Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaigarai Ragangal
Vaigarai Ragangal
Vaigarai Ragangal
Ebook367 pages2 hours

Vaigarai Ragangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114202707
Vaigarai Ragangal

Read more from Hamsa Dhanagopal

Related to Vaigarai Ragangal

Related ebooks

Reviews for Vaigarai Ragangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaigarai Ragangal - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    வைகறை ராகங்கள்

    Vaigarai Ragangal

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    என்னுரை

    என் இன்னுயிர் வாசகர்களே.

    வணக்கம், பல பத்திரிகைகள் வாயிலாக வாசகர்களாகிய தங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டு வருகின்றேன்.

    மீண்டும் பகிர்தல் தம்மிடையே அதுவும் சீரும் சிறப்புமிக்க 'புத்தகப் பூங்கா' வாயிலாய்

    சமூகத்தில் நடக்கும் செயல்களையேநான் எழுத்தில் கொண்டு வருகின்றேன். அதைப் போன்றே 'வைகறை ராகங்கள்' என்கிற இந்த நாவலையும் இலக்கிய உலகில் பறக்க விடுகின்றேன். வடமாநிலங்களைச் சேர்ந்த வேற்றுமொழி மாநகர் நம்மிடையே வாழ வருகையில் அங்குப் பொருளாதார மாற்றங்கள் மட்டும் ஏற்படுவதில்லை. அத்துடன் இருவேறு இனங்களும் ஒன்றுசேர வாய்ப்பு மலர்ந்து விடுகின்றது.

    வடக்கும் தெற்கும் சந்தித்து சங்கமித்து அங்கு புதியதோர் இனம் ஜனிக்கின்றது. ஆனால் இதனை இருசாராரும் ஏற்கின்றனரா என்றால் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது.

    பொருளாதார நிலையினை வைத்தே சாதி மதம் இனம் என நிர்ணயிக்கப்படுகிறது. கீழ்நிலையில் உள்ளவர் எனில் மிதிபடவே பிறந்தவர்கள். சுமை தாங்கிகளாகவே நிற்கப் பிறந்தவர்கள் என்கிற எண்ணமே வசதியானவர்களிடையே மேலோங்கி நிற்கிறது.

    பல்லக்குத் தூக்கிகள் பல்லக்கில் உட்காருவதா என்கிற எண்ணம் அவர்களை எதையும் செய்யத் தூண்டுகிறது. அதற்குப் பொருளாதார மேம்பாடு துனைப் போகின்றது.

    தன் குலத்தின் ஒரே பெண் காதல் வயப்பட்டாள். அதுவும் கீழ் நிலையில் உள்ள வாலிபன் மீது என்கிற வியாஸ் திரிவேதி... அவர் மகள் ஹரிணி. நவநாகரிக யுவதி. படித்தவள். பண்புள்ளவள். இருப்பினும் பெண் என்கிற காரணத்தால் எப்படி அழுத்தப்பட்டு பலி ஆடாகிறாள் என்பதுதான் இந்த 'வைகறை ராகங்கள்’. பெண்மை இன்னமும் நசுக்கப்பட்டுத்தான் வருகின்றது.

    சதியும், தேவதாசியும் அவள் உணர்வுகளைக் கொல்லவே, அவளை அவமானப்படுத்தவே பிறந்தவைகள். பெண் சிசுக்களைக் கருவிலேயே கல்லறையாக்கும் கொடுமை... சில இன மக்களிடையே பெண்களின் உறுப்புகளைச் சிதைக்கும் பழக்கம்…. இவையெல்லாம் வல்லரசுகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. என்றுதான் பெண்மைச் சமூகத்தின் உண்மையான பாதியாகப் போகின்றதோ தெரியவில்லை.

    இந்நாவல், தினகரன்-வசந்தத்தில் தொடராக வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடையே பாராட்டுக்கள் பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை 'புத்தகப் பூங்கா’ வெளியிடுவதில் நான் பெருமைக்கொள்கிறேன்.

    மதிப்பிற்குரிய தினகரன் - வசந்தம் ஆசிரியர் திரு. சின்னராஜூ அவர்களுக்கும், வணக்கத்திற்குரிய புத்தக வித்தகர் திரு. தேவகோட்டை பஞ்சநதம் அவர்களுக்கும், இந்நூல் வெளிவரக் காரணமாயிருந்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளும் வணக்கங்களும்.

