித்திர நிகழ்ச்சியைக் கலக்காமல் பேசப் பெரியப்பாவுக்குத் தெரியாது.

    இன்னிக்கு என்ன தேதி? டிசம்பர் பதினெட்டு, 1985! காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு கொண்டாடிண்டிருக்கிற வருஷம், அப்ப எனக்கென்ன வயசு இப்ப? எண்பது முடிஞ்சுடுத்து. இத்தனை வயசுக்கு மேலயும் நான் இந்த உலகத்துல - இன்னும் சொல்லணும்னா - இந்த நாட்டிலே - நான் வாழனுமா?

    "இந்த நாட்டிலே’ என்கிற இரண்டு சொற்களில் பெரியப்பாவின் ஏமாற்றம் முழுவதும் வெளிப்பட்டது எனலாம். எனக்கு நினைவு தெரியத் தொடங்கியதிலிருந்து பெரியப்பா ஆட்சியாளர் களைத் திட்டாத நாளே இருந்ததில்லை எனலாம். ஆனால் இப்போது தமது இறுதி நாளில் படுகிடையாய்ப் படுத்துக்கொண்டு அவர் சொன்ன அந்த வாக்கியம் சாபம் கொடுப்பதுபோல் இருந்தது. நான் பேசாதிருந்தேன்.

    கிருஷ்ணா நீ எனக்கு ஒரு உதவி பண்ணணும். என் தோள் மீதிருந்த தமது கையை அகற்றிக்கொண்டு உட்கார்ந்தார்.

    சொல்லுங்கோ பெரியப்பா!

    உனக்கு எவ்வளவு செர்வீஸ் ஆறது?

    இருபத்துநாலாவது வயசுல வேலைக்கு வந்தேன். அதாவது 1979இலே. இப்ப 1985 இல்லியா? அப்ப ஆறு வருஷம் ஆறது, பெரியப்பா.

    உனக்கு ஒரு ரெண்டு மாசம் போல லீவ் கிடைக்குமா?

    எதுக்கு, பெரியப்பா? - டாக்டர் அதிக பட்சம் ஒரு வாரம் என்று கெடு வைத்திருக்கிறார். இவரோ இரண்டு மாத விடுப்புக் கிடைக்குமா என்று கேட்கிறாரே? எதற்காக இருக்கும்? உடம்பு சரியானதும் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறாரா?

    உனக்கு ரொம்ப பெரிசா ஒரு எழுத்து வேலை தரலாம்னுட்டு. ஆபீஸ் போயிண்டு வந்துண்டெல்லாம் அந்த எழுத்து வேலையைச் செய்ய முடியாது, கிருஷ்ணா! முதல்ல நிறையப் படிக்கவேண்டியது இருக்கு படிச்சுட்டு ஒரே முனைப்பா உக்காந்து தொடர்ச்சியா எழுதினாத்தான் அது சரியா அமையும். என்ன சொல்றே?

    என்ன எழுத்து வேலை தரப்போறேள், பெரியப்பா?

    ஒரு பெரிய நாவல் எழுதற வேலை.

    என்னது? நாவல் எழுதற வேலையா? எனக்கா?

    ஆமாண்டா, உனக்கேதான்! என்ன அப்படி பிசாசைப் பார்க்கிற மாதிரி கண்ணை விரிச்சுண்டு பார்க்கறே?

    என்ன சொல்றேள், பெரியப்பா? புரியும்படியாச் சொல்லுங்கோ.

    நம்ம வீட்டுக்கூடத்துப் பரண்ல கிழக்குப் பக்கத்துச் சுவரோரமா சில டயரிகள் இருக்கு டயரின்னா இப்ப வர்ற மாதிரி ப்ரிண்டட் டயரிகள் இல்லே. பைண்ட் பண்ணின நோட்புக்ஸ். ஒவ்வொரு நோட்புக்கோட அட்டையிலயும் அது இன்ன தேதி தொடங்கி இன்ன தேதி வரைக்கும் முடியறதுங்கிறதை எழுதி இருக்கேன். அதை எழுத ஆரம்பிச்சது 1920ஆம் வருஷம் ஒண்ணாந் தேதியன்னிக்கு - அதாவது திலகர் செத்துப்போன நாள்! நாடே திமிலோகப்பட்டுது அன்னிக்கு...

    பழைய ஞாபகங்களில் ஆழ்ந்தவராய்ப் பெரியப்பா சில நொடிகளை மவுனத்தில் கழித்துவிட்டுத் தொடர்ந்தார்.

    சுதந்திரம் அடையறதுக்காக அந்தக் காலத்துல எத்தனை மனுஷா எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டா, எப்படி எப்படி யெல்லாம் தியாகங்கள் பண்ணிணாங்கிறதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு சுத்தமாத் தெரியல்லே. ஸ்கூல் பாடத்திலே ருந்து இண்டியன் ஹிஸ்டரிங்கிற சப்ஜெக்டையே கம்ப்ளிட்டா எடுத்துட்டான். அரையுங்குறையுமா ஏதோ சொல்றான்!

    நான் எழுதவேண்டியது நாவலா, இல்லே ஹிஸ்டரியா பெரியப்பா? தெளிவாச் சொன்னா தேவலே.

    ரெண்டுந்தாண்டா, அதாவது சரித்திர நாவல்ங்கிறா ளோல்லியோ? அது.

    பெரியப்பா, எம்மேல உங்களுக்கு இருக்கிற நம்பிக்கைக்காக உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ். ஆனா நீங்க வெச்சிருக்குற டயரிக் குறிப்புகளை வெச்சு ஒரு நாவல் எழுதறதுக்கு வேண்டிய சாமர்த்தியமெல்லாம் எனக்குக் கிடையாது.

    அதுகள்ளாம் வெறும் டயரிக் குறிப்புன்னு யாருடா சொன்னது? ரத்தம், சத்தம், சிரிப்பு, வெறுப்பு, சோகம் மோகம்...

    அப்புறம், பாசம், மோசம், வேஷம், கோஷம்... என்று நான் தொடர பெரியப்பா வாய்விட்டுச் சிரித்தார்.

    நீ இப்படியெல்லாம் தமாஷ்க்காகச் சொன்னாலும் இதெல்லாமும் அதுல இருக்குடா, கிருஷ்ணா. தேசப் போராட்ட இயக்கமே முதல்ல கோஷத்துலதானே ஆரம்பிச்சுது? நிறைய வேஷங்களும் இருக்கு. உன்னோட விளையாட்டை ஒதுக்கி வெச்சுட்டு இப்ப நான் சொல்லப் போறதை நீ கேக்கணும்... என்ற பெரியப்பா சட்டென்று கண் சிமிட்டி, ‘ஏன்? காதல்கூட இருக்கு..." என்றார்.

    அப்ப மோதலும் இருக்கணுமே?

    இல்லாமயா? இருக்கு இருக்கு, நவரசமும் இருக்கு நீ என்ன பண்றே, எல்லா டயரிகளையும் வரிசையா முதல்ல படிக்கிறே. அப்படிப் படிச்சு முடிச்சதும் உனக்குள்ள ஒரு களம் நிச்சயமா உருவாகும். நாவல் எழுதணும்கிற எண்ணத்தோட படிக்கனும்கிறது ரொம்ப முக்கியம். அதுல கதாநாயகன் யாரு தெரியுமோ?

    என்னோட பெரியப்பாதான்! வேற யாரு? அது சரி, கதாநாயகி யாரு? என்று நான் கண் சிமிட்ட, பெரியப்பா சிரித்துக்கொண்டார்.

    பிறகு வெட்கத்துடன், ‘எல்லாம் அந்த டயரியிலேயே இருக்குடா, நீங்கள்ளாம் நெனச்சுண்டிருக்கிற மாதிரி உங்க பெரியப்பா ஒண்ணும் நித்திய பிரும்மசாரி இல்லே...! இதுக்கு மேல நான் அதைப் பத்தி ஏதும் சொல்றதா இல்லே. சொன்னா சுவாரசியம் போயிடும். நீயே படிச்சுத் தெரிஞ்சுக்கோ."

    ... எண்பது வயதுக்கு அவர் வெட்கப்பட்டது ரொம்ப அதிகம்தான். நீண்ட நெடுங்காலத்துக்கு ஒருவரின் அந்தரங்கங்களும் அவற்றைத் தொடரும் கூச்சங்களும் வெளிப்பாடின்றி அமுக்கப்பட்டு வரும்போது, அவற்றின் திடீர் வெளிப்பாடு அவரை வயதுக்கு மீறிய வெட்கத்தில் ஆழ்த்தும் போலும் என்றுதான் தோன்றியது.

    அது சரி, அந்தக் கதாநாயகிக்கு இப்ப எழுபது வயசுக்கு மேல இருக்குமா? அவங்களும் பிரும்மசாரிணியா இருந்துட்டாங் களா, இல்லே பேரன் பேத்திகளோட குஷாலா இருந்துட்டிருக்காங்களா?

    அதெல்லாமே அந்த டயரிகள்ள இருக்குடா, கிருஷ்ணா! என்னை ரொம்பவும் பேச வைக்காதேப்பா. டாக்டர் அதிகமாப் பேசக்கூடாதுன்னிருக்கார் என்ன?

    சாரி, பெரியப்பா. இன்னும் ஒரே ஒரு கேள்வி.

    கேளு.

    உங்க இந்த அந்தரங்கம் அப்பாவுக்கெல்லாம் தெரியுமா?

