Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennai Naan Santhithen
Ennai Naan Santhithen
Ennai Naan Santhithen
Ebook953 pages3 hours

Ennai Naan Santhithen

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100402868
Ennai Naan Santhithen

Read more from Rajesh Kumar

Related to Ennai Naan Santhithen

Related ebooks

Reviews for Ennai Naan Santhithen

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennai Naan Santhithen - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    என்னை நான் சந்தித்தேன்

    (எழுத்துலகில் ஓர் எதிர்நீச்சல்)

    Ennai Naan Santhithen

    (Ezhuthulagil Oor Ethirneechal)

    Author :

    ராஜேஷ்குமார்

    Rajeshkumar

    For other books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    என்னை நான் சந்தித்தேன்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    நான் முகம் பார்த்த கண்ணாடிகள்

    1. என் முதல் பிரசவம்!

    2. ஹார்மோன் கலாட்டா

    3. ஆகஸ்ட் 15-ம் நானும்

    4. நானும் கடவுளும்

    5. நானும் முள் நிலவும்

    6. குமுதத்தில் என் பிரவேசம்

    7. குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பியும் நானும்

    8. ஆனந்த விகடனில் நான் எழுதிய புதுமைத் தொடர்!

    9. நானும் என் வாசகர்களும்

    10. அதிசயம் ஆனால் உண்மை

    11. நினைக்காதது நடந்தது!

    12. கேட்காமலே கிடைக்கும் பதவி உயர்வுகள்

    13. எண்கள் நம்மை ஆள்கின்றதா? நானும் நியூமலராஜியும்!

    14. எண்களும் மனிதர்களும்

    15. உண்டென்றால் அது உண்டு

    16. கதவைத் திறந்தேன் புயல் அடித்தது!

    17. நான் பார்த்த மினி இந்தியா

    18. இருக்கு ஆனா இல்லை!

    19. இன்னார்க்கு இன்னாரென்று...

    20. மனைவி ஒரு மகா மந்திரி

    21. பல நேரங்களில் பல மனிதர்கள்

    22. ஒரு சின்னத் தீப்பொறியும், காட்டுத் தீயும்

    23. சரி + சரி = தப்பு

    24. ஒரு மில்லியன் டாலர் கேள்வி

    25. விடையில்லா விடுகதைகள்

    26. அக்கறையாய் ஓர் அக்கிரமம்

    27. அவமானங்கள் உரமாகும்

    28. தெரிந்த வார்த்தைகளும் தெரியாத உண்மைகளும்

    29. மனித மனம் ஒரு க்ரைம் நாவல்

    30. அந்த ஆறு நாட்கள்

    31. என் கைக்குச் சிக்கிய வைரங்கள்

    32. எது சத்தியம்?

    33. ஓர் உண்மைச் சம்பவம்

    34. இப்படியும் சிலர்

    24 காரட் துரோகம் எச்சரிக்கை இது கதை அல்ல!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    என்னுரை

    என் பாசத்துக்குரிய வாசக உள்ளங்களே!

    வணக்கம்.

    உங்கள் கைகளில் இடம் பிடித்துள்ள 'என்னை நான் சந்தித்தேன்' என்ற தலைப்பிட்ட புத்தகம் பார்வைக்குப் புத்தகமாக தெரிந்தாலும், அது கிட்டத்தட்ட என்னுடைய இதயம். அதாவது, என்னுடைய இதயத்தை நானே ஜெராக்ஸ் செய்து இருக்கிறேன்.

    இது என் வாழ்க்கையின் சுயசரிதை இல்லை. நான் ஒரு எழுத்தாளனாக எப்படி பரிணாமம் பெற்றேன் என்பதை சொல்லும் முயற்சிதான் இது. நான் ஏற்கெனவே 'எவரெஸ்ட் தொட்டு விடும் உயரம்தான்' என்னும் தலைப்பில் 1985-ல் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அந்தப் புத்தகத்தில் நான் பல விஷயங்களை சொல்லாமல் தவிர்த்துவிட்டேன். ஆனால் இந்த என்னை நான் சந்தித்தேன் புத்தகத்தில் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடியே சொல்லியிருக்கிறேன்.

    நான் என் வாழ்க்கையில் சந்தித்த நபர்கள் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு கிராமத்தில் இருக்கும் வாசகராய் இருந்தாலும் சரி, நான் அவர்களிடம் இருந்து ஏதாவது ஒரு வகையில் பயன்தரத்தக்க அளவுக்குக் கற்றுக்கொள்வதை கடமையாக வைத்து இருக்கிறேன். அப்படி நான் கற்றுக்கொண்ட பல விஷயங்களை, இதில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அந்த விஷயங்களில் பெரும்பாலானவை கசப்பானவை. அந்தக் கசப்பான சம்பவங்கள் எல்லாம் எப்படி இனிப்பாக மாறின என்பதையும், அதற்காக நான் என்னென்ன முயற்சிகளை எடுத்தேன் என்பதையும் இந்த நூலிலே சொல்லியிருக்கிறேன்.

    என்னுடைய வாழ்க்கைப் பதிவுகளை 'சூரிய கதிர்' மாத இதழில் 25 வாரங்களாக எழுதி முடித்து என் முதல் பாகத்தை நிறைவு செய்தபோதுதான், 'அமராவதி' நிறுவனர் திரு. பெ. ஜெகநாதன் அவர்கள் நண்பர் திரு. மேஜர்தாசனோடு, என்னை வந்து பார்த்தார். என்னுடைய அனைத்து நாவல்களையும் அமராவதி'யின் மூலம் புத்தகங்களாக கொண்டு வரும் தன்னுடைய ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். அவைகள், எல்லாம் புத்தகங்களாக வரும் முன்பு என்னுடைய சுயசரிதையான 'என்னை நான் சந்தித்தேன்' தொடரை ஒரு மெகா, மகா புத்தகமாக கொண்டு வர விருப்பப்பட்டார்.

    பதிப்பகத்துறையில், 30 ஆண்டு காலம் அனுபவம்மிக்க பெ. ஜெகநாதன் அவர்கள் தன்னுடைய அமராவதி'யின் மூலம் ஒரு அற்புதமான புத்தகமாக மாற்றி 'என்னை நான் சந்தித்தேன்' உங்களின் கரங்களில் தவழவிட்டுள்ளார். என் வாழ்க்கை நிகழ்வுகளை அழகிய நூலாய் வடிவமைத்து கொடுத்த திரு. பெ. ஜெகநாதன் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'என்னை நான் சந்தித்தேன்' முதல் பாகம், இந்த வருடம் உங்கள் கைகளில் இடம் பிடித்ததைப்போல் இதனுடைய இரண்டாம் பாகம் அடுத்த வருடம் உங்கள் கைகளில் இருக்கும்.

    இந்த நூலைப் படித்துவிட்டு, எந்த ஒரு வாசகராவது எதிர்காலத்தில், ஒரு ராஜேஷ்குமாராய் உருவானால், அதுவே என்னுடைய எழுத்துக்குக் கிடைத்த சிறந்த வெற்றியாகவும், விருதாகவும் நினைப்பேன்.