    புத்தகப் பூங்கா வாயிலாக வெளிவரும் என் முதல் நாவல் இது.

    வாசகப் பெருமக்கள் ஆதரவு கரம் நோக்கி நான்.

    ***

    1

    வாழ்க்கையில் முக்கியமானப் பயணமாய்ப்பட்டது ஹரிணிக்கு ஏன் அப்படித் தோன்றிற்று, என்று அவளுக்கே தெரியவில்லை. தோழிகள் ஐவரும் நின்று நீர்வீழ்ச்சிக்கு இணையாய் ஆரவாரம் எழுப்ப ஹரிணி மட்டும் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

    ஐவரும் அவளுக்கு மிக நெருங்கிய தோழிகள், அதில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் முதல், பியூன் மகள் வரை உண்டு. அவள் ஏற்றத்தாழ்வுகள் என்று பார்ப்பதில்லை. அவள் மனதிற்குப் பிடித்தால் அவர்களுடன் நட்புதான். பியூன் மகள் பிருந்தா தான் வரவில்லை என்று எத்தனையோ சொல்லிப் பார்த்துவிட்டாள்.

    ஏய் வாயை மூடிட்டு வாடி பிருந்தா. பாவம் இப்பதான் ஹரிணிக்கு முழு சுதந்திரம். மேரேஜூக்கு முன்னாடி நம்மோட டூர் போகணும்னு ஆசைப்படறா. அவங்க அப்பா கூட ஓகே சொல்லிவிட்டார். நீ என்னமோ பிகு செய்துக்கறியே.

    அவர்கள் அனைவரும் இப்போது தான் பி.எஸ்.ஸி. ரசாயனம் முடித்திருந்தார்கள். அதில் இருவர் தவிர, மற்றவர்கள் மணமேடை ஏற காத்திருந்தார்கள். அதில் ஹரிணியும் ஒருத்தி. எத்தனைப் பேர்களுக்கு அவர்கள் மனம் விரும்பின காதலனே மணாளனாய் அமைகிறான். அப்படி அமையும் அதிர்ஷ்டசாலிகளில் ஹரிணியும் ஒருத்தி.

    இந்தத் தோழிகள் பெங்களூர், மைசூர் என்று சுற்றிவிட்டு இன்று காலைதான் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி பார்க்க வந்திருந்தார்கள். நேற்று பிற்பகலே தந்தையுடன் மைசூரிலிருந்து தொலைபேசியில் இங்கே போவதைப் பற்றி சொல்லிவிட்டாள் ஹரிணி.

    குட். சந்தோஷமா போயிட்டு வா, ஹரிணி. ஜாக்கிரதை. எனக்கு நீ ஒரே மகள். பல கோடிகளுக்கு ஒரே வாரிசு. அடுத்த ரெண்டு மாசத்திலே உனக்குக் கல்யாணம் வேறு ஏற்பாடு ஆகியிருக்கு. இந்த நேரத்தில் போய் உன்னை டூர் அனுப்பினதுக்காக உன் விநோத் கூட என்கிட்ட கோபிச்சுக்கிட்டான். நாளை காலையிலே சிவசமுத்திரத்தில் இருப்பீங்க, இல்லை. பி. சீர்புல்! என்ஜாய்!

    அப்பாவின் குரல் மீண்டும் அவள் செவிகளில் காதுகள் செவிடாகும் வண்ணம் வானத்திலிருந்து பொத்துக்கொண்டு கொட்டும் அருவிபோல பாய, நீர்வீழ்ச்சி தரையை முத்தமிட்டுக் கொண்டிருந்தது.

    டீ...ஹரிணியைப் பாரேன். எல்லாம் அவள் காதலன் பற்றிய கனாதான்.

    சே... இவளைப் புரிஞ்சுக்கவே முடியலைடி. நம்ம காலேஜ்ல அப்பாஸ் மாதிரி இருந்தானே பிரபு. அவன் லவ் லெட்டர் கொடுத்தப்ப இவ என்ன செய்தா?