    நீ கேக்க நினைக்கிற ஒவ்வொரு கேள்விக்கும் அதுல பதில் இருக்குடா, அதுக்குள்ள பொறுமை இல்லே, பாரேன்... படிச்சதும், எந்த முறையில நாவல் எழுதப்போறே?

    என்ன கேக்கறேன் பெரியப்பா? புரியல்லே.

    நானே என் கதையைச் சொல்ற மாதிரி ஃபர்ஸ்ட் பெர்சன்ல எழுதப் போறியா, இல்லே ஒரு எழுத்தாளன் என்னோட கதையை மத்தவாளுக்குச் சொல்றமாதிரி தேர்ட் பெர்சன்லயா?

    நீங்க எப்படி சொல்றேளோ அப்படி

    பெரியப்பா கொஞ்சம் யோசித்தார். வலப்புருவம் இன்னும் மேலே சென்றது. சில நொடிகள் கழித்து, ‘இதுல சில சவுகரியங்கள் இருக்குன்னா, அதுல சில சவுகரியங்கள் இருக்கு. இதுல சில அசவுகரியங்கள் நிச்சயமா இருக்கு - எதுலேன்னா, நானே என் கதையைச் சொல்ற மாதிரி எழுதறதுல இதுல வாசகர்களோட ஒரு நெருக்கம் ரொம்ப அதிகமா ஏற்படக்கூடிய லாபம் இருக்குன்னாலும், மத்த பாத்திரங்களோட உணர்ச்சிகளை நான் ஊகிக்கற மாதிரிதான் சொல்ல முடியுமே தவிர, அவாளோட எண்ணங்களை அப்படியே வாசகர்களுக்கு எடுத்துண்டு போக முடியாது, இல்லியா?"

    ஆமாம், பெரியப்பா. நீங்களே கூட அதை எழுதி இருந்திருக்கலாம்.

    என்னமோ, எழுதணும்னு தோணல்ல, எழுதல்ல, இப்பவாவது தோணித்தே... அந்த டயரியில 1920ஆம் வருஷம் ஆகஸ்டு ஒண்ணாந்தேதியிலேருந்து ஆரம்பிச்சு எல்லாத்தையுமே எழுதி இருக்கேன். இருந்தாலும், சில புத்தகங்கள் இருக்கு ஒரு நல்ல லைப்ரரியில கிடைக்கும். ஹிஸ்டரி பிரிவுல கிடைக்கும். அது களையும் படிச்சா உனக்கு ஒரு கரு உருவாகும்... நூல் நிலையங்கள் பற்றி எதுவுமே தெரியாத ஒருவனுக்குச் சொல்லுவதுபோல் பெரியப்பா சொன்ன யோசனையை நான் குற்றமாய்க் கருதவில்லை.

    என்னிக்கு டயரிகளைப் படிக்க ஆரம்பிக்கிறே?

    "உங்க உடம்பு முதல்ல சரியாகட்டும், பெரியப்பா!’

    நான் என்ன சின்னக் குழந்தையா? எனக்கு நீ தைரியம் சொல்றியா இப்ப? மை டெய்ஸ் ஆர் நம்பர்ட் ஐ நோ இட் நோ டாக்டர் நீட் டெல் மி தட் (நான் இன்னும் சில நாள்தான் இருப்பேன்னு எந்த டாக்டரும் சொல்லாம எனக்கே தெரியும்.) என்ன, புரிஞ்சுதா? என்னோட ஒரே கடைசி ஆசை பத்துநாள் இருபது நாள்னு இழுத்திண்டிருக்காம ரெண்டொரு நாள்ள நான் போயிடணும். கிருஷ்ணா! இந்த உலகத்துல மனுஷனாய்ப் பொறந்த ஒவ்வொருத்தனுக்கும் வேற எந்த லட்சியம் இருந்தாலும் இருக்காட்டாலும் நான் இப்ப சொல்லப் போற ஒரே ஒரு லட்சியமாவது இருந்தே ஆகணும்... அதாவது முடிஞ்சா மத்தவாளோட சுமைகளை நாம தாங்கிக்கப் பார்க்கணும். அது முடியல்லே, குறைஞ்சபட்சம் மத்தவாளுக்கு நாம சுமையா இல்லாமயாவது இருக்கணும்.

    என்ன பேசறேள், பெரியப்பா? நம்மாத்துல உங்களை யாராவது சுமையா நினைப்பாளா?

    யாரும் அப்படி நினைக்கவே மாட்டேள்னு எனக்கு நன்னாத் தெரியும்டா. இருந்தாலும் எனக்குன்னு ஒரு எண்ணம் இருக்குமோல்லியோ? பாவம், உங்கம்மா. போன ஜென்மத்துல எனக்குத் தங்கையாவோ அக்காவாவோ இருந்திருக்கணும்... மத்த எல்லாரையும்விட நான் படுத்துண்டதுல அவளுக்குத்தான் ரொம்பப் பாடு.

    அம்மா காது பட இப்படியெல்லாம் சொல்லாதீங்கோ, பெரியப்பா, ரொம்ப வருத்தப்படுவா.

    பெரியப்பாவின் கண்கள் இலேசாய்ச் சிவந்தன...

    மறுநாள் பெரியப்பா தூக்கத்திலிருந்து கண் விழிக்கவே இல்லை. அதிக வலிதெரியாத சாவு என்று டாக்டர் சொன்னபோது எங்கள் சோகத்தை மீறிய மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம்.

    2

    பெரியப்பாவின் நாற்காலி இப்போது நிரந்தரமாய்க் காலியாகிவிட்டது. அகலமான அடிப்பாகமும் நெடிய முதுகும் உள்ள அந்த நாற்காலியில் உட்கார யாருமே துணியவில்லை. அது எங்கள் வீட்டில் ஒரு காட்சிப் பொருளாகியது. பெரியப்பா நாற்காலி என்று பெயர் பெற்றது. பரணிலிருந்து டயரிகளை எடுத்து ஒவ்வொன்றாக அந்த நாற்காலியில் வைத்து எதிரே அதை விடக் குட்டையான நாற்காலியில் அமர்ந்து படிக்கத் தொடங்கினேன்.

    பெரியப்பாவின் கடைசி ஆசை பற்றி அம்மாவிடம் சொன்னேன். அம்மா பெரியப்பாவைப் பற்றிய சில அந்தரங்கங்களைச் சொன்னார். அப்பா சில முக்கியமான விவரங்களைத் தெரிவித்தார். டயரிகளில் அவரால் குறிப்பிடப்பட்டு தற்சமயம் உயிரோடு உள்ளுரிலும் அயலூரிலுமாக இருந்த சிலரைச் சந்தித்தும் பல விவரங்களைச் சேகரித்தேன். சிலர் இறந்துவிட்டிருந்தனர். இறந்து போனவர்களின் உறவினர்களைச் சந்தித்தபோது சில சந்திப்புகள் பயனுள்ளவையாக இருக்க, மற்றவை பயனற்றுப் போயின.

    பெரியப்பா சொன்னது சரிதான் என்பது அவருடைய டயரிகளைப் படித்து முடித்ததும் மிக நிச்சயமாய்த் தெரிந்தது - அது ஒரு நவரச நாவல் என்பது. ஒவ்வொரு டயரியாய்ப் படிக்கப் படிக்கக் கதை மெல்ல மெல்ல உருவாகிக்கொண்டே போயிற்று. நானும் பக்கத்தில் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது கதைக்கான குறிப்புகளை எழுதி வைக்கலானேன். அவர் சொன்னதுபோல் மேலும் சில தகவல்களைப் பெறச் சில புத்தகங்களைப் படிக்கவேண்டியதாயிற்று. அவற்றை யெல்லாம் விலை கொடுத்து வாங்கி வைத்துக்கொண்டேன். கதையை எழுதிக்கொண்டிருக்கும்போதே எழுகின்ற ஐயங்களுக் கெல்லாம் நூல் நிலையத்துக்கு ஒடிக்கொண்டா இருக்க முடியும்? அதனால்தான்.

    நாவலைத் தன்மைக் கூற்றில் சொல்லுவதா அல்லது படர்க்கையில் சொல்லுவதா என்பது பற்றிய விவாதம் வீட்டாருடன் அரைமணிபோல் நடந்தது. கடைசியில் படர்க்கையில் சொல்லுவது தான் சரியாக இருக்கும் என்று ஒரு மனத்துடன் முடிவு செய்யப்பட்டது. அம்முடிவை நானும் ஏற்றுக்கொண்டேன். பெரியப்பாவின் பெயர் கங்காதரன் என்பது. பால கங்காதர திலகர் ஞாபகமாக வைக்கப்பட்ட பெயர். நாவலில் பெரியப்பாவை அந்தப் பெயரிலேயே உலாவவிடலாம் என்பது ஒரு மனத்தோடு கூடிய முடிவாயிற்று பெரியப்பா தம் டயரிகளில் குறிப்பிட்டிருந்த நண்பர்களின் பெயர்களையும் மாற்றவேண்டாம் என்றும் தீர்மானித்தோம். அவர்களில் பலர் இறந்துவிட்டனர். சிலர் உயிருடன் உள்ளனர். எனது நாவல் வெளிவரும் நேரத்தில் அவர்களிலும் பெரும்பாலானவர்கள் காலமாகிவிடக்கூடும். எஞ்சுகிறவர்களில் எவரும் இதற்கு மறுப்புக் குரல் எழுப்பப் போவதில்லை. இது ஒன்றும் யாரையும் மறைமுகமாய்க் களங்கப்படுத்தப்போகிற கதை இல்லையே. மாறாக, பெருமைப்படுத்தப் போகிற கதைதானே?