    மீண்டும் இந்த நூலின் இரண்டாவது பாகத்தில் சந்திப்போம்.

    வணக்கம்.

    மிக்க அன்புடன்

    ராஜேஷ்குமார்.

    என்னை நான் சந்தித்தேன்

    1

    இந்தத் தொடரை எந்த இடத்திலிருந்து ஆரம்பித்தால் சரியாக இருக்கும் என்று மூன்று இரவுகள் யோசித்துப் பார்த்தும் எதுவும் பிடிபடாமல் போகவே, அந்த யோசிப்புக்கு வாய்தா வாங்கிவிட்டு, எனது வழக்கமான எழுத்துப்பணியை தொடர்ந்து கொண்டிருந்தேன். நடுவில், ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டிய ஒரு அன்புக்கட்டாயம்.

    போய் கலந்து கொண்டேன். மிகப்பெரிய பொறியியல் கல்லூரி அது. ஆண்களும் பெண்களுமாய் அரங்கத்தை நிரப்பி வைத்து ஏ.ஸி. காற்றை சூடாக்கியிருந்தார்கள். மேடையில், என்னையும் சேர்த்து மூன்று சிறப்பு விருந்தினர்கள். ஒருவர் புகழ் பெற்ற டாக்டர். இன்னொருவர் தேசிய அளவில் விருது வாங்கிய தொழிலதிபர். கல்லூரி நிர்வாகம் எனக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த இரண்டு பேர்க்கும் நடுவில் இருந்த மைய நாற்காலியில் உட்கார வைத்தார்கள். எனக்கு, அது ஒரு வகையில் நெருடலாய் இருந்தாலும், ஓர் எழுத்தாளனுக்கு உரிய மரியாதையையும் சிறப்பையும் தரவேண்டும் என்று நினைத்து செயல்பட்டது, மனதுக்கு நிறைவாக இருந்தது.

    விழாவில் நான் இறுதியாக பேசுவதற்கு முன்பு என்னுடைய பயோ-டேட்டாவை ஒருவர் வாசித்தார்.

    ''இன்றைக்கு நமக்கெல்லாம் 'ராஜேஷ்குமார்' என்கிற பெயரோடு நன்கு பரிச்சயமாகியுள்ள இவரின் இயற்பெயர் ராஜகோபால். 1970-ல்களில் கொடிகட்டிப்பறந்த எழுத்துலக ஜாம்பவான்கள் அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சாண்டில்யன், லஷ்மி, சிவசங்கரி, சுஜாதா போன்ற எழுத்துலக மாமேதைகளுக்கு, நடுவே தன் போ மூடியைக் கழற்றியவர். ஆரம்பத்தில், தோல்விகள் துரத்தி வந்தாலும், அதன் கோரக் கைகளில் சிக்கிவிடாமல், அசுர வேகத்தில் ஓடி வெற்றிக் கோட்டைத் தொட்டவர். கடந்து 41 வருட காலத்தில் 1500க்கு மேற்பட்ட நாவல்களையும், 2000க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதி முடித்துவிட்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர். இது தவிர...

    என்னுடைய பயோ-டேட்டா படிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் என் மனசுக்குள்ளே இருந்த ராஜகோபால் ராஜேஷ்குமாரைப் பார்த்து ''என்ன இப்படியெல்லாம் நடக்கும்னு நீ எதிர்பார்க்கலைதானே?'' என்று கண் சிமிட்டிக் கேட்டுக் கொண்டு இருந்தான். உண்மை தான்! இந்த ராஜகோபாலும், இந்த ராஜேஷ்குமாரும் எங்கே எப்போது சந்தித்துக் கொண்டார்கள்? காலப்போக்கில் ராஜேஷ்குமார் மட்டும் எல்லோர்க்கும் தெரிய, அந்த ராஜகோபால் எப்படி காணாமல் போனான்? ராஜகோபாலுக்கு கிடைக்காத பேரும் புகழும் ராஜேஷ்குமாருக்கு மட்டும் கிடைத்தது எப்படி? இது போன்ற கேள்விகளும் என்னுடைய மனசுக்குள் எட்டிப்பார்த்தன.

    நான் எழுத்தாளனாக அவதாரம் எடுப்பேன் என்றோ, என் பெயர்க்கு முன்னால் 'க்ரைம் கதை மன்னன்' என்கின்ற பட்டம் ஒட்டிக்கொள்ளும் என்றோ, நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. என் பள்ளிக்கூட நாட்களில் நான் பத்தாவது படிக்கும் பொழுது, என்னுடைய வகுப்பு ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் பார்த்து, நீ எதிர்காலத்தில் எந்தத் தொழில் செய்பவராக வரப்போகிறாய்? என்று கேட்டார். மாணவர்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப டாக்டர், என்ஜினியர், வக்கீல் என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். என்முறை வந்தபோது, நான் எழுந்து சொன்னேன்.

    ''அக்ரி ஆபீஸர்.''

    ஆசிரியர் என்னை வியப்பாய் பார்த்தார்.

    ''என்ன சொன்னே?"

    ''அக்ரி ஆபீஸர்''

    ''அதாவது விவசாய அதிகாரி?"

    ''ஆமா ஸார்! பியூஸி (அப்போது ப்ளஸ் டூ கிடையாது) முடிச்சதும், பி.எஸ்.சி அக்ரி கோர்ஸ் எடுத்து படிச்சு ஒரு விவசாய அதிகாரியாய் ஏதாவது கிராமத்துக்குப் போய் வேலை செய்யணும்ன்னு ஆசை.''

    ''ஏன் அப்படி..?''

    எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆசிரியர் என்பக்கத்தில் வந்து, நின்று முதுகைத் தட்டிக் கொடுத்தார். மெல்லச் சிரித்தார்.

    ஒரு நாட்டின் உயிர்நாடி விவசாயம்தான். உன்னை மாதிரியே எல்லாரும் இருந்துட்டா, நாட்ல பஞ்சமே வராது! நல்லாப்படி... பி.எஸ்.சி அக்ரிக்கு சீட் கிடைக்கணும்ன்னா எழுபது பர்சென்ட் மார்க் இருக்கணும்.

    ''நல்லாப் படிப்பேன் ஸார்."

    அதற்குப் பிறகு அந்த ஆசிரியர் என்னைப் பெயர் சொல்லி கூப்பிடவேயில்லை. ''என்ன அக்ரி ஆபீஸர்! சயன்ஸ் சப்ஜெக்ட்ல மார்க் கம்மியா எடுத்திருக்கீங்க!'' என்று கேலியாய் சிரித்துக் கொண்டே என் காதைப் பிடித்து திருகுவார். மாணவர்கள் யாவரும், என்னை அப்படியே கூப்பிட்டு வரவே, என்னுடைய மனசுக்குள் ஒரு வைராக்கியம் பிடித்தது. எப்படியும் நல்ல முறையில் படித்து எழுபது சதவீத மார்க் எடுத்து, பி.எஸ்.சி. அக்ரியில் சீட் வாங்கியே தீருவது என்கிற முடிவுக்கு வந்தேன். பள்ளிபடிப்பு கல்லூரியில் சேர்ந்தேன். கடினமான பி.யூ.சி. படிப்பு பரீட்சை நெருங்கியது. கல்லூரி முடித்ததும், சக மாணவ நண்பர்களோடு விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு, ஒழுங்காய்ப் படித்தேன். என்னுடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா என்று கூட்டுக் குடும்பத்தில் இருந்த அத்தனை பேரும் என்னை அதிசயமாய் பார்த்தனர். ''எந்த ஜில்லாவுக்கு கலெக்ட்ராக, இப்படி விழுந்து விழுந்து படிக்கிறே... போய் விளையாடுடா...!'' என்று என்னுடைய அம்மா புத்தகத்தை பிடுங்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு அந்த ஆர்வம் போயிற்று.