    அது தெரியாதா. முதல்ல பிரின்ஸிபால்கிட்ட கொடுத்து அவனைச் சிக்க வச்சுட்டா. அவன் 'ரெண்டு வாரம் சஸ்பென்ட் ஆகி’ காலேஜ் பக்கமே வரவேயில்லை. இவ எப்படிடி அந்த விநோத்தை… டீ ஜெஸிந்தா நீ அவ வீட்டுப் பக்கம்தானே குடியிருக்கே. அந்த மன்மதனை… இவ மனசைக் கொள்ளைக் கொண்ட அதிரூப சுந்தரவதனனைப் பார்த்திருக்கியா. இது கல்யாணி.

    நோயா. நான் எங்கே பார்த்தேன்? என்கிட்ட அவ அறிமுகம் செய்து வைப்பாளா என்ன?

    ஹரிணி, விநோத் ரொம்ப அழகா இருப்பானா, நாங்க பார்த்ததேயில்லையா.

    பார்டி இந்த அபூர்வாவை. விநோத்தை அவன்னு சொல்றாஹரிணி செல்லமாய்க் கோபித்தாள்.

    யாரைப் பார்த்தாலும் ஒருமையில்தான் பேசுவா. இப்பப் பார்த்தியா மேடத்தை. அவராம் அவர்.

    சரி... மேரேஜ் ஆகப் போறது இல்லே. மனசிலே க்கிற மரியாதை சொல்லிலும் வருது.

    அபூர்வா, முதல்ல இதைக் கேளு. ஹரிணியோட அப்பா இந்தக் கல்யாணத்துக்கு எப்படி சம்மதிச்சாராம்.ஒரே சாதியா. இல்லை பெரிய பணக்காரங்களா.

    நீர்வீழ்ச்சியை வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டம் இந்த இளசுகளை விழி இமைக்காது பார்த்துப் பரவசப்பட்டது. சுடிதார், மிடி, ஜீன்ஸ், சேலை என்று எத்தனை விதங்கள் உண்டோ எல்லாம் அங்கிருந்தன. அவர்கள் வந்த டாட்டா சுமோ வெகுதூரத்தில் புள்ளியாய் தெரிந்தது.

    நட்சத்திரக் கூட்டத்தினிடையே நிலவாய் ஹரிணி தங்கப் பதுமைப் போல மற்றவர் கண்ணைக் கட்டிப் போட்டாள். சந்தன நிற சுடிதாரில் ஒரு சில நகைகள் அணிந்து அவள் சிரிக்கும்போது தூத்துக்குடி முத்துக்கள் அங்குச் சிரித்தன.

    அதுதான் கிடையாது. அவர் அவங்க சாதியும் இல்லை. மொழியும் இல்லை. பெரிய பணக்காரரும் இல்லை. அவங்க டாடிக்கிட்ட என்ஜினீயரா வேலைப் பார்க்கிறார். அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள். காதல் பயிராச்சு.

    '’போதும்டி. சும்மா கலாட்டா பண்ணாதீங்க. உங்களோட நான் சந்தோஷமா இருக்கத்தான் வந்தேன். இப்படி கிண்டல் செய்தா எனக்குப் பிடிக்காது. உங்களுக்குப் பசிக்கலையா. எனக்குப் பசிக்குதுப்பா."

    ஹரிணி வேண்டும் என்றே அவர்கள் கவனத்தைத் திசை திருப்ப முயன்றாள்.

    ஹேய் பொய் சொல்றாப்பா. இவளுக்காவது பசியாவது. எல்லாம் சுத்தப் பொய். அவங்க டாடி மேரேஜக்குச் சம்மதிச்ச நாளிலிருந்தே இவ சாப்பிடறதேயில்லியாம். அவங்க வீட்டு சமையல்காரி சொன்னா."

    பெரிய ஹாஸ்யம் கேட்டது போல அனைவரும் சிரித்தார்கள். நீர்வீழ்ச்சி பார்க்க வந்தவர்கள் இவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.

    நீர்வீழ்ச்சி தரையில் விழுந்து ஓடும் இடத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

    ஹேய் கேர்ள்ஸ். அங்கே ஏதோ கூட்டம். போய் வேடிக்கைப் பார்ப்போமா?

    அபூர்வாகேட்டாள்.

    போப்பா. பசி கிள்ளுகிறது. போய் சாப்பிடுவோம். அப்புறம் நீங்க என்ன வேணா செய்யுங்க.