    அவர் டயரிகளில் காணப்பட்ட செய்திகளுக்கு இருந்த இன்னொரு தனிச்சிறப்பு அவற்றை ஒரு நாவலாய்த் தொகுப்பதற்கு மசாலாச் சாமான்கள் சேர்ப்பது மாதிரி கற்பனையாய்ச் சில நிகழ்ச்சிகளையோ அல்லது கதைமாந்தர்களையோ புகுத்துவதற்கு எந்தத் தேவையும் இல்லாமல், அவற்றின் இயல்பான தொகுப்பே ஒரு நாவலின் சிறப்புகளை உள்ளடக்கி இருந்தது என்பதேயாகும். எனவே எனது வேலையெல்லாம் தேதிகளைச் சரிபார்த்தலும், நிகழ்ச்சிகளைத் தொகுப்பதும் மட்டுமாகவே இருந்தது.

    பெரியப்பாவின் சில எண்ணங்களைப் பொறுத்தமட்டில் மட்டுமே சற்றே குழப்பம் விளைந்தது. பழைய நாட்களின் எண்ணங்களை அவ்வப்போது எழுதாமல் கொஞ்ச நாட்கள் கழித்துப் பின்னொரு நாளில் அவர் அவற்றை எழுதியதால்தான் அந்தக் குழப்பம். எனவே டயரிகளையெல்லாம் வரிசையாகப் படித்தபோதே தேதிவாரியாகச் சிலவற்றைக் குறித்துக்கொள்ள நேர்ந்தது.

    எப்படியோ, கதையைத் தொடங்கிவிடப் போகிறேன். பெரியப்பா, இக்கதையில் விளையக்கூடிய குறைகளுக்கெல்லாம் நானே பொறுப்பாளி. நிறைகளுக்குரிய பெருமை உங்களையே சேரும்...

    இதோ! கதை தொடங்கிவிட்டது.

    வீட்டின் வெளித் தாழ்வாரத்தில் ராமசாமி கவலை படர்ந்து கிடந்த முகத்தைக் கைகளில் ஏந்தியவாறு உட்கார்ந்து கொண்டிருந்தார். உள்ளே இருந்து ‘குவா குவா’ சத்தம் கேட்கப் போகும் கணத்துக்காக ஆவலுடன் காத்திருந்தார். பிள்ளைப் பேற்று அறையிலிருந்து அவர் மனைவி குஞ்சம்மா வலி தாளாமல் நொடிக்கொரு தடவை குரல் எழுப்பியபோதெல்லாம் தமக்கும் வலிப்பது போன்று அவர் உடம்பைத் திருகிக்கொண்டிருந்தார். மனைவியின் மீது அவருக்கு அவ்வளவு அன்பு மனைவியின் ஒவ்வொரு பிள்ளைப்பேற்றின்போதும் ஒரு குற்ற உணர்வுக்கு ஆளாவது அவரது இயல்பாக இருந்து வந்தது. பிறந்த குழந்தைகள் தக்கி இருந்திருப்பின், அவர் ‘இரண்டுக்குப்பிறகு எப்போதும் வேண்டாமை’ எப்போதோ கடைப் பிடித்திருக்கக்கூடியவர்தான். ஆனால் ஆறு பிறந்தும் ஒன்றுகூடத் தக்கவில்லையே! இது ஏழாம் பிரசவம். இப்போது பிறக்கிற குழந்தையாவது தக்கினால் நன்றாக இருக்கும் என்று வேண்டியறியாத தெய்வங்களின் பெயர்களை யெல்லாம் சொல்லி வேண்டிக் கொண்டிருந்தார் - பிறப்பது பெண் குழந்தையாக இருந்தாலும் சரியே. அவரைப் பொறுத்தமட்டில் ஆண்-பெண் பேதமெல்லாம் இல்லை. ஆண்டவன் படைப்பில் யாரும் வரவேற்புக்குரியவரே என்பதே அவரது கருத்தாக இருந்தது. எனவே ஆவல், கவலை, அச்சம் கலந்த மனநிலையுடன் கண்மூடி அவர் ஒரு தவசியைப்போல் உட்கார்ந்திருந்தார்.

    அவருடைய அன்பு மனைவி சுமார் அரை மணிநேரம் யமனுடன் போராடியதற்குப் பிறகு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. கண்கள் இருக்கவேண்டிய இடங்களில் உண்டியலின் வாய்போன்ற கோடும், உதடுகள் இருக்கும் இடத்தில் சற்றே பெரிய உண்டியல் வாயும், மூக்கின் இடத்தில் இலேசான சதைப்புடைப்புமாக இன்னார் சாயல் என்பதைக் கண்டுபிடிக்க இயலாதவாறுதான் பிறந்த கணத்தில் குழந்தைகள் தோன்றுவார்கள். ஆனால் ஏழாவதாய்ப் பிறந்த இந்தக் குழந்தையோ அச்சு அவன் அம்மாவை அப்படியே உரித்து வைத்திருந்ததாய் எல்லாருக்குமே தோன்றியது. குண்டாக இருந்தது. ஆரோக்கியமாகத் தெரிந்தது. மூக்கும் முழியும் செதுக்கப் பட்டவை போன்ற கூர்மையுடன் காணப்பட்டன. உறுப்புகளின் அந்தச் செதுக்கப்பட்டது போன்ற தன்மையே குழந்தை போகப்போக மேலும் அழகனாகப் போகிறான் என்பதை அறிவுறுத்துகிற அடையாளமாய்த் தெரிந்தது.

    குவா குவா’ சத்தம் காதில் விழுந்ததுமே ராமசாமி வியர்வையால் பளபளத்த முகத்தை மேல் துண்டால் துடைத்தவாறு எழுந்து நின்றார். வாசலுக்கு வந்து அரைக்கதவு திறந்து எட்டிப் பார்த்த அவர் தமக்கை விசாலம், ‘பிள்ளைக் கொழந்தைடா, செக்கச்செவேல்னு மூக்கும் முழியுமா அப்படியே ஒம் பொண்டாட்டி மாதிரியே இருக்கான் போயேன். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறேன். அப்ப வந்து பாரு, என்ன? என்று விட்டு அவரது பதிலுக்கு நில்லாமல் கதவைச் சாத்தி முகத்தை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

    "இந்தக் குழந்தையாவது தக்குமா?’ - இதற்கு முன்னால் பிறந்தவை பெரும்பாலும் செத்தே பிறந்தன. ஆயுதம் போட்டு வெளியே எடுக்கப்பட்டன. இரண்டு மட்டும் உயிரோடு வந்தன. ஆனால் பிறந்த சில மணிப்பொழுதுக்குள் உயிரை விட்டன. இந்தக் குழந்தைக்கு அப்படி ஆகாமல் இருக்கவேண்டும் என்கிற கவலை அந்தக் குடும்பத்தில் எல்லாருக்குமே இருந்தது. ஆறு குழந்தைகளை வலிக்க வலிக்கப் பெற்றுப் பறிகொடுத்திருந்த குஞ்சம்மாவைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை.

    கொஞ்ச நேரம் கழிந்ததும் ராமசாமி உள்ளே அழைக்கப் பட்டார். அவர் போய் மனைவியருகே கண்ணீருடன் நின்றார்.

    ஏன்னா? இதுவாவது தக்குமா? எனக்கு பயம்மா இருக்குன்னா என்று கண் கலங்கினாள் குஞ்சம்மா.

    அழாதே, குஞ்சம்மா. இது பிழைச்சுக்கும்னு எனக்குத் தோன்றது.டி. நீ வேணாப் பாரு, என்று தம்மிடமே இல்லாத தைரியத்தை அவர் மனைவிக்கு ஊட்ட முயன்றார்...

    கடைசியில் குழந்தை தக்கிவிட்டது. அதற்குத் தொட்டில் போட்டுப் பெயர் வைத்த போது அப்போது மிகப் புகழ்வாய்ந்த நாட்டுத் தலைவராக இருந்த பாலகங்காதர திலகரின் மீதுள்ள மரியாதையால் கங்காதரன் என்று ராமசாமி அதற்குப் பெயரிட்டார். அது கடவுளுடைய பெயராகவும் இருந்தமையால் யாரும் ஆட்சேபிக்கவில்லை. அவருடைய அக்காள் விசாலம் மட்டும், ‘நீ ஒருத்தன் காங்கிரஸ், காங்கிரஸ்னு ஜபிச்சுண்டிருக்கிறது போறுண்டா. இதுக்கு வேற உன்னோட உபதேசங்களையெல்லாம் பண்ணாதே. நேக்குக் கெட்ட கோவம் வரும். ஆமா!" என்றாள்.

    தமக்கை பேசியது பிடிக்காவிட்டாலும், மகன் பிறந்து தக்கியும் விட்ட மகிழ்ச்சியில் எப்போதும் பதிலடி கொடுக்கும் வழக்கமுள்ள ராமசாமி போனால் போகிறது என்று சும்மா இருந்துவிட்டார். கங்காதரன் நன்றாக வளர்க்கப்பட்டான். நடுத்தரக் குடும்பமாக இருந்தாலும், அந்தச் செல்லக் குழந்தைக்கு எந்தக் குறையும் இல்லாது வளர்க்கவேண்டும் என்று அதன் தாய் தந்தையர் முடிவு செய்திருந்தனர்.