    எல்லா சப்ஜெக்ட்ஸ்களையும், படித்து முடித்து நான் பரீட்சைக்குத் தயாரான வேளையில், அந்த 1965-ஆம் வருடம் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கவே, தமிழ்நாட்டில் இருந்த அனைத்துக் கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டன. கிட்டத்தட்ட மூன்று மாத காலத்துக்குப் பிறகு, போராட்டம் முடிவுக்கு வந்து கல்லூரிகள் திறக்கப்பட்டன. அடுத்த ஒரு மாத காலத்திற்குள், பரீட்சை வந்தது. எங்கே மறுபடியும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்து விடுமோ என்று பயந்து போன அரசின் கல்வித்துறை, அவசர கோலத்தில் இடைவெளி நாட்கள் இல்லாமல் பரீட்சைகளை நடத்தி முடித்தது. பி.யூ.சி.யில் தேர்ச்சி பெற்றேன். மதிப்பெண்களைப் பார்த்தபோது, எனக்கு மயக்கம் வராதகுறை. எப்படியும் 70 சதவீத மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்த எனக்கு, கிடைத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? 69 சதவீத மதிப்பெண். குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் இருந்தால்தான், பி.எஸ்.சி அக்ரி படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அந்த விநாடியே 'அக்ரி ஆபீஸர்' கனவு நொறுங்கிப் போயிற்று.

    1968-ல் நான் பட்டம் (B.Sc.,) பெற்றபோது

    அதன் பிறகு, மனதை ஒருவாறாய் தேற்றிக்கொண்டு அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. பாட்னி (தாவரவியல்) எடுத்துப் படித்தேன். 1968-ல் டிகிரிப் படிப்பை படித்து முடித்த போது, வனக்கல்லூரியில் ஹேர்பேரியம் கலெக்ஷன் துறையில் ஒரு வேலை வாய்ப்புக்கான இண்டர்வியூ எனக்கு வந்தது. பி.எஸ்.சி பாட்னி படித்து, நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இண்டர்வ்யூ லெட்டரிலேயே டைப் செய்து இருந்தார்கள். நான் பி.எஸ்.சி பாட்னி என்பதாலும், ஏ.ப்ளஸ் என்னும் கிரேடுடன் மதிப்பெண்கள் இருந்ததாலும், கண்டிப்பாய் வேலை எனக்குத்தான் என்பதில் நான் உறுதியாய் இருந்தேன். அப்போது வனக்கல்லூரியில் உயர் அதிகாரியாய் இருந்த ஒருவர், என்னுடைய தாத்தாவுக்கு நண்பராய் இருந்த காரணத்தால் அவரையும் இண்டர்வியூக்கு முதல்தினம் சந்தித்து பேசினோம். "உங்கள் பேரனுக்குத்தான் இந்த வேலை. இண்டர்வ்யூ செய்யும் கமிட்டியில் நானும் இருப்பேன். இண்டர்வ்யூ மத்தியானம் இரண்டு மணிக்குள் முடிந்துவிடும். மூன்று மணிக்குள் உங்கள் பேரன் கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கண்டிப்பாய் இருக்கும்'' என்று சொன்னார்.

    மறுநாள் இண்டர்வ்யூ, காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து கோவிலுக்குப் போய், என் இஷ்ட தெய்வமான ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்பாளைக் கும்பிட்டு, இந்த வேலை எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சைக்கிளில் கிளம்பிவிட்டேன். (1960களில் ஒருவரிடம் சொந்த சைக்கிள் இருந்தாலே, இந்த காலத்தில் கார் வைத்து இருப்பதற்கு சமம்).

    என்னுடைய வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது வனக்கல்லூரி. அங்குதான் இண்டர்வ்யூ. சரியாய் 10 மணிக்குத்தான் இண்டர்வ்யூ ஆரம்பம் என்றாலும். எட்டே முக்கால் மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டேன். கிடைக்கப் போகும் மத்திய அரசு வேலையால், மனசுக்குள் சந்தோஷக் கொடி பறந்தது. ஆனால்....

    2

    சிறிது தூரம் போனதுமே, எதிரில் விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம் எதிர்பட்டார். என் நலனில் அவர் அக்கறை கொண்டவர் என்பதால் சைக்கிளை நிறுத்தினேன். அவர் தன் வியப்பான பார்வையால் என்னை நிறுத்தினார்.

    என்ன ராஜகோபால்...! பளிச்ன்னு ட்ரஸ் பண்ணிட்டு இவ்வளவு சீக்கிரம் காலையில் எங்கே கிளம்பிட்டே…?

    அண்ணா! ஃபாரஸ்ட் காலேஜ்ல ஒரு இண்டர்வ்யூ. ஹேர்பேரியம் கலெக்ஷன்ஸ் டிபார்ட்மெண்ட்ல ஒரு போஸ்டிங். அதை அட்டெண்ட் பண்ணத்தான் போயிட்டிருக்கேன்.

    ''அப்படியா..! ரொம்ப சந்தோஷம்... கண்டிப்பாய் உனக்குத்தான் வேலை கிடைக்கும்... வாழ்த்துக்கள்.''

    நான் 'நன்றி' சொல்லிவிட்டு அவரைப் பார்த்தேன். அவருடைய கையில் வைத்து இருந்த பையில், ஒரு சந்தனமாலை ஜரிகை இழைகளோடு எட்டிப் பார்த்தது.

    என்னண்ணா..! மாலையும் கையுமாய்? யாரைப் பார்க்க போயிட்டு இருக்கீங்க?

    "நா. பார்த்தசாரதி மெட்ராஸிலிருந்து நம்ம ஊர்க்கு வந்து ஹோட்டலில் தங்கியிருக்கார். அவரைப் பார்க்கத்தான் போயிட்டிருக்கேன்.''

    நா. பார்த்தசாரதியா..?

    ''ஆமா.''

    ''யார் அவர்...?''

    வேலாயுதத்தின் முகம் லேசாய் மாறியது. கண்களில் கோபம் தெரிந்தது.

    "நா. பார்த்தசாரதி யார்ன்னு உனக்குத் தெரியாதா?''

    ''தெரியாது. யார் அவரு..?''

    அவர் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சொன்னார்.