    ஆமாண்டி கல்யாணி? நேத்து சரியாவே நான் சாப்பிடலை, வாங்கடி சாப்பிடப் போகலாம்.

    ஹேய் இந்த பிருந்தா எப்பவும் தீனிப் பிசாசு. சாப்பிட பர்ஸ்ட் போயிருவா.

    இப்படி ஜெஸிந்தா சொன்னதும் பிருந்தாவின் முகம் சோர்ந்து விட்டது. கண்களில் நீர் எட்டிப் பார்க்கலாமா என விசாரிக்க ஆரம்பித்தது. பாவம் பிருந்தா! ஹரிணியின் உதவியால் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவள். மற்றவர் அறியாமல் ஹரிணி அவளுக்கு உதவி செய்வாள். சில சமயம் காலேஜ் கல்லூரிக் கட்டணம் கூட கட்டுவாள்.

    பிருந்தாவின் மனதில் என்றும் அவள் ஒரு கடைநிலை ஊழியர் மகள் என்கிற எண்ணம் வராத வண்ணம் பழகுவாள் ஹரிணி. அவள் தோழிகள் ஏதேனும் இப்படித் தங்களை அறியா வண்ணம் சொல்கையில் அவள் நொந்து போவாள். இப்போதும் அப்படியே நடந்தது.

    ஹரிணி அவளை அணைத்துக் கொண்டாள். சே.. இதுக்குப் போய் எதுக்கு அழறே பிருந்தா? அவங்க வேடிக்கையாத்தான் சொன்னாங்க. எனக்குக் கூட உண்மையில் பசிக்குது. வாங்கப்பா எல்லோரும் போகலாம்.

    ஹரிணி வெளியே இப்படிச் சொன்ன போதும் அவளுக்கு ஏனோ பசிக்கவே இல்லை. இனம் புரியாத கலக்கம் ஒன்று இதயத்தில் உட்கார்ந்துத் தொண்டையை அடைப்பது போல இருந்தது.

    அப்பாவின் மனம் கவர்ந்த விநோத் அவள் இதயத்தைக் கொள்ளையிட்டவன். அவள் தந்தை வியாஸ்திரிவேதி இவள் திருமணத்திற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். விநோத்தின் வீட்டில் கூட போய்ப் பேசி வந்து விட்டார். அவர்கள் சம்மதித்து விட்டார்கள். அவள் தந்தையிடம் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம் பெறுபவனுக்கு தன் மகளை மணமுடிக்க சம்மதித்தது பெரிய விஷயம்.

    அவர்கள் இனத்தில் சுற்றி வளைத்து சொந்தமாய் இருக்கும் ஷைலேந்தருக்கு அவளைக் கொடுக்க வேண்டும் என்று அம்மா உயிருடன் இருக்கும்போதே ஏற்பாடு. ஷைலேந்தருக்குத் தந்தை கிடையாது. அவன் தான் திரைப்படங்களுக்கு ‘பைனான்ஸ் செய்வது'உட்பட இன்னும் சில வியாபாரங்களைக் கவனித்து வருகிறான்.

    அடிக்கடி இவர்கள் வீட்டிற்குக் கூட வருவான். பார்ப்பதற்கு நல்ல நிறமாகவும் அழகாகவும் இருந்தான். ஆனால் ஏனோ அவனைக் கண்டாலே ஹரிணிக்குப் பிடிக்கவில்லை. பேசுவாள். அவன் பெரிய ஜோக் என நினைத்துச் சொல்பவற்றுக்குக் கடனே என்று சிரித்து வைப்பாள். அப்பாவும் அவனும் சேர்ந்தால் லேவாதேவி, கட்டுமானம், ரியல் எஸ்டேட் பிஸினஸ் என பேசஆரம்பித்து விடுவார்கள்.

    அவர்களுக்கு மனித மனங்களைவிட பணம்தான் பெரிய விஷயம் என்பதை ஹரிணி அறிவாள். ஷைலேந்தருக்கு மகளை மணமுடிப்பதால் இரண்டு நிறுவனங்களும் சேர்ந்தால் நகரில் பெரிய ஒரு பணக்காரக் குடும்பமாய் தாங்கள் திகழலாம் என்கிற எண்ணம். ஆனால் இவள் கனவை அறிந்ததும் தன் எண்ணங்களை அப்பா அழித்துக் கொண்டார். எத்தனை அப்பாக்கள் இப்படி இருப்பார்கள். அவள் அப்பா மிகவும் நல்லவர். கோடியில் ஒருவர்.