    பள்ளிக்கூட ஆசிரியராக இருந்த ராமசாமி தம் மகன் கங்காதரன் தம்மைக் காட்டிலும் அதிகமாய்ப் படித்துப் பட்டங்கள் பெறவேண்டும் என்று பெரிதும் அவாவினார். கங்காதரனும் நன்றாய்ப் படிக்கக்கூடியவன் என்பதற்கான அறிகுறிகள் அவனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கிய நாளிலேயே அவருக்குத் தெரிந்தன. அவருக்குப் பெருமை பிடிபடவில்லை.

    அடியே, குஞ்சம்மா! நம்ம பிள்ளை பிரமாதமா வரப் போறான். பார்த்துண்டே இரு, பெரிய படிப்புப் படிக்க வைக்கப் போறேன் இவனை எப்படியாவது! என்பார் வாய்க்கு வாய்.

    ஆ...மா, நீங்களும் நானும் நெனச்சாப்ல ஆச்சா? அவன் நெனக்கவேண்டாமா? அவனும் உங்க காத்து அடிச்சு காங்கிரஸ் காங்கிரஸ்னு சேர்ந்து தொலைக்காம ஒழுங்கா இருக்கணுமே...

    "இத பாரு, படிப்பு முடியற வரைக்கும் அதுக்கெல்லாம் நான் அவனை அனுமதிக்கிறதா இல்லே. ஆனா படிச்சு முடிச்சுப் பெரியவனானதும் அது அவனோட இஷ்டத்தைப் பொறுத்த விஷயம்னு விட்டுடுவேண்டி தலையிடமாட்டேன். நாட்டில இருக்கிறவாளுக்கு சுதந்திரம் வேணும்னு போராடிண்டிருக்கிற நான் வீட்டில இருக்கிறவாளுக்கு சுதந்திரம் தரலைன்னா அப்புறம் என்ன அர்த்தம்?

    ஒகோன்னானாம், எனக்கு என்ன சுதந்திரம் குடுத்து வெச்சிருக்கேளாம்? உங்க இஷ்டத்துக்குக் காங்கிரஸ்ல சேர்ந்து கூத்தடிச்சிண்டிருக்கேள். என்னிக்கு உங்களை ஜெயில்ல பிடிச்சுப் போடப் போறானோ வெள்ளைக்காரன் தெரியல்ல. வீட்டில இருக்கிறவா சுதந்திரத்தைப் பத்திப் பெரிசாப் பேச வந்துட்டேள்!

    என்னது? என்ன சொன்னே? உனக்கு என்ன சுதந்திரம் குடுத்திருக்கேன்னா கேக்கறே? ஏண்டி? என் வழிக்கு உன்னை வரச்சொல்லி நான் கட்டாயப்படுத்தறேனா? உன்னையும் காங்கிரஸ்ல சேர்ந்து தேசத்துக்காகப் போராடுன்னு கட்டாயப்படுத்தறேனா? உன்னிஷ்டப்படிதானே நீ இருக்கே? என்னிஷ்டப்படி நான் இருக்கேன். அது என்னோட சுதந்திரம். அதுல உன்னோட சுதந்திரத்துக்கு என்ன ஆபத்து?

    நாளைக்கு நீங்க ஜெயிலுக்குப் போய் அப்படியே ஆயுள்தண்டனை அடையறேள்னு ஒரு பேச்சுக்கு வெச்சுப்போம். எங்களோட கதி என்னாறதுன்னா? அதை யோசிச்சேளா?

    எல்லாரும் இப்படியே சுயநலத்தோட நம்ம குடும்பம் என்னாறது, நம்ம குழந்தை, பெண்டாட்டி என்னாறதுன்னெல்லாம் யோசிச்சிண்டிருந்தா வெள்ளைக்காரனை எப்ப வெளியேத்தறது? எப்ப நமக்கு சுதந்திரம் கிடைக்கிறது?

    ரொம்ப நன்னாருக்குன்னா நீங்க பேசற பேச்சு என் கேள்விக்கு இதுவா பதில்? உங்களை ஆயுள் தண்டனைக் கைதியாக்கி ஜெயில்ல தள்ளிட்டான்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்குங்கோ. எங்க கதி என்ன? அதுக்குப் பதில் சொல்லுங்கோ.

    கலியாணம்கிறதும் ஒரு ஆயுள் தண்டனைதானே? ஆனா ஜெயில்ல அனுபவிக்கிற ஆயுள் தண்டனையில பொண்டாட்டியோட பிக்கல் பிடுங்கல் இருக்காது. அது ஒரு செளகரியம்.

    அந்த ஆயுள் தண்டனை மேல்னு நினைக்கிறவா என்னத்துக்கு இந்த ஆயுள் தண்டனையை ஏத்துக்கணும்னு கேக்கறேன். அப்ப கல்யாணமே பண்ணின்டிருந்திருக்க வேண்டாமே?

    வேண்டாந்தான். தெரியல்லியே அப்ப? தலையைக் குடுத்துட்டேன். இப்ப அவஸ்தைப் பட்றேன்.

    நீங்களா, இல்லை நானா..? இப்ப பாருங்கோ, எதிர்சாரியில இருக்கிற நாயுடுமாமாவை போலீஸ்ல பிடிச்சுண்டு போயிட்டா. எந்த ஜெயில்ல போட்டிருக்கான்னே தெரியல்ல. அவரோட பொண்டாட்டி மாலை மாலையா அழறா. சோத்துக்கும் வழி இல்லே. அங்கங்க கடன் வாங்கித் தின்னுண்டு அலையறா. அது மாதிரிதான் நானும் என்னோட குழந்தையும் உங்க அக்காவும் லோலோன்னு தெருத் தெருவா அலையப் போறோம். பார்த்துண்டே இருங்கோ.

    அவள் பேசிய பேச்சைக் காட்டிலும் அப்படியும் ஆகிவிடுமோ என்கிற அச்சம் கிளர்த்திய கோபத்தில் ராமசாமி கத்தினார்: ‘கண்டமேனிக்குப் பேசாதடி, குஞ்சம்மா. அப்படியெல்லாம் மாட்டிக்கமாட்டேன். எல்லாம் ரகசியமாத்தான் நடந்திண்டிருக்கு. நீ இப்படி எட்டு வீட்டுக்குக் கேக்கற மாதிரிக் கத்தி என்னோட ரகசியத்தை வெளிப்படுத்தினாதான் உண்டு."

    என்னை அடக்கறதுக்கு முந்தி நீங்க உங்க குரலைக் கொஞ்சம் அடக்கிண்டு கத்துங்கோ! நீங்க இப்ப கத்தினது லண்டன்ல கேட்டிருக்கும்!

    நன்னாத்தான் பேசறேடி நீ குஞ்சம்மா! லண்டன்ல கேட்டிருக்குமா? கேக்கட்டும். கேக்கட்டும்... என்று சிரித்த ராமசாமி அதற்கு மேல் வாக்குவாதத்தை வளர்க்காமல் மகனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சத் தொடங்கினார்.

    குஞ்சம்மா எரிச்சலுடன் நக்கென்று முகவாயைத் தோளில் இடித்து அழகு காட்டிவிட்டுத் தன் அலுவலைக் கவனிக்கப் போனாள். இதையெல்லாம் பார்த்தபடி காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த விசாலம், ‘என்னமோடி, குஞ்சம்மா. நேக்கும் சதா அடிவயித்தைக் கலக்கிண்டேதான் இருக்கு என்னிக்கு இவனுக்குக் கைக்கு விலங்கு மாட்டப் போறாளோ தெரியல்ல; அதை நெனச்சுட்டாலே ராத்துக்கம் போயிட்றது. நீ புலம்பறே. நான் புலம்பாம இருக்கேன். அதுதான் வித்தியாசம்..." என்ற முனகினாள்.

    தமக்கையின் தமுக்கடிப் பேச்சைத் துளியும் காதில் வாங்காமல் ராமசாமி மகனை உயரே தூக்கிப்போட்டுப் பிடித்து அவனைச் சிரிக்க வைப்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார். இதனால் விசாலமும் முகவாய்க் கட்டையால் தோளில் ஓர் இடி இடித்துக் கொள்ள நேர்ந்தது.

    ரெண்டு வயசுக் குழந்தையைத் தூக்கிப்போட்டுப் பிடிச்சு விளையாட்டுக் காட்டுவா, பாத்திருக்கேன். அஞ்சு வயசு தாண்டின குழந்தையை யாராவது இப்படித் தூக்கிப்போட்டுப் பிடிப்பாளோ? அழகுதான்! என்று நடந்துகொண்டே குஞ்சம்மா கூவ, ‘அடேய், அவனைக் கீழே விடுடா, குண்டா வேற இருக்கான். கீழே எங்கேயாவது போட்டுத் தொலைக்கப் போறே!" என்று அப்போதுதான் கவனித்து மனத்தில் வாங்கிக்கொண்ட விசாலமும் கத்த, ராமசாமி கங்காதரனைக் கீழே விட்டார். கங்காதரன் பக்கத்து வீட்டுக்கு ஓடிப்போனான்.

    அப்போது வாசற்பக்கம் நிழலாடியது. யாரோ செருப்பை உதறிய வண்ணம் தொண்டையைக் கனைக்கும் ஓசையும் கேட்டது. ராமசாமி தாம் அமர்ந்திருந்த ஊஞ்சலிலிருந்து இறங்கி வாசலுக்குப் போனார். இரேழிக்கு வரலாமா வேண்டாமா என்று யோசிப்பவர் போல் வாசற்படியருகே நின்றிருந்தவர் மணவாளன்தான்.