    ''ராஜகோபால்! நீ படிச்சிருக்கே.. பட்டம் வாங்கியிருக்கே... ஆனா, உலக நடப்புகள் என்னான்னு உனக்குத் தெரியலை. விகடன், குமுதம், கல்கி மாதிரியான வார இதழ்களைப் படிக்கிறதுண்டா?''

    ''அதுதான் உனக்கு நா. பார்த்தசாரதி யார்ன்னு தெரியலை. அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். கல்கியில் அவர் ஒரு தொடர்கதை எழுதிட்டு வர்றார். தலைப்பு 'குறிஞ்சி மலர்'. அற்புதமான கதை. அது மாதிரியான கதைகளையெல்லாம், உன்னை மாதிரியான இளைஞர்கள் படிக்கணும்.''

    நான் சிரித்தேன் ''இந்தக் கதை படிக்கிற வேலையெல்லாம் எனக்கு ஒத்து வராதுண்ணா. அதுல, டயத்தை வேஸ்ட் பண்ணவும் நான் விரும்பலை. மொதல்ல, ஒரு நல்ல வேலை எனக்கு கிடைச்சு, நான் வாழ்க்கையில் செட்டிலாகணும், உங்களுக்கே தெரியும் எனக்கு மூணு தங்கச்சி, ஒரு தம்பி, அப்பா ஒரு ஜவுளிக்கடையில் குமாஸ்தாவாய் வேலை பார்க்கிறார். நான்தான் குடும்பத்துக்கு மூத்தவன். குடும்பப் பொறுப்பை சுமக்கறதுல பங்கு எடுத்துக்க வேண்டாமா…?''

    தாராளமாய் எடுத்துக்க! இருந்தாலும் சமூகத்துல என்ன மாதிரியான நிகழ்வுகள் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க நீ பத்திரிகைகளையும், வார இதழ்களையும் படிக்கணும். நா. பார்த்தசாரதி போன்ற நல்ல எழுத்தாளர்களின் படைப்புகளையும் நீ படிக்கணும். நீ ஓய்வாய் இருக்கும்போது என்னோட பதிப்பகத்துக்கு வா. நா.பா., எழுதிட்டு வர்ற 'குறிஞ்சு மலர்' கதையைப்பத்தி சொல்றேன்!

    அவரும் நா.பா., வைப் பார்க்கும் அவசரத்தில் இருக்க, நானும் தலையாட்டிவிட்டு, சைக்கிளை மிதித்தேன். வடகோவை சென்ட்ரல் தியேட்டர்க்கு எதிரே இருந்த லாலி ரோட்டில், வனக்கல்லூரியின் வளாகம் ஏக்கர் கணக்கில் அடர்த்தியான மரங்களோடு பரவியிருந்தது. நான் கல்லூரியின் வளாகத்துக்குள் நுழைந்து செக்யூரிட்டி அதிகாரிகளிடம் இண்டர்வ்யூ எங்கே நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு உள்ளே போனேன்.

    பழமையான அந்த ஆங்கிலேய காலக் கட்டிடத்துக்கு, முன்பாய் இருந்த மரநிழலில் சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு கேரியரில் வைத்து இருந்த சர்ட்டிபிகேட் அடங்கிய ஃபைலை எடுக்க முயன்றேன். அடுத்த விநாடி ஈரக்கையோடு மின்சாரம் கசியும் சுவிட்ச் போர்ட்டில் கையை வைத்தது மாதிரியான ஓர் அதிர்ச்சி என்னுடைய பின்னந்தலையைத் தாக்கியது.

    சைக்கிளில் கேரியரில் வைத்திருந்த ஃபைலைக் காணோம்.

    ஒட்டு மொத்த சர்ட்டிபிகேட்களும், தொலைந்து போய் விட்ட இந்த நிலைமையில் இண்டர்வ்யூவை எப்படி அட்டெண்ட் செய்வது? பயத்தில் வியர்த்து ஊற்றும் உடம்போடு ஆங்காங்கே சைக்கிளை நிறுத்தி, ரோட்டோரக் கடைகளில் விசாரித்துக் கொண்டே போனேன். எல்லோருமே உதட்டைப் பிதுக்கி தலைகளை ஆட்டினார்கள். சிலர் திட்டவும் செய்தார்கள். 'படிச்சிருக்கே! பொறுப்பு வேண்டாம்!'

    கை கடிகாரத்தில் நேரம் பார்த்தேன். மணி பத்தரை. இனியும் தேடிக்கொண்டு இருப்பதில் பிரயோஜனம் இல்லை. வனக் கல்லூரிக்குப் போய் நேர்முகத் தேர்வு குழுவினரிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான்.

    கல்லூரிக்குள் நுழைந்து மரத்தடியில் சைக்கிளை நிறுத்தி விட்டு இண்டர்வியூ நடக்கும் அலுவலகத்துக்குள் தயக்கத்தோடு அடியெடுத்து வைத்தேன். சுவரோரமாய் வரிசையாய் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள் காத்து இருந்தார்கள். நான் உள்ளே நுழைவதைப் பார்த்ததும், அலுவலகப் பொறுப்பாளர் ஒருவர் என்னிடம் வந்தார். கேட்டார்.

    "நீங்க இண்டர்வ்யூ கேண்டிடேட்டா!''

    ''ஆமா... ஸார்."

    ''என்ன இவ்வளவு லேட்டாய் வந்து இருக்கீங்க!''

    ''அது... வந்து..."

    "சரி... சரி... ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிட்டிருக்காமே... உங்க இண்டர்வ்யூ கார்டைக் குடுங்க...''

    சர்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வைத்து இருந்த இண்டர்வ்யூகார்டை எடுத்துக் கொடுத்தேன்... அவர் வாங்கிப் பார்த்துவிட்டு ஒரிஜினல் சர்ட்டிபிகேட்ஸை சரி பார்க்கணும்... எடுத்துகிட்டு அந்த ரூமுக்கு வாங்க..! என்று சொல்லிவிட்டு அவர் நடக்க ஆரம்பித்து விட, நான் தயக்கமாய் "ஸ... ஸார்!'' என்றேன்.

    "என்ன...!''

    ''சர்ட்டிபிகேட்ஸைக் காணோம் ஸார்...''

    அவருடைய பெரிய நெற்றி சுருக்கங்களுக்கு உட்பட்டது... என்னது சர்ட்டிபிகேட்ஸைக் காணோமா?

    ''ஆமா... ஸார்...''

    ''வாட்… நான்சென்ஸ்…! ஏதோ பென்ஸில் பேனா காணாமே போயிட்டமாதிரி சர்வசாதாரணமாய் சொல்லிட்டிருக்கீங்க!"

    "ஸாரி… ஸார்… சைக்கிளோட பின்சீட்டில் சர்ட்டிபிகேட்ஸ் இருந்த ஃபைலை வெச்சுட்டு வந்தேன். வழியில் எங்கேயோ விழுந்துடுச்சு...''

    சர்ட்டிஃபிகேட்ஸ் இல்லாமே நீங்க இந்த இண்டர்வ்யூவை அட்டெண்ட் பண்ண முடியாதே?