    ஹே அபூர்வா, ஹரிணியைப் பாரு. சாப்பிடாம எங்கோ பார்வையை அலைய விட்டிருக்கா.

    '’சர்தான். நீ யாரையாவது காதலிச்சிருக்கியா, அப்பதான் உனக்குத் தெரியும்! இப்ப நாம யாரும் அவ முன்னாடி இல்லை. விநோத்... விநோத் மட்டும்தான் நிறைஞ்சு இருக்கார்."

    '’ஹரிணி, இங்கே பாரு. நீ சாப்பிடவே இல்லை. அப்பப்பிடிச்சு இந்த பிரட்டை வச்சிட்டு உட்கார்ந்திருக்கே பாரு."

    போதும் பிருந்தா. வயிறு நிறைஞ்ச மாதிரியிருக்கு. வேண்டாம். காபியை ஊத்திக் கொடுங்க.

    நான் அப்பவே சொல்லலை. ஜெஸிந்தா இதைச் சொல்லி கண் அடிக்கவும் தோழிகள் அனைவரும் ஒரே நேரத்தில் சிரித்தார்கள்.

    ஏய் என்ன அது எனக்குத் தெரியாமே?

    காதல் மனசுக்குப் பசியெடுக்காதுன்னு சொன்னோம். அது சரியாப் போச்சு.

    சீ…. போங்கப்பா…. எப்பப் பாரு கிண்டல்தான் உங்களுக்கு. மனசு என்னமோ நேத்திலேர்ந்து கிடந்து துடிக்குது.

    துடிக்காதா பின்னே. அஞ்சு நாளாச்சு விநோத்தைப் பிரிஞ்சு கவலைப்படாதே ஹரிணி. நாளைக்கு ஊருக்குப் போனதும் உன் விநோத்தைப் பாரு. அப்படியே காதல் பரிசா என்ன கேட்கிறே தெரியுமா.

    அவள் காதில் கிசுகிசுத்தால் ஜெஸிந்தா. சீ... போடி ஜெஸி…. சுத்த மோசம்…. அப்படி யெல்லாம் நாங்க பழகலைப்பா. பேச்சோடு சரி.

    சிட்டிக்குப் போனதும் உன்னோட விநோத்தை அழைச்சுட்டு வந்து எங்களுக்கு அறிமுகம் செஞ்சுவை ஹரிணி.

    ஒ.கே. நாளைக்கே அடையார் கேட் ஹோட்டல்லே உங்க அனைவருக்கும் விநோத்தை அறிமுகம் செய்யறேன். அப்படியே டின்னர் சாப்பிடறோம்.

    பெண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது.

    அவர்கள் அமர்ந்திருந்த புல்வெளியில் பல ஆண்களும் பெண்களும் ஒடினார்கள்.

    பிருந்தா நிறுத்தி கேட்டாள். யாரும் சரியான பதில் சொல்லவில்லை.

    '’வாடி, நாமும் போய்ப் பார்க்கலாம். டிரைவர்! இதையெல்லாம் எடுத்து வச்சிருப்பா."

    பெண்கள் கூட்டம் அப்படியே எழுந்துக் கொண்டன. ஹரிணி மட்டும்தான் அப்படியே அமர்ந்திருந்தாள்.

    ஹேய் என்ன நீ. வாப்பா போய்ப் பார்க்கலாம்.

    நோ. ஏதாவது ஷூட்டிங் நடக்கும். அதை வேடிக்கைப் பார்க்க ஒடறாங்க அதைப் போய் நாம பட்டிக்காடு போல பார்த்துட்டு….

    சர்தான் வாடி ஹரிணி. என்னன்னு தான் போய்ப் பார்ப்போமே.

    தோழிகள் அவள் விருப்பத்திற்கு மாறாக அவளை கைப்பிடித்து அழைத்துப் போனார்கள்.