    வாங்க, வாங்க, நாயுடுகாரு. வாங்க, என்ன, பேப்பரும் கையுமா வந்திருக்கீர்?

    நீர் ஸ்கூலுக்குப் போய்த்தான் பேப்பர் படிப்பீர்னு எனக்குத் தெரியும். அதான் சேதியைச் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்

    உள்ளே வாங்களேன்... வாங்க, வாங்க...! குஞ்சம்மா, மணவாள நாயுடு வந்திருக்கார். குடிக்க ஏதாவது கொண்டா - காப்பியோ, டீயோ, மோரோ ஏதாவது...

    நீர் செலக்ட் பண்ணாதேயும் அய்யர்வாள்! எனக்குக் காப்பிதான் வேணும்...

    காப்பியே கொண்டுவா... உட்காரும் இப்படி ஊஞ்சல்ல. என்ன விசேஷம் பேப்பர்ல? அதைச் சொல்லும் முதல்ல.

    இருவரும் அருகருகே ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டார்கள். ராமசாமி கால்விரல்களைத் தரையில் பதித்து உந்தி உந்தி இலேசாக ஆட்ட, ஊஞ்சல் மெதுவாக முன்னும் பின்னும் அசையத் தொடங்கிற்று.

    இந்தாரும், நீரே படியும்...

    ராமசாமி அவர் நீட்டிய இடத்தில் காணப்பட்ட செய்தியை முனகலாய்ப் படிக்கலுற்றார்:

    "மே மாதம் ஆறாந்தேதியன்று இங்கிலாந்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு காலமானார். இவ்வாண்டு - 1910 - ஜூன் மாதம் 22ஆம் தேதி அவரின் வாரிசு ஐந்தாம் ஜார்ஜூக்கு வெஸ்ட் மின்ஸ்டர் அப்பேயில் முடிசூட்டு விழா நடந்து முடிந்த பின்னர் அரச தம்பதியர் இந்தியாவுக்கு வருகை புரிவார்கள். டில்லி மாநகரில், இங்கிலாந்தில் தங்களுக்கு முடிசூட்டு விழா நடந்து முடிந்தது பற்றி அரச தம்பதியர் இந்திய மக்களுக்கு அறிவிப்பார்கள். அத்துடன் அதனைக் காண இங்கிலாந்துக்கு வர முடியாது போன இந்தியர்களுக்காக அதன் நினைவுவிழாவை டில்லியில் அவர்கள் விமரிசையாய்க் கொண்டாடுவார்கள்...’

    நாளிதழை அவரிடம் திருப்பிக் கொடுத்த ராமசாமி, ‘இவனோட முடிசூட்டு விழாவைப் பார்க்கல்லேன்னு யாருய்யா இந்தியாவில அழுதது?" என்றார் கடுப்பாக.

    நீங்க வேற, அதுக்கு அழறவங்களும் இந்த நாட்டில இருக்குறாங்க, ஒய், உமக்குத் தெரியல்லே.

    அப்படிப்பட்ட துரோகிகளும் இருக்கிறதாலதான் வெள்ளைக்காரனால இந்தியா பூராவையும் கபளிகரம் பண்ண முடிஞ்சுது, என்றார் ராமசாமி இன்னும் அதிகக் கடுப்புடன்.

    இங்க எதுக்குய்யா வர்றது? இங்க வந்து தர்பார் பண்ணி நம்ம கஜானாவைக் காலி பண்றதுக்கா?

    ராமசாமி குபீரென்று சிரித்தார். ‘நீர்வேற இல்லேன்னா இந்த நாட்டு கஜானாவில் இருக்கிற பணம் இந்த நாட்டு மக்களுக்காகத் தான் முழுக்க முழுக்க செலவழியுதாக்கும்!"

    என்னமோ, போங்க அய்யர்வாள்! ஒண்ணும் நல்லாவே இல்லே. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடங்கி எத்தினி நாளாச்சு 1885 இலே இந்தியன் நேஷனல் யூனியன்கிற பேரில முதல்ல தொடங்கி அந்த வருஷமே முதல் கூட்டத்தை பம்பாய்ல நடத்தினாங்க. போன வருஷம் வரையில மொத்தம் இருபத்துநாலு கூட்டம் நடந்திருக்குது. என்ன சாதிச்சுட்டோம் பெரிசா? சொல்லுங்க. கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருஷமய்யா, இருபத்தஞ்சு வருஷம். அது கொஞ்ச நாள் இல்லியே? - மணவாளனின் கண்கள் அகன்று அவற்றில் சன்னமாய்ச் சிவப்பு ஏறியது.

    ராமசாமி புன்னகை செய்தார். ‘இருபத்தஞ்சு வருஷம்கிறது ஒரு தனி மனுஷனோட வாழ்க்கையில நீண்ட நாள்தான், நாயுடுகாரு. ஆனா ஒரு தேசத்தினுடைய வாழ்க்கையில அது ரொம்பச் சின்ன பீரியட்தாங்காணும். கொஞ்சங் கொஞ்சமாத்தானே சாதிக்க முடியும்? பிரிட்டன்கிறது பெரிய சிங்கமய்யா. என்னதான் ஆயிரக்கணக்குல கூடினாலும் நாமெல்லாம் சுண்டெலிகள்தானே?"

    ஒரு சின்னச் சுண்டெலி வலையை அறுத்துப் பெரிய சிங்கத்தை வெளியேத்தின கதை உமக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.

    அது நல்ல சிங்கம், நாயுடுகாரு, சுண்டெலியைக் கொல்லாம போனாப் போறதுன்னு பெருந்தன்மையா விட்டுட்ட சிங்கம். இந்தச் சிங்கம் அப்படி இல்லியே, நாயுடுகாரு? அந்த நன்றிக்குப் பிரதியா கண்டெலியும் வலையில மாட்டிண்ட சிங்கத்தை விடுவிச்சுது. இப்ப நம்ம நாட்டுக் கதை வேற மாதிரிக் கதையாயில்ல இருக்கு?

    அது சரி.

    கொஞ்சம் உள்ளே வரேளா?

    வந்துட்டேன்.

    ராமசாமி எழுந்து போய்க் காப்பிக் குவளைகளையும் வட்டைகளையும் எடுத்து வந்து ஊஞ்சலில் வைத்தார்.

    ஆடாம உக்காரும் அய்யர்வாள். காப்பி கொட்டிடும் என்றபடி தமது குவளையைக் கையில் எடுத்துக்கொண்ட மணவாளன் காப்பியை ரசித்துக் குடிக்கத் தொடங்கினார்.

    என்னதான் சொல்லுங்க அய்யர்வாள்! எங்க வீட்டிலயும்தான் என் சம்சாரம் காப்பி போடுது. இது மாதிரி ருசியும் மணமும் இல்லே. அய்யர் வீட்டுக் காப்பிக்குத் தனி ருசிதாங்காணும்.

    அய்யர், அய்யங்கார்னெல்லாம் பேசிட்டிருக்காதேயும். அடுத்த தரம் நீங்க நம்மாத்துக்கு வரச்சே, நீங்க ஊஞ்சல்ல உக்காந்த ரெண்டாவது நிமிஷம் நான் கொரல் கொடுக்காமயே, ‘இந்தக் காப்பியை வாங்கிண்டு போங்கோன்னா’ன்னு உள்ளேயிருந்து எம் பொண்டாட்டியோட கொரல் கேக்கணும்னா, நீர் என்ன சொல்லனும் தெரியுமோ? அய்யராத்துக் காப்பி, அய்யங்காராத்துக் காப்பினெல்லாம் பொதுவாச் சொல்லப்படாது. ‘உங்க சம்சாரம் கை மணமே தனிங்காணும். காப்பி பிரமாதம்!’ அப்படின்னு இரைஞ்சு சொல்லணும்.

    சரி, சொல்லிடறேன்... உங்க சம்சாரத்துக்குன்னு எங்கேருந்து தான் இப்படி ஒரு கைமணம் வந்திச்சோ, காப்பி பிரமாதங்காணும். என் சம்சாரமுந்தான் காப்பி போடுது. வாயில வைக்க வழங்கலே! என்று மணவாளன் இரைந்து விமர்சிக்க இந்த உரையாடலைச் சொல்விடாமல் கேட்டுக்கொண்டிருந்த விசாலமும் குஞ்சம்மாவும் சிரித்தார்கள்.

    நிஜமாவே காப்பி பிரமாதந்தாங்காணும், என்றபடி குவளையைத் தரையில் வைத்த மணவாளன், ‘நம்ம வங்காளத்து அரவிந்த கோஷ், பாண்டிச்சேரியில் செட்டில் ஆயிட்டாராம். தெரியுமா?" என்றார்.

    அட, யாரு சொன்னா உமக்கு?

    பாண்டிச்சேரியில நம்ம சொந்தக்காரங்க இருக்காங்கல்ல? அவங்க கிட்டேருந்து கிடைச்ச தகவல்தான்.

    இங்கிலீஷ்காரன் கண்ணுல மண்ணைத் தூவற இந்த வேலையை முதல்ல ஆரம்பிச்சு வெச்சது நம்ம பாரதியார்தான். இல்லியா? இப்ப அவரை அரவிந்த கோஷ் முதற்கொண்டு ஃபாலோ பண்ணத் தொடங்கிட்டாங்க பாரும். நம்ம பாரதியார் கில்லாடிங்காணும் புதுச்சேரியில போய் ஃப்ரெஞ்சுக்காரன் ஆட்சிக்குக்கீழே செட்டில் ஆயிட்டா இங்கிலிஷ்காரனால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு டக்குனு தோணி அங்க போயிட்டாரு. பாரும். இவங்களுக்குள்ளே தொடர்பு இருக்குமா?