    ''எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியலை ஸார். மறுபடியும் ஒரு தடவை வீடு வரைக்கும் போய் தேடிப் பார்த்துட்டுதான் வர்றேன். இங்கேயிருக்கிற எல்லா கேண்டிட்டேட்ஸையும், இண்டர்வியூ பண்ணி முடிக்கிறதுக்குள்ளே எப்படியும் யாராவது ஒருத்தர் மூலமாய் அந்த சர்ட்டிபிகேட்ஸ் என்னோட கைக்கு வந்துடும்னு நம்பிக்கை எனக்கு இருக்கு ஸார்''. நான் சொன்னதைக் கேட்டு, அவருடைய உதடுகளில் சின்னதாய் கேலிப் புன்னகையொன்று அரும்பியது.

    ''உங்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தா போய் நாற்காலியில் உட்கார்ங்க. இங்கே மொத்தம் இருபது பேர் இண்டர்வியூக்கு வந்திருக்காங்க. இவங்களை இண்டர்வ்யூ பண்ணி முடிக்க எப்படியும் மூணு மணி நேரத்துக்கு மேலே ஆகும். அதாவது மத்தியானம் ரெண்டு மணி ஆயிடும். அதுக்குள்ளே நீங்க உங்க சர்ட்டிபிகேட்ஸை எனக்குக் காட்டியாகணும். இல்லேன்னா இண்டர்வ்யூவை அட்டெண்ட் பண்ணாமே நீங்க திரும்பிப் போக வேண்டியதுதான்...''

    அவர் விதித்த நிபந்தனைக்கு தலையாட்டிவிட்டு, நொறுங்கிப்போன உள்ளத்தோடு நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். என்னுடைய சர்ட்டிபிகேட்ஸ் இருந்த ஃபைலில் இண்டர்வியூ கார்டின் நகல் இருந்ததால், ஃபைல் படித்த நபர்களின் கைகளுக்கு கிடைத்தால் அவர்கள் அதை இங்கே கொண்டு வரக்கூடும் என்கிற நம்பிக்கை என்னுடைய மனசுக்குள் ஒரு நூலிழையாய் ஒட்டிக் கொண்டிருந்தது. எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு, அப்படியே கண் மூடி உட்கார்ந்திருந்தேன்.

    நேரம் விநாடிகளைத் தின்று புஷ்டியாய் வளர்ந்து, மணி ஒன்றரையைத் தொட்டபோது, இண்டர்வ்யூ செய்யப்பட வேண்டியவர்கள், இன்னமும் ஐந்துபேர் இருந்தார்கள். இண்டர்வ்யூ செய்த அதிகாரிகள் பகல் உணவுக்காக கிளம்பி வெளியே வந்தார்கள். அந்த அதிகாரிகளில் ஒருவர் என்னுடைய தாத்தாவுக்கு வேண்டியவர் என்பதால், வேக வேகமாய் அவரைப் பின் தொடர்ந்து போய் தயங்கிய குரலில் ஸார் என்று கூப்பிட்டேன். அவர் திரும்பிப் பார்த்து லேசாய் முகம் மலர்ந்தார். என்னுடைய தாத்தாவின் பெயரைச் சொல்லி நீ அவரோட பேரன்தானே? என்று கேட்டார். நான் 'ஆமாம்' என்று தலையசைத்ததும் என்னுடைய தோளை மெல்லத் தட்டினார்.

    ''நான் பார்த்துக்கிறேன். இண்டர்வ்யூவில் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் சரியான பதில்களைச் சொல்லி ஒரு அறுபது மார்க்காவது ஸ்கோர் பண்ணிடு போதும்''. சொல்லி விட்டு அவர் நகர முயல நான் அழுகிற குரலில், "ஒரு பிரச்னை ஸார்'' என்றேன்.

    "என்ன?''

    நான் சர்ட்டிபிகேட்ஸ் காணாமல் போன விபரத்தைச் சொன்னதும், அவருடைய முகம் கவலையில் விழுந்தது.

    "என்ன இப்படி பண்ணிட்டியே...? இண்டர்வியூக்கு வரும் போது ஒரு ஆட்டோவிலாவது வரக்கூடாதா என்ன...?'' என்று தாடையைத் தேய்த்துக் கொண்டு சொன்னவர், சில வினாடிகள் அமைதியாய் இருந்துவிட்டு ''காணாமே போனது நகையோ பணமோ கிடையாது. அதனால அதை எடுத்தவங்க கண்டிப்பாய் கொண்டு வந்து குடுத்துருவாங்க. நீ இண்டர்வ்யூவை அட்டெண்ட் பண்றதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். நீ போய் எதிர்ல இருக்கிற காண்டீன்ல சாப்பிட்டு வா...''

    சொல்லிவிட்டு அவர் போய்விட, அதுவரைக்கும் என் மனதுக்குள், ஒரு கல் மாதிரி இறுகிக்கிடந்த பயம், இளகி ஒரு பஞ்சுத் துணுக்காய் மாறியது. பயம் முற்றிலும் போய்விட, வயிறு உடனே பசித்தது. எதிரில் இருந்த காண்டீனுக்குப் போய், வெரைட்டி சாதம் சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிக்குத் திரும்பினேன்.

    இரண்டரை மணிக்கு மறுபடியும் இண்டர்வ்யூ ஆரம்பித்து, என்னை உள்ளே கூப்பிட்ட போது மூன்று மணி. நேர்முகத் தேர்வுக் குழுவில் மூன்று பேர் டைகளைக் கட்டிக்கொண்டு, இறுகிப்போன முகங்களோடு உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் பொதுவான கேள்விகளைக் கேட்க மற்ற இரண்டு பேரும் நான் படித்த தாவரவியல் சப்ஜெக்ட்டிலிருந்து சரமாரியாய் மாறி மாறி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். நான் நல்ல முறையில் பிரிப்பேர் செய்துக்கொண்டு போயிருந்ததால், எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதில்களைக் சொல்ல முடிந்தது. கிட்டத்தட்ட பதினைந்து நிமிஷ இண்டர்வ்யூவை முடித்துக்கொண்டு வெளியே வந்தேன். மனம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. ஆனால், மனதின் ஓரத்தில் காணாமல் போன சர்ட்டிபிகேட்டுகள் கிடைக்குமா... கிடைக்காதா? என்கிற சந்தேகம் ஒரு சிறிய ஒத்தியாய்மாறி... அந்த மகிழ்ச்சியை சேதம் செய்துகொண்டிருந்தது.

    மாலை நான்கு மணியளவில் இண்டர்வ்யூ முடிய, நேர்முகத் தேர்வின் உதவியாளர் ஒருவர் வெளியே வந்து வேலைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்ட நபர் யார் என்பதை தபாலில் தெரியப்படுத்துவோம் என்பதைச் சொல்ல, இண்டர்வ்யூக்கு வந்த அனைவரும் கலைந்தோம்.

    நான் மறுபடியும் சைக்கிளை மிதித்து கனத்த மனதோடு வீடு வந்து சேர்ந்தபோது, என்னுடைய தாத்தா வீட்டில் இருந்தார். அம்மா அப்பாவோடு கவலையான குரலில் பேசிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் பொரிந்தார்.