    அருவி விழுந்து ஒடும் கரையில் மக்கள் கூட்டம் அலை மோதிற்று. ஹரிணியின் விருப்பம் இல்லாமலே தோழிகள் அவளைத் தள்ளிக் கொண்டு கூட்டத்தில் புகுந்தார்கள்.

    ஆண் பெண் என்கிற பேதம் இல்லாமல் நெருக்கித் தள்ளினார்கள். தோழிகள் மீது கோபம் வந்தது ஹரிணிக்கு. அந்தக் கூட்டத்தில் சிக்கிக் கொண்டு வர முடியாமல்….

    அவள் விரும்பாமலே முன்னே தள்ளப்பட்டாள்.

    கூட்டம் சுற்றி வளைத்து நிற்க, நடுவே இளைஞன் ஒருவன் நீரில் உப்பிய உடலுடன் கிடந்தான். அவனுக்கு உயிர் இருப்பதாய் தெரியவில்லை. காக்கி உடைகள் கூட்டத்தைப் பிடித்துப் பின்னுக்குத் தள்ளிற்று.

    கூட்டம் போடாதீங்க… போங்கப்பா. போங்க. இன்ஸ்பெக்டர் இப்போ வறார்.

    ஹரிணிகண்இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் புரியவே சில நொடிகள் ஆயிற்று.

    தோழிகள் அவளை வருமாறு கைப்பிடித்து இழுத்தார்கள். அவள் நின்ற இடத்தைவிட்டு அசையவேயில்லை. பிருந்தா அவளை அணைத்தபடி அழைத்துவர முயல்கையில்... அது நடந்தது.

    அப்படியே சரிந்து மயக்கமானாள் ஹரிணி.

    அங்கே பிணமாய் இளைஞன் ஒருவன்; இங்கே மயக்கமாய் பருவப் பெண் ஒருத்தி. கூட்டம் வேடிக்கைப் பார்த்தது. தோழிகள் கிலியுடன் விழித்தார்கள்.

    ***

    2

    கங்கா அப்படி ஒரு பேரிடி வந்து தாக்கும் என்று நினைத்தவள் அல்லள். ஆனால் இப்போது இடிந்து மூலையில் உட்கார்ந்து விட்டாள். மகள் சரயூ மேலும் கலங்கிப் போனாள், அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்கங்கா.

    மகன் விநோத்தை எப்படியெல்லாம் சிரமப்பட்டு பலநேரம் உண்ணாமல் உறங்காமல் விழித்திருந்து என்ஜினீயரிங் படிக்க வைத்தாள் என்பது அவளுக்குத்தான் தெரியும். தனியார் பள்ளி ஒன்றில் அவள் தமிழ் கற்பிக்கும் ஆசிரியை. சம்பளம் ஐயாயிரத்தைத் தாண்டாது. அதற்கே எல்லோருக்கும் சலாம் அடிக்க வேண்டிய நிலை. அது ஆங்கிலப்பள்ளி. அதில் தமிழ் கற்பிப்பதால் இவளைக் கண்டாலே ஒரு தீண்டாமை கண்ணோட்டம் மற்றவர்களுக்கு. ‘உங்கள் தாய் மொழி தமிழ்தானே. அதைச்சொல்லிக் கொள்ளவும் ஏன் வெட்கப்படுகிறீர்கள். தொன்மை வாய்ந்த செறிவு மிக்கத் தமிழைப் பேச நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே’ என்று கத்தத் தோன்றும். ஆனால் வீட்டில் வளர்ந்த மகனையும், மக்களையும் அவர்கள் எதிர்காலத்தைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு இழைக்கப்படும் அவமானங்களை அவள் ஜீரணிக்கப் பழகிக் கொண்டிருந்தாள்.

    அப்படித் தான் விநோத் பள்ளியில் சிறப்பாய் நிறைய மார்க்குகள் வாங்கி தேர்வு பெற்றிருந்ததால் அவனுக்கு எளிதாய் என்ஜினீயரிங் சீட் கிடைத்தது. பணம் எதுவும் கட்டாமலே கிடைத்தது என்பது பெரிதும் வியப்புக்குரிய விஷயம். கல்லூரிக் கட்டணம், புத்தகச் செலவு அவன் போக்குவரத்து உடை என அதுவே பல ஆயிரங்களை இழுத்து விட்டது. அங்கே இங்கே கடன் வாங்கி மாலையில் பள்ளிப் பிள்ளைகளுக்குத் தனிப்பாடம் சொல்லிக் கொடுத்து பணம் சேர்த்தாள்.