    அதைப் பத்திச் சொல்றதுக்குத்தான் வந்தேங்காணும். அரவிந்தர், பாரதியார் இவங்கல்லாம் பாண்டிசேரியில அடிக்கடி சந்திக்கிறாங்களாம். வெறுமனே சந்திப்பு, மீட்டிங், பேச்சு, எழுத்துன்னு மட்டும் போயிட்டிருந்தா எந்த ஜென்மத்துலேங்காணும் இந்தியா சுதந்திரம் அடையிறது? ஆனா அரவிந்தர் முன்னே இருந்த அளவுக்குத் தீவிரமா இல்லையாம்.

    நாயுடுகாரு, ஒண்னு சொல்றேன், கேளும். முதல்ல ஜனங்களுக்கு, நாம அடிமைகளா இருக்கோம்கிறது புரிஞ்சு அவங்களுக்கு வெள்ளைக்காரன் மேல தாங்க முடியாத ஆத்திரம் வரணும். அதுக்கு அப்புறந்தான் புரட்சி வெடிக்கும். அதுக்கு இன்னும் நிறைய நாளாகும், நாயுடுகாரு. திலகர் வேற நாடு கடத்தப்பட்டு இப்ப பர்மாவில இருந்திட்டிருக்காரு. பாவம்! அம்பத்திரண்டு வயசுல நாடு கடத்தல். என்ன அயோக்கியத்தனம்! என்ன கஷ்டமெல்லாம் கொடுக்கிறாங்களோ? தண்டனை எப்ப முடியறது? உங்களுக்கு ஞாபகம் இருக்கோ, நாயுடுகாரு?

    நல்லா ஞாபகம் இருக்கு, அய்யர்வாள். 1908ஆம் வருஷம் கடத்தினாங்க ஆறு வருஷம் பர்மா ஜெயில்ல இருக்கணும். அப்ப? 1914ஆம் வருஷம் திரும்பி வரணும்.

    திலகர் மாதிரி ஒரு பெரிய தலைவர் பர்மா மாண்டலே ஜெயில்ல ஆறு வருஷம் இருக்குறதுங்கிறது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்! பம்பாய்ல அவரை திலக் மகராஜ்னுதான் சொல்லுவாங்களாம். அம்புட்டு செல்வாக்கு அவருக்கு கோர்ட்ல மூச்சு விடாம இருபத்தொரு மணி நேரம் தன் கேஸைத் தானே வாதாடிப் பேசி இருக்காரே, நாயுடுகாரு! வெள்ளைக்காரங்க அசந்துபோயிட்டாங்களாமே.

    பின்னே? பத்திரிகையில நம்ம கருத்துகளை வெளியிட்ற சுதந்திரத்தைத் தடை செய்யற அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து கேசரி பத்திரிகையை நடத்திட்டிருந்த திலகர் அதுல எழுதாம இருப்பாரா? இதென்னய்யா அக்கிரமம்? நம்ம நாட்டுல வந்து உக்காந்துக்கிட்டு, நம்ம பத்திரிகை சுதந்திரத்துல தலையிட்றதா? என்ன அக்கிரமம் இது!

    ராமசாமி பதில் சொல்ல வாயைத் திறக்கு முன் வாசற்புறத்தில் நிழல் தட்டியது. கதவை யாரோ விரலால் தட்டுகிற ஓசையும் கேட்டது. ராமசாமி எழுந்து சென்று பார்த்தார்.

    இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் வயது சொல்லக்கூடிய ஒரு பெண் புன்சிரிப்புடன் அவரைப் பார்த்துக் கை கூப்பினாள்.

    நமஸ்காரம்.

    நமஸ்காரம்... யாரைப் பார்க்கணும் உங்களுக்கு?

    மிஸ்டர் ராமசாமிங்கறது...

    நான்தான்.

    உங்களைத்தான் பார்த்துப் பேசணும்.

    என்ன விஷயமா?

    நான் உள்ள வரலாமா?

    அயம் சாரி, சாரி, உள்ளே வாங்கோம்மா. உள்ள வாங்கோ.

    வழிநடையில் காலணிகளை உதறியபின் அந்தப் பெண் ராமசாமியைத் தொடர்ந்து உள்ளே வந்தாள். மணவாளன் ஊஞ்சலிலிருந்து இறங்கினார். அடுக்களையிலிருந்து எட்டிப்பார்த்த குஞ்சம்மாவின் பார்வையும் அந்தப் பெண்ணின் பார்வையும் சந்தித்துக்கொண்டபோது, புதியவளின் பார்வையில் அன்பு தெரிய, குஞ்சம்மாவின் பார்வையில் அந்த உணர்ச்சி சிறிதும் இல்லை!

    3

    ராமசாமியின் ஆண் நண்பர்களுக்குத் தருகிற வரவேற்பையே குஞ்சம்மா அந்தப் புதிய பெண்ணுக்கும் அளித்தாள். அதாவது மரத்தட்டுப் போன்ற உணர்ச்சி காட்டாத முகத்துடன் உள்ளே போய்விட்டாள்.

    நீங்க ஸ்கூலுக்குக் கெளம்பற நேரம் நெருங்கிண்டிருக்கோ?

    இல்லே, இன்னிக்கு லீவும்மா. சனிக்-கிழமையோன்னோ? பேப்பர் படிக்கிறதுக்கு மட்டுந்தான் இன்னிக்கு ஸ்கூலுக்குப் போலாம்னு இருந்தேன்.

    அதுக்கு மட்டுந்தானா? வேற மீட்டிங் எதுவும் உங்க ஸ்கூல்ல இன்னிக்கு இல்லியா?

    மணவாளனும் ராமசாமியும் சற்றே முகம் வெளிறிச் சாடையாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அந்தப் பெண் ஆதரவுடன் புன்னகை செய்து தானும் அவர்கள் பக்கமே என்பதாய் இருவருக்கும் உணர்த்தினாள்.

    முதல்ல உக்காருங்கோம்மா.

    ராமசாமி ஒரு நாற்காலியை நகர்த்திப் போட்டார். அதில் அந்தப் பெண் உட்கார்ந்து கொண்டாள். மணவாளன் மறுபடியும் ஊஞ்சலில் உட்கார, ராமசாமியும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார்.

    சில நொடிகளுக்கு அங்கே அமைதியாக இருந்தது. அதை முதலில் அந்தப் பெண்ணே கலைத்தாள்.

    எம்பேரு அஞ்சனா தேவி. என்னோட பெரிய அண்ணா லண்டன்ல படிச்சிண்டிருக்கான். பேரு அருணாசலம், லண்டன்ல இண்டியா ஹவுஸ் ஹாஸ்டல்ல தங்கி மேல் படிப்புப் படிச்சிண்டிருக் கான். சட்டப் படிப்பு. அந்த ஹாஸ்டலை நிர்மாணிச்சவர் ஷியாம்ஜி கிருஷ்ண-வர்மான்னு கேள்விப்பட்டிருப்பேள்!

    கேள்விப்பட்டிருக்கோம், அவரைத் தெரியாத புரட்சி யாளர்கள், தேசபக்தர்கள் இந்தியாவில் உண்டா என்ன?

    இண்டியா ஆபீஸ்ல போன வருஷம் ஜூலை மாசம் நடந்த ஒரு விழாவப்ப மதன்லால் திங்ராங்கிற ஒரு இருபத்திரண்டு வயசு மாணவன் சர் கர்ஸான் வில்லிங்கிற வெள்ளைக்கார அதிகாரியைச் சுட்டுக்கொன்ன செய்தியும், அவன் அதற்குத் தண்டனையாத் தூக்குல போடப்பட்ட செய்தியும் நமக்குத் தெரியும். ஆனா அவனுடைய கடைசி வாக்குமூலம் இன்னதுன்னு விவரமா நமக்குத் தெரியாது இல்லையா?

    தெரியாது.

    அதை எங்க அண்ணா எப்படியோ வாங்கி எனக்கு அனுப்பி வெச்சிருக்கான். எனக்குத் தெரிஞ்ச தமிழ்ல அதை நான் மொழியாக்கம் பண்ணி இப்ப எடுத்துண்டு வந்திருக்கேன்; உங்ககிட்ட காட்டுறதுக்காக, அதை அச்சடிச்சு ரகசியமாக மக்களிடத்துல விநியோகிக்கணும்கிறது எங்கண்ணாவுடைய விருப்பம்... படிச்சுப் பாக்கறேளா? என்ற அஞ்சனாதேவி தன் கையில் இருந்த துணிப்பையிலிருந்து குண்டூசி குத்தப்பட்ட ஒரு காகிதக் கற்றையை ராமசாமியிடம் நீட்டினாள்.

    அதைப் பெற்றுக்கொண்ட அவர், ‘படிக்கிறேன், கேக்கறீங்களா மணவாளன்?" என்றார்.

    கரும்பு தின்னக் கூலியா?

    இவர் யாருன்னு நீங்க கேக்கல்லையே? மிஸ்டர் மணவாளநாயுடு, காங்கிரஸ்காரர். வெள்ளைக்காரங்க மேல ரொம்பக் கோபக்காரருங்கூட.