    ''என்ன... சர்ட்டிபிகேட்ஸையெல்லாம் தொலைச்சுட்டே போலிருக்கு?'' தாத்தாவுக்கு அவருடைய நண்பர் போன் மூலம் தகவல் கொடுத்துவிட்டிருக்க வேண்டும். நான் கண்களில் நீரோடு தலை குனிந்து நின்றேன். அப்பாவும் தாத்தாவோடு சேர்ந்து கொண்டார். கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்?

    அம்மா மட்டும் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அவன் என்ன பண்ணுவான்... சைக்கிளிலிருந்து எப்படியோ விழுந்துட்டது...'' தாத்தா எரிந்து விழுந்தார். நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணாதே... எனக்கு தெரிந்த நண்பர் அங்கே இருக்கப்போய், இவனால இண்டர்வ்யூவை அட்டெண்ட் பண்ண முடிஞ்சுது. இல்லேன்னா காலையிலேயே இவன் வீட்டுக்கு வந்து இருக்க வேண்டியவன். அந்த நண்பர் போன்ல என்ன சொன்னார் தெரியுமா...? இவன் இண்டர்வ்யூவில கேட்ட கேள்விக்கெல்லாம் நல்ல முறையில் பதில் சொல்லி நைன்ட்டி பர்ஸண்ட் மார்க் எடுத்திருக்கானாம். சர்ட்டிபிகேட்ஸ் இல்லாததால இவனுக்கு உடனடியாய் அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரை இஷ்யூ பண்ண முடியலையாம்...''

    நான் அழுகையை அடக்கிக் கொண்டு நின்றேன். தாத்தாவின் குரல் உயர்ந்தது. "இதோ பார்! நாளைக்குக் காலை பத்துமணி வரைக்கும் என்னோட ஃப்ரண்ட் டயம் கொடுத்திருக்கார். அதுக்குள்ளே நீ சர்ட்டிபிகேட்டுகளையெல்லாம் கொண்டு போய் ஃபாரஸ்ட் காலேஜ் அட்மினிஷ்ட்ரேஷன் ஆபீஸில் ஒப்படைக்கணும். இல்லேன்னா... அந்த வேலைக்கு வேற யாராவது ஒருத்தரை செலக்ட் பண்ணிடுவாங்க...''

    எனக்கு பகீரென்றது.

    'நாளைக்குக் காலை பத்துமணிக்குள் காணாமல் போன சர்ட்டிபிகேட்டுகள் கைக்கு கிடைக்குமா...?'

    தாத்தா எழுந்து கொண்டார். "உன்னோட தலையில் எப்படி எழுதியிருக்கோ அப்படியே நடக்கட்டும். இது சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலை. கிடைச்சா ஆயுசுக்கும் கவலையில்லை...''

    அப்பா சொன்னார். ''எதுக்கும் ஒரு தடவை சைக்கிளை எடுத்துட்டு வந்த வழியே போய்ப்பார், ரோட்டோரக் கடைகளிலும் கேட்டுப்பார்.''

    மறுபடியும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். வழியில் இருந்த ஒவ்வொரு கடையிலும் இருந்த நபர்களிடம் விஷயத்தை சொல்லி விசாரித்துக் கொண்டே போனேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம்.

    எல்லோரும் உதட்டைப் பிதுக்கி கைகளை விரித்தார்கள். அடித்து துவைத்த துணியாய் துவண்டு போய் ராத்திரி ஒன்பது மணிக்கு வீடு திரும்பினேன். அம்மா எவ்வளவு வற்புறுத்தியும் சாப்பிடப் பிடிக்காமல் இரண்டு டம்ளர் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு படுத்துக் கொண்டேன். நெஞ்சுக்குள் பரவியிருந்த பாரத்தின் காரணமாய் வெகு நேரம் வரைக்கும் தூக்கம் என்னைவிட்டு தள்ளி நின்றிருந்தது. பிறகு எப்படியோ தூக்கத்தின் பிடியில் சிக்கி கண் அயர்ந்து விழிப்பு தட்டியது. எழுந்து உட்கார்ந்தேன்.

    கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே ஆரஞ்சு நிற சூரிய வெளிச்சம். கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்.

    நேரம் சரியாய் ஏழு மணி. இன்னமும் மூன்று மணி நேரம் இருக்கிறது. அந்த மூன்று மணி நேரத்திற்குள் என்ன நடந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    3

    இன்னும் சரியாய் மூன்று மணி நேரம்.

    'காணாமல் போன சர்ட்டிபிகேட்டுகள் கைக்கு கிடைக்குமா? மத்திய அரசு வேலைக்கான அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் கையில் வருமா?' என்கிற இரண்டு மெகா பெரிய கவலைக் கேள்விகளுக்கு நடுவே ஒவ்வொரு விநாடியும் கரைய, என்னுடைய இதயத் துடிப்பு உச்சத்துக்குப் போயிற்று.

    வீட்டில் அசாத்திய மெளனம். அம்மா மட்டும் எனக்கு ஆதரவாய்ப் பேசினார்.

    "இதோ பார்! மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. உனக்கு அந்த வேலை கிடைக்கணும்னா கண்டிப்பாய் கிடைக்கும். சீக்கிரமா குளிச்சுட்டு பக்கத்தில் இருக்கிற நம்ம ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலுக்குப் போயிட்டு வா. எல்லாம் நல்லபடியாய் நடக்கும்...''

    அம்மா இப்படிச் சொன்னது என்னுடைய மனதுக்கு ஆறுதலாய் இருக்கவே, குளித்துவிட்டு கோயிலுக்குப் புறப்பட்டேன். எட்டு மணி வரை கோயிலில் இருந்து எல்லா தெய்வச் சிலைகளுக்கு முன்பாய் நின்று கண்ணீர் மல்க மனமுருக பிரார்த்தனை செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். வீட்டில் தாத்தா கோப முகத்தோடு காத்திருந்தார். என்னைப் பார்த்தும் கடு கடுத்தார்.

    என்ன…! ஏதாவது தகவல் கிடைச்சதா?

    "இ... இல்ல...''

    ''என்னோட ஃப்ரண்ட், திருப்பியும் எனக்கு போன் பண்ணியிருந்தார். பத்து மணிக்குள்ளே நீ சர்ட்டிபிகேட்ஸோடு ஃபாரஸ்ட் காலேஜ் காம்பஸூக்குள்ளே இருக்கணுமாம்... இல்லேன்னா வேற ஒருத்தருக்கு போஸ்டிங் போட்டுடு வாங்களாம். நீ சாப்பிட்டு சீக்கிரமாய் கிளம்பு. மறுபடியும் ஒரு தடவை போன வழியிலேயே போய்த் தேடிப்பாரு... காணாமே போன சர்ட்டிபிகேட்ஸ் தானா உன்னைத் தேடி வராது. நீதான் போய்த் தேடணும்…!''