    கொஞ்சம் பெரிய வகுப்புப் பிள்ளைகளுக்கு விநோத்தும், சரயூவும் சொல்லிக் கொடுப்பார்கள். அவர்கள் தந்தை நிராதரவாய் அவர்களை விட்டுப்போன போது எப்படியெல்லாம் தவித்திருக்கிறாள் கங்கா. அதை அவள் நெஞ்சு மட்டுமே அறியும். வாழ வேண்டிய வயதில் வீட்டில் இளம் மனைவி கண்ணிறைந்த இரண்டு பிள்ளைகள் இருக்கையில் அலுவலகத்தில் கண்ட ஒரு பெண்ணோடு தொடர்பு. அதை எத்தனை நாட்கள் பொறுத்திருப்பாள் கங்கா.

    அவன் வாங்கி வரும் சம்பளம் நாளாவட்டத்தில் பாதியாகக் குறைந்தது. அது அவன் தேவைகளுக்கே போதவில்லை. அந்த நேரம்தான் அவள் வேலைத் தேடினாள். சாதாரணப் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த அவளுக்கு என்ன வேலை கிடைக்கும்? தனியார் பள்ளி ஒன்று அவளை வரவேற்றது.

    அவள் வேலைக்குப் போனதும் கணவன் நடராஜன் கொண்டு வரும் பணம் இன்னும் குறைந்து விட்டது. வாரம் இருமுறை அவன் வந்தாலே பெரிய விஷயமாக இருந்தது. அப்போது விநோத் எட்டாம் வகுப்பும், சரயூ இரண்டாம் வகுப்பும் படித்து வந்தார்கள். விநோத் ஒரளவு விவரம் புரிந்தவன். தந்தை வீட்டிற்கு வரும் நாட்களில் யாரோ வேற்று ஆளைப் பார்ப்பதுபோல பார்ப்பான். ஆனால் குழந்தை சரயூ மட்டும் அவன் மடியில் ஏறி செல்லம் கொஞ்சுவாள்.

    ஏன்பா, நீ நேத்து வரலை. உன்னைக் காணலைன்னு நான் அழுதேன்பா. சாப்பிடாம துங்கிட்டேன். குழந்தை தந்தையைக் கட்டிக்கொண்டு அழும்.

    ஆமாண்டா செல்லம். ஆபீஸ்லே வேலை இருந்துச்சுடா கண்ணு. அதான் வரலை. நீ சமர்த்தாச் சாப்பிட்டு ஸ்கூல் போகணும். அப்பதான் அப்பா வருவேன். நடராஜன் பேசும்போதுகங்காவின் உள்ளம் பொங்கும்.

    அவனை எந்த நேரத்திலும் அவள் மன்னித்துதான் வந்திருக்கிறாள். ஆனால் குழந்தையிடம் இப்படியொரு பொய் சொல்லும்போது மட்டும் அவளால் பொறுக்க முடியாது.

    நீவாம்மா. தலை வாரிபூவச்சுக்கலாம்.குழந்தைக்குப் பேதம் தெரியாமல் தன்னிடம் இழுத்துக் கொள்வாள்.

    விநோத் மட்டும்தான் கணவன் போனபின்பு இவளிடம் கிசுகிசுப்பான். ஏம்மா, இந்த அப்பா இன்னும் இங்கே வறார். அங்கேயே இருந்துக்க வேண்டியதுதானே. போம்மா… நேத்து எங்க ஸ்கூல் பையன் கேட்டான். ஏண்டா உங்கப்பா யாரோ ஒரு பொம்மனாட்டியோட சிரிச்சுப் பேசிட்டுப் போயிட்டிருக்காரு. அது யாருன்னு கேட்டான். எனக்கு அவமானமாப் போச்சும்மா.

    இவளுக்கு பெரும் ஆறுதலாக நிழலாகப் பெரிய மனித தோரணையுடன் இவளுக்கு ஒரு பாதுகாவலன்போல தோற்றம் அளித்த மகன் போய் விட்டான். திரும்ப வரப்போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. பாழும் காதல் அவள் கண்மணியின் வாழ்வில் இப்படியா குறுக்கிட்டுச் சாய்க்கும். அவனாகக் கொண்டது அல்ல, அந்தக் காதல். தானாக வந்து அவன் தோளில் விழுந்து அவன் உயிரையே பறித்துப் போய் விட்டது.