    தெரியும், சார், கேள்விப்பட்டிருக்கேன். ஒரு தரம் இவரை எங்கப்பாவுடைய சிநேகிதர் லட்சுமணன் சார் வீட்டில பார்த்துக்கூட இருக்கேன். ஆனா இவர் என்னைப் பார்க்கல்லே. இவர் யாருன்னு ஏற்கெனவே எனக்குத் தெரிஞ்சிருந்ததுனாலதான் தயக்கமில்லாம இந்தக் கடுதாசிகளை அவர் எதிர்ல உங்ககிட்ட குடுத்தேன். விஷயத்தையும் சொன்னேன். இல்லேன்னா சொல்லி இருப்பேனா, சார்?

    அப்படியா? அப்ப ரொம்ப நல்லதாப் போச்சு படிக்கட்டுமா? என்று மறுபடியும் ஒரு முறை கேட்டுவிட்டுத் தொண்டையைக் கனைத்துக்கொண்டார் ராமசாமி.

    கொஞ்சம் இப்படி வரேளா?

    காகிதக் கற்றையை ஊஞ்சலில் வைத்த ராமசாமி எழுந்து உள்ளே போனார்.

    அந்தப் பொண்ணுக்கு காப்பி!

    அட! நான் சொல்லாம நீயே ரெடி பண்ணிட்டியே. என் தங்கக் கட்டி! என்று முனகிய ராமசாமி விசாலம் அங்கில்லாததால் செல்லமாய் அவள் கன்னத்தை இழைத்துவிட்டுக் காப்பியை எடுத்துக்கொண்டு போனார்.

    முதல்ல காப்பியைக் குடிங்கம்மா.

    நீங்க?

    நாங்க ரெண்டு பேரும் இப்பதான் குடிச்சோம்மா. நீங்க சாப்பிடுங்க...

    ஏன்யா? மறுபடியும் குடிக்கப்படாதுன்னு சட்டமா? என்று மணவாளன் நாயுடு கேட்க, ராமசாமி சிரித்துக்கொண்டே உள்ள போய் அவருக்கும் காப்பி கொணர்ந்தார்.

    அஞ்சனாதேவி பிகு பண்ணாமல் காப்பியை எடுத்துப் பருகினாள். அவள் குடித்து முடித்ததும் ராமசாமி படிக்கத் தொடங்கினார்.

    "என்னைத் தற்காத்துக்கொள்ளுவதற்காக நான் எதையும் சொல்லப் போவதில்லை. நான் விளக்கப்போவதெல்லாம் எனது செய்கை சரியானதே என்பதைத்தான். இங்கிலாந்து நாட்டு நியாய சபைக்கு என்னைக் கைது செய்வதற்கோ, தூக்கிலிடுவதற்கோ எந்த உரிமையும் கிடையாது என்பதை நான் அறிவேன். அதனால்தான் நான் எனக்காக வாதாட வக்கீல் வைத்துக்கொள்ளவில்லை. இங்கிலாந்து நாடு ஜெர்மானியர்கள் வசமாகிப்போனால், ஜெர்மானியர்களோடு சண்டை போடுவது ஓர் இங்கிலாந்து நாட்டுக்காரனுக்கு எவ்வளவு நியாயமானதோ அதே அளவுக்கு ஆங்கிலேயரை எதிர்க்கும் எனது செயலும் நியாயமானதே. கடந்த ஐம்பது ஆண்டுகளில் எட்டுக் கோடி இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளமைக்கு நான் ஆங்கிலேயர்களையே பொறுப்பாக்குவேன். எங்கள் நாட்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பத்துக் கோடிப் பவுன் மதிப்புள்ள செல்வத்தை நீங்கள் இங்கிலாந்துக்கு எடுத்துச்சென்று வருகிறீர்கள். இந்தியாவின் தேச பக்தர்களை அநியாயமாக நாடு கடத்தியும் தூக்கிலிட்டும் வருகிறீர்கள். இங்கிலாந்திலிருந்து ஆங்கிலேயர்களை இந்தியாவுக்கு இட்டுச்சென்று அங்கே நூறு பவுன் மாதச் சம்பளம் ஒவ்வோர் ஆங்கிலேயனுக்கும் கொடுக்கிறீர்கள். இந்த நூறு பவுனில் - கேளிக்கைகளிலும் ஆடம்பரங்களிலும் நீங்கள் செலவு செய்யும் இந்த நூறு பவுனில் - ஆயிரம் இந்தியர்கள் எளிதாகத் தங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பெற்றுவிடுவார்கள்.

    இங்கிலாந்தை ஆக்கிரமிக்கும் உரிமை எவ்வாறு ஜெர்மானியர்களுக்கு இல்லையோ, அவ்வாறே இந்தியாவை ஆக்கிரமிக்க ஆங்கிலேயர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எங்கள் புண்ணிய பூமியை ஆக்கிரமித்து மாசுபடுத்திவரும் ஆங்கிலேயர்களைக் கொல்லுவது என்பது இதனால் நியாயமானதே. இந்த உலகத்தில் பல்வேறு நாடுகளில் ஆட்சியாளர்களால் கொடுமைப்படுத்தப்படும் மக்களுக்கெல்லாம் தாங்கள்தான் விமோசனம் வாங்கிக்கொடுக்க வந்தவர்கள் என்பதுபோல் வக்காலத்து வாங்கிவரும் நீங்கள் ஒவ்வோர் ஆண்டும் எத்தனை இந்தியர்களைக் கொன்று குவிக்கிறீர்கள்? எங்கள் பெண்களை நாசப்படுத்துகிறீர்கள். இங்கிலாந்து ஜெர்மனி வசப்பட்டு, இதே லண்டன் தெருக்களில் சுதந்திரமாக நடந்து போகும் ஜெர்மானியர்களை உங்களில் யாரேனும் சுட்டுக்கொன்றால், அவனைத் தேச பக்தன் என்று கொண்டாடுவீர்களா இல்லையா? அப்படியானால், எனது நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டு வரும் நானும் ஒரு தேசபக்தனே! உங்களிடம் எனக்கு இரக்கம் காட்டச் சொல்லி நான் கெஞ்சப் போவதில்லை. உண்மையில், நீங்கள் என்னைத் தூக்கிலிடுவதையே நான் விரும்புகிறேன். அப்போதுதான் எங்கள் நாட்டு மக்களுக்கு உங்களைப் பழிவாங்கும் உணர்ச்சிவேகம் எழும்’. - இவ்வாறு, ‘நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?’ எனும் மாஜிஸ்டிரேட்டின் கேள்விக்கு மதன்லால் திங்ரா பதில் சொன்னான். கடைசியில் தூக்கில் இடப்படுவதற்கு முன்னதாக அவன் உணர்ச்சியுடன் விடுத்த அறிக்கை பின்வருமாறு - இந்த அறிக்கைக்கு மதன்லால் திங்ரா சவால் என்கிற தலைப்பைக் கொடுத்திருந்தான்.

    அயல் நாடு ஒன்றால் - அதன் ஆயுத வலிமையால் - ஆக்கிரமிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்படும் எந்த நாடும் நிரந்தரமான போராடும் நிலைக்குத் தள்ளப்படுவதாக நான் நம்புகிறேன். ஆயுதங்கள் எங்களிடம் நிறைய அளவில் இல்லாத நிலையில் போர் புரிவது என்பது சாத்தியமற்றிருப்பதால், இவ்வாறு திடீர்த் தாக்குதல்களில், ஆயுதம் பெற வசதியடைந்த நான் ஈடுபட்டேன். என் இந்தியத் தாய்க்கு அளிக்க எனது இரத்தத்தைத் தவிர வேறு எந்த விலைஉயர்ந்த பொருளும் என்னிடம் இல்லை. ஏனெனில் அறிவிலோ செல்வாக்கிலோ நான் உயர்ந்த மகன் அல்லேன். இன்றைய நிலையில் எப்படிப்பட்ட சாவை அடைவது சிறந்தது என்பதை இந்தியர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். எங்களைப் போன்றவர்கள் இவ்வாறு சாவதன் மூலமே இந்தியர்களுக்கு அதைக் கற்றுக்கொடுக்க முடியும். எனவே நான் அமரத்துவமான இந்தச் சாவுக்கு உட்படுகிறேன்...

    ‘அடாடா என்ன நெஞ்சுரம் எவ்வளவு தைரியம்! உயிரைத் திருணமா மதிக்கணும்னா எவ்வளவு தேசபக்தி இருக்கணும்!" என்றார் மணவாளன்.

    வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழியாக்கம் பண்ணி இருக்கிறதாச் சொல்ல முடியாது. ஆனா எல்லா வாக்கியங்களோட மையக் கருத்தை உள்ளபடி ட்ரான்ஸ்லேஷன்ல வெளிப்படுத்தி இருக்கேன், சார்!

    அது போறுமேம்மா... மணவாளன், உங்க சொந்தக்காரர் ஒருத்தர் ப்ரெஸ் வச்சிருக்காரில்ல?

    வெச்சிருக்காரு. ஆனால், அந்தாளு நம்ம டைப்பா இல்லியான்னு சரியாத் தெரியலியே...

    மெதுவாப் பேச்சுக் குடுத்துக் கண்டுபிடிக்கப் பாருமேன். அதைக் கண்டுபிடிக்கிறது பெரிய காரியமா என்ன?

    பண்றேன், அய்யர்வாள்! எத்தனை பிரதிகள் எடுக்கலாம்?

    நீங்க என்ன சொல்றேளோ அப்படி... முதல் கட்டமா ஒரு அஞ்சாயிரம் காப்பீஸ் எடுக்கலாமா?