    தாத்தாவின் கோபத்திலும் நியாயம் இருந்ததால் காலை உணவை பெயர்க்கு சாப்பிட்டு விட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

    மறுபடியும் அதே கடைகளில் விசாரணை தொடர்ந்தது. ஒரு பலனும் இல்லை. நேரமும் ஒன்பதரை மணியைத் தொட்டுவிடவே, கனத்த இதயத்தோடு வீடு திரும்பினேன். வீட்டில் யாரும் இல்லை. அம்மா மட்டும் சமையலறையில் தெரிய, நான் பெருமூச்சோடு நாற்காலிக்குச் சாய்ந்தேன். அம்மா, நீர் நிரம்பிய டம்ளருடன் எனக்கு முன்னால் வந்து நின்றாள்.

    ''மொதல்ல தண்ணியைக் குடி. நடந்து போனதையே நினைச்சுட்டு இருக்காமே மேற்கொண்டு என்ன பண்ணனுமோ அதைப் பண்ணு. இப்போ உனக்கு வேலை முக்கியம் இல்லை. சர்ட்டிபிகேட்ஸ்தான் முக்கியம். இந்த வேலை கிடைக்கலைன்னா, இன்னொரு வேலை. தாத்தாவுக்கு முன் கோபம் அதிகம். அவர் அப்படித்தான் பேசுவார். நீ இப்போ செய்ய வேண்டிய முதல்வேலை என்ன தெரியுமா?"

    கண்களில் நீரோடு அம்மாவை ஏறிட்டேன்.

    "சொல்லும்மா...!''

    ''உன்னோட சர்ட்டிபிகேட்ஸ் காணாமே போயிட்டதாய் பேப்பர்ல விளம்பரம் குடு...''

    அம்மா சொல்லி முடிக்கவில்லை. வீட்டு வாசலில் குரல் கேட்டது.

    "ஸார்…!''

    நான் திரும்பிப் பார்த்தேன். சைக்கிளோடு ஒரு இளைஞன் தெரிந்தான். வாசலை நோக்கிப் போனேன்.

    ''யாரு?'

    "இங்கே ராஜகோபால்ன்னு யாராவது இருக்காங்களா?''

    ''நான் தான்... ராஜகோபால்.''

    ''நீங்க சர்ட்டிபிகேட்ஸ் எதையாவது தொலைச்சீட்டீங்களா?''

    "ஆ… ஆமா...!'' நான் பதட்டமானேன்.

    "சென்ட்ரல் தியேட்டர்க்கு எதிர்ல ராஜா சலூன்னு ஒரு பார்பர் ஷாப் இருக்கு. அந்தக்கடையில் உங்க சர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் இருக்கு. போய் வாங்கிக்குங்க...'' சாதாரணமாய் ஏற்ற இறக்கத்தோடு அவர் சொல்லிவிட்டுப் போய்விட, நான் என் மணிக்கட்டில் இருந்த வாட்ச்சில் நேரம் பார்த்தேன். மணி 9.45.

    இன்னும் பதினைந்து நிமிடம்தான் இருக்கிறது. நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தேன்.

    ஐந்தே நிமிடம்.

    ராஜா சலூனின் கடை வாசலில் இருந்தேன். புயல் வேகத்தில் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். முடி வெட்டிக்கொண்டு இருந்த அந்த லுங்கி அணிந்த நபர் திரும்ப, நான் படபடத்தேன்.

    ''என்னோட சர்ட்டிபிகேட்ஸ் இங்கே இருக்கிறதா ஒருத்தர் சொல்லிட்டுப் போனார்...''

    "உங்க பேருதான் ராஜகோபாலா?'' சாவதானமாய் மெல்லக் கேட்டார்.

    ''ஆமா..."

    என்னோட கடைக்கு முன்னாடி ஒரு ஃபைல் கிடந்ததாய் சொல்லி யாரோ ஒருத்தர் நேத்து காலையிலேயே குடுத்துட்டு போனார். நான் தான் அதை வாங்கி வெச்சேன் அப்புறம் ஒரு அவசர வேலையாய் பொள்ளாச்சி வரைக்கு போக வேண்டி வந்ததால் நான் கடையைப் பூட்டிட்டு புறப்பட்டுப் போயிட்டேன். இன்னிக்குக் காலையில ஒன்பது மணிக்குத்தான் கடையைத் திறந்தேன். மேஜை ட்ராயரைத் திறந்ததும் ஃபைலைப் பார்த்தேன். உடனடியாய் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் மூலமாய் உங்க வீட்டு அட்ரஸுக்கு தகவல் குடுத்து விட்டேன். இது மாதிரியான ஃபைல்களையெல்லாம் பத்திரமாய் பார்த்துக்க வேண்டாமா தம்பி!

    அவர் சொல்லியபடியே ஃபைலைக் கொடுக்க, நான் அவர்க்கு ஒரு நன்றி சொல்லி, ஃபைலைப் பறிக்காத குறையாய் வாங்கிக்கொண்டு ஃபாரஸ்ட் காலேஜை நோக்கி சைக்கிளைப் பறக்கவிட்டேன்.

    காலேஜின் வளாகத்துக்குள் நான் நுழைந்தபோது நேரம் சரியாய் 10.05 என் இதயத்துடிப்பு உச்சத்துக்குப் போயிற்று.

    "இந்நேரம் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை யாருக்காவது அனுப்பியிருப்பார்களா?''

    ''முதலில் தாத்தாவின் நண்பரைப் பார்க்க வேண்டும்!''

    அட்மினிஷ்ட்ரேஷன் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் தாத்தாவின் நண்பர் பெயரைச் சொல்லி, ''அவர் எங்கே இருக்கிறார்?'' என்று கேட்டேன்.

    அந்த அதிகாரி என்னை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு கேட்டார். அவரை எதுக்காகப் பார்க்கணும்?

    நான் அவரிடம் உண்மையைச் சொல்லாமல் "ஒரு லெட்டரை அவரிடம் கொடுக்க வேண்டும்'' என்ற சொன்னேன்.

    ''இன்னிக்கு அவர் காலேஜுக்கு வரலை. உடம்பு சரியில்லைன்னு அவர் வீட்லேயிருந்து தகவல் வந்தது. நீங்க அவரை வீட்ல போய்ப் பாருங்க...'' அந்த அதிகாரி சொல்லி விட்டு வேலையில் மூழ்கிவிட, நான் சகலமும் இடிந்து போய் வெளியே வந்தேன். மேற்கொண்டு என்ன செய்வது என்ற யோசனையோடு பாதி வராந்தாவைக் கடந்து வந்தபோது எதிரில் நேற்றுப் பார்த்த இண்டர்வ்யூ அதிகாரிகளில் ஒருவரைப் பார்த்தேன். தயக்கமாய் குரல் கொடுத்தேன்.

    "எக்ஸ்க்யூஸ் மீ ஸார்...''

    "எஸ்...!'' என்று சொல்லி என்னைப் பார்த்தவர் நெற்றியைச் சுருக்கினார்.

    "நேத்து ஹொர்பேரியம் கலெக்டர் போஸ்ட்டுக்கு இண்டர்வ்யூ நடந்த போது வந்தீங்கன்னு நினைக்கிறேன்?''