    அப்படியா காதலியைத் தேடி ஓடவேண்டும். தாயிடம் ஒரு வார்த்தைச் சொல்லிக்கொள்ள, அவனுக்கு ஏன் தோன்றவேயில்லை. காதலி வந்ததும், அடுத்த மாதம் திருமணம் என்றதும் பெற்ற தாயையே மறக்கச் சொல்லுமோ….

    கங்காவின் மனம் இறுகி கல்லாகி விட்டிருந்தது. கண்கள் காய்ந்து ஒரு சொட்டுக் கண்ணீர் உதிர்க்கவில்லை. அதோ அங்கே பெரிய ஆஸ்பத்திரியின் வராண்டாவில் நின்று அநாதை போல சரயூதான் பிழிய பிழிய அழுது கொண்டிருக்கிறாள். இவள் அழுகையையும் சேர்த்து வைத்து அவள் அழுது கொண்டிருக்கிறாள்.

    தெரிந்தவர்கள், அவன் நண்பர்கள் என ஆக வேண்டியதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் காதலியின் தந்தை முன் நின்று ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். உடலை சீரழிக்காமல் வெளிக்கொணர காக்கி உடுப்புகள் அலட்டிக் கொள்ளாமல் இருக்க கரன்ஸிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். அவர் பெண் காதலித்த தோஷத்திற்காக ஏற்படாத ஒர் உறவுக்காக அவர் முன்நின்று செய்து கொண்டிருக்கிறார்.

    அவனைப் பெற்றவர் இப்போது எங்கே. யார் மடியில் கிடக்கிறாரோ. அந்த மதுரம் என்கிற பெண்ணோடு மட்டும் வாழ்கிறாரோ, அன்றி மனைவியையும், பிள்ளைகளையும் கழற்றி நடுத்தெருவில் விட்டதுபோல அவளையும் விட்டு விலகி வேறு ஒர் இளசைத் தேர்ந்து எடுத்துக் கொண்டாரோ.

    பெற்றவர் என்கிற முறையில் தந்தைக்குச் சொல்லி அனுப்ப வேண்டுமோ. அது அவசியம் போலத் தெரிய வில்லை கங்காவிற்கு. மகன் உயிருடன் இருக்கும்போது எந்த ஒரு செயலையும் ஏன் அவன் பள்ளி பிராகரஸ் ரிப்போர்ட்டில் கூட அவர் கையெழுத்து போட்டதில்லை. இவள்தானே போட்டு வந்திருக்கிறாள்.

    கடைசியாக அவர் வந்தது அவன் பிளஸ் டூ படிக்கும் போதுதான். ஒரு சைக்கிள் இருந்தால் பள்ளிக்குப் போய் வர செளகரியமாக இருக்கும். பஸ் கட்டணத்திற்காகச் செலவு செய்ய வேண்டாம். பஸ் நெரிசலில் நெரிபடும் நேரம் அதிகமாய்ப் படித்து மார்க் பெறலாம் என்கிற அவன் எதிர்பார்ப்பு கனவாகவே இருந்தது. அப்போதுதான் அவன் தந்தை வந்தார். விடிந்தால் பொங்கல். ஆனால் யாருக்கும் உடையோ அன்றி வேறு எதுவுமோ வாங்கப்படவில்லை. கையிருப்புப் பசியில்லாமல் பார்த்துக் கொள்வதிலேயே கரைந்து போய்க் கொண்டிருக்க இதில் பண்டிகைகளுக்கும் திருவிழாக்களுக்கும் எங்கே போவது?

    எப்படி இருக்கே கங்கா. குழந்தைகளுக்குப் புது துணிமணி எடுத்தியா. நீ எடுத்திருப்பேன்னு தெரியும். அதான் நான் எதையும் வாங்கி வரலை. அவர் வெறும் கை வீசி வந்திருந்தார்.

    மீசை அரும்பு விட்டிருந்த நேரமிது. விநோத்திடம் அப்படியொரு

    Enjoying the preview?
    Page 1 of 1