    எடுக்கலாம். முதல்ல மணவாளநாயுடு தன்னோட சொந்தக் காரர் கிட்ட பேசிப் பார்க்கட்டும். அந்தாளு பாட்டுக்கு நம்மையே போலீஸ்ல காட்டிக் கொடுத்துட்ற ஆசாமியா இருந்துட்டார்னா என்ன பண்றது? இல்லியா?

    ஆமாமா. ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு நமக்குன்னே ஒரு பிரெஸ் வச்சுட்டா எவ்வளவோ செளகரியமா இருக்கும். பிறத்தியாரைத் தேடிண்டு போக வேண்டி இருக்கிறதுனாலதானே அவங்க மேல இல்லாத பொல்லாத சந்தேகமெல்லாம் வருது? நீர் என்ன சொல்றீர் அய்யர்வாள்?

    நல்ல யோசனைதான். ஆனா ரொம்பச் செலவாகும். பார்க்கலாம். ஆனா இதை அச்சடிக்கிறதுக்கு சொந்த ப்ரெஸ் வாங்கற வரைக்கும் காத்துண்டிருக்க முடியாது நாயுடுகாரு.

    மணவாளன் சிரித்தார். ‘சேச்சே, நான் அதுவரைக்கும் காத்துட்டிருக்கணும்னு சொல்லல்லே, அய்யர்வாள்... சொந்த ப்ரெஸ் வச்சுக்கிறதுலயும் சிக்கல் இல்லாம இருக்காது. அச்சுக் கோக்கறவன் நம்பகமான ஆளா இருக்கணும் இல்லியா?"

    நம்மள்ல ஒருத்தர் கம்பாசிட்டரா மாறிடவேண்டியதுதான். அப்ப எந்தப் பிரச்சினையும் வராது...

    அப்படியும் சொல்லிட முடியாது சார்! நம்மள்ளயே எட்டப்பன்கள் இல்லாம இருக்கணுமே? என்று மணவாளன் சிரிக்க, மற்ற இருவரும்கூடப் புன்னகை செய்தனர்.

    இது மாதிரி யோசிச்சுண்டே இருந்தா எதுவுமே பண்ண முடியாது, நாயுடுகாரு. துணிஞ்சு செய்யவேண்டியதுதான். என்ன பண்றது?

    உங்க அண்ணா லண்டன்ல ஃபங்ஷன் பண்ணிண்டிருக்கிற புரட்சிக்காரக் கும்பல்ல அப்ப ஒரு பெம்பர்? என்று மணவாளன் அஞ்சனா தேவியைப் பார்த்துக் கேட்டார்.

    ஆக்டிவ் மெம்பர், சார்!

    என்னைப் பத்தி உங்களுக்கு யாரு சொன்னா?

    எங்க குடும்ப நண்பர் ஒருத்தர் இருக்கார். தியாகராஜன்னு. அவர்தான் சொன்னார், சார்.

    யாரு? டி.டி. தியாகராஜ முதலியாரா?

    ஆமா. அவரேதான்.

    உங்கண்ணாவைப் பத்தி இன்னும் சுவாரசியமான விவரங்கள் இருந்தா சொல்லுங்கோ.

    எங்கண்ணா அப்பப்ப எனக்குத் தெரிவிக்கிற விவரங்கள்தான் அவனை விட சுவாரசியமா இருக்கும். இப்ப மதன்லால் திங்ராவையே எடுத்துக்குங்கோ. அவனோட அப்பா ஒரு டாக்டர். மதன்லால் கர்ஸான் வில்லியைச் சுட்டுக்கொன்னதும் ‘அவனுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லே. அவன் என் பிள்ளையே இல்லை’ன்னு ஆத்திரத்தோட வெறுத்து ஒதுக்கிட்டார்னா, அவனோட முத்த சகோதரர்கள்ள ரெண்டு பேரு, ‘அவன் செஞ்சது பைத்தியக்காரத்தனமான காரியம். வெறுக்கத்தக்க காரியம். அவனை ஒரு தியாகின்னு நாங்க ஏத்துக்கல்லே’ அப்படின்னு எழுத்து மூலமா ஒரு அறிக்கையே விட்டாளாம்! சர்ச்சில்னு ஒரு எம்.பி. மதன்லால் திங்ராவுடைய கடைசி அறிக்கையை ‘தேசபக்தியைக் குறிக்கிற மிகச்சிறந்த சொற்கள்’ அப்படின்னு தம்மையும் மறந்து பாராட்டி இருக்கார். லாயிட்ஜார்ஜோ அவனை ரொம்பவும் புகழ்ந்தாராம்.

    லாயிட்ஜார்ஜ்ங்கிறது யாரு? என்றார் மணவாளன்.

    இங்கிலாந்து மந்திரிசபையில ஃபினான்ஸ் மினிஸ்டரா இருக்கிறவர். அங்க சேன்சலர் ஆப் தி எக்ஸ்செக்கர்னு சொல்றாங்க.

    அப்ப வெள்ளைக்காரங்கள்ளயும் நல்லவங்க இருக்காங்கன் நீங்க இல்லியா, அய்யர்வாள்?

    நியாயம் தெரியாதவங்களா அவங்க? நல்லாத் தெரியும், நாயுடுகாரு. தெரிஞ்சே பண்ற தப்புத்தான். ஊர்லயும் உலகத்துலயும மத்தவங்க தப்புப் பண்றப்ப மத்தியஸ்தத்துக்குப் போகத் தெரியல்ல? தன்னோட காரியம்னு வர்றப்ப வேற நியாயந்தான், நாயுடுகாரு.

    அப்புறம்? இன்னும் ஏதாவது சுவாரசியமான விஷயங்கள் உண்டாம்மா லண்டன் புரட்சியாளர்களைப் பத்தி?

    மதன்லால் திங்ரா தன்னோட உடல் இந்து முறைப்படி தகனம் பண்ணப்படணும்னு தன்னோட கடைசி ஆசையை வெளியிட்டானாம். ஆனால் இங்கிலாந்து சர்க்கார் ஒத்துக்கல்லே. அங்க இருக்கிற வீர சாவர்க்கர் அவனோட உடலைத் தங்கிட்ட ஒப்படைக்கச் சொல்லி விடுத்த வேண்டுகோளுக்கும் அவா செவிசாய்க்கல் லையாம்.

    அட, பாவிகளா..

    ஆமா. அதனால, அவனோட உடலைப் புதைச்சாளாம்.

    என்ன அல்பத்தனமான மனுஷங்க!

    படு மோசமான அல்பத்தனந்தான்... வீர சாவர்க்கர் 1857ஆம் வருஷத்துச் சிப்பாய்க் கலகத்தைப் பத்தி ‘எரிமலை’ங்கிற தலைப்பில ஒரு புத்தகம் எழுதி இருக்கார். நீங்க கூடக் கேள்விப்பட்டிருப்பேள்.

    கேள்விப்பட்டிருக்கோம் அதனோட இங்கிலீஷ் எடிஷன் ஹாலண்ட்ல பப்ளிஷ் ஆச்சுன்னும் கேள்விப்பட்டிருக்கேன்.

    அந்தப் புத்தகந்தான் மதன்லால் திங்ராவுக்கு இன்ஸ்பிரேஷனாம், சார்! அதைப் படிச்சுட்டுத்தான் அவன் தேசபக்தனாயிட்டானாம்.

    உங்களைப் பத்தியும் சொல்லுங்கோ. நீங்க என்ன தேச விடுதலைப் போராட்டத்துல பங்கெடுத்துக்கப் போறேளா?

    ஆமா, சார் பெண்களும் இந்த விடுதலைப் போராட்டத்துல பங்கு எடுத்துக்கணும்கிறது என்னோட அபிப்பிராயம். என்னோட படிச்ச சில பொண்ணுகளும் காங்கிரஸ்ல சேர்றதுக்குத் தயாரா இருக்கா.

    மணவாளனும் ராமசாமியும் ஒருவர்க்கு ஒருவர் தங்களையும் அறியாது பார்வைப் பரிமாற்றம் செய்துகொண்டார்கள். ‘பெண்கள் இது மாதிரியான இயக்கங்களில் சேர்ந்து என்ன சாதிக்க முடியும்?’ என்கிற கேள்வி அவர்களது பார்வையில் தொக்கி நின்றது.

    இந்தப் பொண்ணுங்க என்னத்தைப் பெரிசாக் கிழிச்சுட முடியும்னு சந்தேகப் பட்றேள், இல்லியா?

    ராமசாமி உடனே இடைமறித்தார். ‘அப்படின்னுட்டு இல்லேம்மா, சின்னச் சின்ன அணில்கள்கூட ராமபிரானுக்குப் பாலம் கட்ட உதவி பண்ணி இருக்கு. அதைப் பத்தி நாங்க சந்தேகமோ அவநம்பிக்கையோ படல்லே. பெண்கள் இது மாதிரியான காரியங்கள்ள ஈடுபட்றப்ப அவாளுக்குன்னு தனியான சில ஆபத்துகள் ஏற்படக்கூடும். இல்லியா? என்னைப் பொறுத்தமட்டில் அதுபத்தின பயந்தான். நாயுடுகாரு என்ன நினைக்கிறார்னு எனக்குத் தெரியல்லே!"

    "நானும் அதையேதான் நெனச்சேன், அய்யர்வாள்! பொம்ம - னாட்டிகள்

    Enjoying the preview?
    Page 1 of 1