    ''ஆமா... ஸார்..."

    ''சர்டிபிகேட்ஸ் கூட காணோம்ன்னு சொல்லி..."

    "ஆமா.. ஸார்… பட் இப்போ சர்ட்டிபிகேட்ஸ் கிடைச்சுட்டது ஸார்...''

    அவர் மெல்ல சிரித்தார்... ''இன்னிக்கு சர்ட்டிபிகேட்ஸ் கிடைச்சு என்ன பிரயோஜனம்? பத்து நிமிஷத்துக்கு முன்னாடித்தான் ஒருத்தரை செலக்ட் பண்ணினோம்.. மிஸ்டர் ராமதுரை (என் தாத்தாவின் நண்பர் பெயர்) உங்களை செலக்ட் பண்ண ரெக்கமண்ட் செய்து இருந்தார். ஆனா ஒரிஜினல் சர்ட்டிபிகேட்ஸை நீங்க வெரிஃப்கேஷனுக்கு தராத காரணத்தால் இன்னிக்குக் காலையில் பத்து மணி வரைக்கும் பார்த்துட்டு வேற ஒருத்தரை செலக்ட் பண்ணிட்டோம். ஸாரி... பெட்டர்லக்கர் நெக்ஸ்ட் டைம்…!'' அவர் சொல்லிவிட்டு நகர்ந்து போய்விட நான் அப்படியே நின்றேன்.

    என் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே விழுந்த அந்த பேரிடியை தாங்கிக் கொண்டு இயல்பான ஒரு வாழ்க்கைக்கு நான் திரும்ப எனக்கு ஒரு மாத காலம் பிடித்தது. கதாகாலட்சேபம் ஒன்றில் வாரியார் சுவாமிகள் சொன்ன வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக் கொண்டேன்.

    ''கடவுள் எதையும் காரணம் இல்லாமல் செய்வது இல்லை. இது கண்டிப்பாக நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காமல் போய்விடும். இது நடக்காது என்று நினைப்பீர்கள். ஆனால், நடந்து விடும். நடக்காமல் போனதுக்கும் ஒரு காரணம் இருக்கும். நடந்து விட்டதற்கும் ஒரு காரணம் இருக்கும். இதற்காக கடவுளை நிந்தனை செய்யாமல் பொறுமையுடன் இருந்தால் அவன் உங்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுப்பான்!"

    வாரியார் சுவாமிகள் சொன்ன இந்த வரிகளில் அசாத்தியமான நம்பிக்கை வைத்துக்கொண்டு எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சிலிருந்து வரப்போகும் இண்டர்வ்யூ கார்டுகளுக்காகக் காத்திருந்தேன். மூன்று மாதம் வரை ஒரு கார்டு கூட எட்டிப்பார்க்கவில்லை. அதற்குக் காரணம் பி.எஸ்.ஸி பாட்னி ஒரு பட்டப்படிப்பு என்றாலும், அதற்கான வேலை வாய்ப்புகள் குறைவு என்பதுதான். பொழுது பாரமாய் நகர்ந்த போது, அதனுடைய கனத்தைக் குறைத்துக் கொள்ள அப்போது இருந்து வார இதழ்களுக்கு துணுக்குகளையும், ஜோக்குகளையும் எழுதி அனுப்பி வைத்தேன். மாலை முரசு நாளிதழ் தமாஷ் பகுதிக்கு நான் அனுப்பி வைத்த ஜோக்குக்கு ஒரு ரூபாய் பரிசு கிடைத்த போது நண்பர்கள் என்னைப் பாராட்டிவிட்டு 'ஜோக்' எழுதுவதற்குப் பதிலாக மாலை முரசு பத்திரிக்கைக்கு சிறுகதை எழுதி அனுப்பினால் பத்து ரூபாய் பரிசு கிடைக்குமே என்று எனக்கு ஆசை காட்டினார்கள். (1968-ல் பத்து ரூபாய் என்பது இன்றைய ஆயிரம் ரூபாய்க்கு சமம் என்பதை தற்போதைய வாசகர்கள் நினைவு வைத்து கொள்ள வேண்டும்).

    நானும் பத்து ரூபாய் கிடைத்தால் அது நமக்கு பாக்கெட் மணியாய் பயன்படுமே என்ற எண்ணத்தில் 'உன்னை விட மாட்டேன்!' என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி மாலை முரசுக்கு அனுப்பி வைத்தேன் (இதற்கு கல்லூரி ஆண்டு மலரில் ஒரு சிறுகதை எழுதிய அனுபவம் எனக்கு கை கொடுத்தது). கதையை அனுப்பி வைத்த இரண்டே வாரங்களில் மாலை முரசு பத்திரிக்கையில் அந்தக் கதை பிரசுரமாகி எனக்கு பத்து ரூபாயை பரிசாகப் பெற்றுத்தந்தது.

    'அட' பரவாயில்லையே... 'இப்படி எழுதிக் கூட சம்பாதிக்கலாம் போலிருக்கிறதே!' என்று நினைத்து தொடர்ந்து மளமளவென்று ஐந்தாறு சிறுகதைகளை எழுதி அனுப்பி வைத்தேன். ஆனால், அந்தக் கதைகள் பிரசுரமாகவில்லை. அவைகள் எனக்கே திரும்பி வந்தன. இருந்தாலும் சளைக்காமல் கதைகளை எழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன்.

    ஒரு நாள் நான் கதை எழுதிக் கொண்டிருக்கும் போது என்னுடைய தாத்தா அறைக்குள் வந்தார். மரியாதைக்காக எழுந்து நின்றேன்.

    "என்ன பண்ணிட்டிருக்கே?''

    ''க…க…கதை எழுதிட்டிருக்கேன்.''

    ''என்னது... கதையா...? இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா?''

    ஒரு வேலை வெட்டிக்குப் போகாமே இப்படியே கதை எழுதிட்டு இருக்கப் போறியா…?

    "வேலை…கிடைக்கிற வரைக்கும்... பொழுது போகலையேன்னு...'' - தாத்தாவின் குரல் உயர்ந்தது.

    ''இதோ பார்... இந்தக் கதை எழுதறது… பாட்டு எழுதறது இதையெல்லாம் இன்னியோடு நிப்பாட்டிக்கோ. நாளையிலிருந்து நீ ஒரு வேலைக்குப் போகப்போறே...! உனக்காக ஏற்பாடு பண்ணியிருக்கேன்...''

    நான் சந்தோஷமாய் நிமிர்ந்தேன்.

    "எ… எ... என்ன வேலை…?'' என்று தயக்கமாய் கேட்க தாத்தா சொன்னார்.

    அவர் சொன்னதைக் கேட்டு வியர்த்து விறுவிறுத்துப் போனேன்.

    4

    நான் வியர்த்து விதிவிதிர்த்துப் போய் நின்றிருக்க, என்னுடைய தாத்தா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

    ''வேற ஒரு நல்ல வேலை கிடைக்கிற வரை இந்த வேலையைப் பாரு... என்ன... நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கேன். நீ பதில் பேசாமா

    Enjoying the preview?
    Page 1 of 1